search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 2-வது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சோதனை
    X

    சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 2-வது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சோதனை

    சென்னை சைதாப்பேட்டையில் தொழிலதிபர் வீட்டில் நேற்று ஏற்கனவே 82 சிலைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். #IdolWingRaids #PonManickavel
    சென்னை:

    தமிழகம் முழுவதும் பழமையான கோவில்களில் சாமி சிலைகள் கடத்தி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தமிழக போலீசில் ஒரு பிரிவாக செயல்பட்டு வரும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த போதிலும் அந்த துறையின் தலைமை பொறுப்பை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஏற்ற பின்பே சிலை கடத்தல் தொடர்பாக மூடி மறைக்கப்பட்ட தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

    சர்வதேச கடத்தல் மன்னனான ஜெர்மனியைச் சேர்ந்த சுபாஷ் கபூர் முதலில் கைது செய்யப்பட்டார். அவருக்கு துணையாக இருந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபரான தீனதயாளன் சிக்கினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது 2 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த இந்த சோதனையில் 300-க்கும் மேற்பட்ட சிலைகள் சிக்கின.

    தீனதயாளனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தொழில் அதிபர்கள் பலருக்கு விலை உயர்ந்த சாமி சிலைகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. சைதாப்பேட்டை ஸ்ரீநகரில் வசித்து வரும் தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கும் தீனதயாளன் சிலைகளை விற்பனை செய்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் 2016-ம் ஆண்டே போலீசார் சோதனை நடத்தினர்.

    இது தொடர்பாக ரன்வீர்ஷா சில ஆவணங்களை அளித்தார். இதனால் உடனடியாக சிலைகளை மீட்க முடியவில்லை. இதனையடுத்து 2 ஆண்டுகளாக போலீசார் காத்திருந்தனர். கோர்ட்டு அனுமதி பெற்று நேற்று அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். ரன்வீர்ஷாவின் பங்களா வீட்டில் நேற்று காலை 9. 30 மணி அளவில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் நடராஜ், டி.எஸ்.பி. சுந்தரம் மற்றும் போலீஸ் படையினர் புகுந்து சோதனை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரன்வீர்ஷாவின் வீடு கோவிலை போல காட்சி அளித்தது. வீடு முழுவதும் பல்வேறு அறைகளில் கற்சிலைகளும், மெட்டல் சிலைகளும் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

    அசைக்க முடியாத அளவிலான பிரமாண்டமான கல் தூண்களும் இருந்தன. இவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.



    54 கற்சிலைகளும், 16 மெட்டல் சிலைகளும், 21 கல் தூண்களும் இருந்தன. மொத்தம் 91 சிலைகள் மீட்கப்பட்டன. இவைகளில் 54 கற்சிலைகளில் 46 சிலைகளும், 16 மெட்டல் சிலைகளும் நேற்று ரன்வீர்ஷாவின் வீட்டில் இருந்து 5 லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டன.

    5 லாரிகளில் கிரேன் மூலம் ஏற்றப்பட்ட இந்த சிலைகள் அனைத்தும் கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டு உள்ளன.

    21 கல் தூண்களும், 8 கற்சிலைகளும் ரன்வீர்ஷா வீட்டிலேயே இருந்தன. இவைகளை நேற்று இரவு போலீசார் பாதுகாத்தனர். விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று காலையில் 2-வது நாளாக மீண்டும் சோதனை நடத்தப்பட்டது.

    டி.எஸ்.பி. சுந்தரம் தலைமையிலான போலீசார் கற்சிலைகளையும், தூண் களையும் இன்று பறிமுதல் செய்தனர். இவைகளும் கிண்டியில் உள்ள அலுவல கத்துக்கு கொண்டு செல்லப் பட்டன.

    இதன் மொத்த மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என்பதால் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ரன்வீர்ஷாவின் வீட்டில் உள்ள சிலைகளுக்கு சரியான ஆவணங்கள் இருப்பதாக அவரது வக்கீல்கள் கூறியுள்ளனர்.

    இதுபற்றி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் கேட்டபோது, “பழமையான சிலைகளை வாங்குவதும், விற்பனை செய்வதும் சட்ட விரோதமாகும். அதற்கு யாராவது சான்றிதழ் அளித்திருந்தால் அதுவும் சட்டவிரோத செயலாகவே கருதப்படும்” என்றார்.

    ரன்வீர்ஷா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் கோவில்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார்.

    எனவே விசாரணை முடிவில் இந்த சிலைகளின் பின்னணியில் இருக்கும் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சிலைகளை வீட்டில் பதுக்கி வைத்தது தொடர்பாக ரன்வீர்ஷாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளது.

    ரன்வீர்ஷா ஆஜராகும் போது, சிலை கடத்தலின் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட உள்ளது.

    கேரளாவைச் சேர்ந்த சிலை கடத்தல் கும்பல் மூலமாகவும், தீனதயாளனிடம் இருந்தும் இந்த சிலைகளை ரன்வீர்ஷா வாங்கி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் இந்த வழக்கில் தீனதயாளனிடம் மீண்டும் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கேரளாவைச் சேர்ந்த சிலை கடத்தல் கும்பலுக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளது.

    கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் தான் சிலைகள் தொடர்பான அத்தனை வழக்குகளும் நடைபெறுகின்றன. ரன்வீர்ஷாவின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் அனைத்தும் வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) கோர்ட்டில் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதற்காக சென்னையில் இருந்து சுமார் 10 லாரிகளில் இந்த சிலைகளை பாதுகாப்புடன் கொண்டு செல்கிறார்கள்.

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறி, சிலை கடத்தல் வழக்குகளை தமிழக அரசு சி.பி.ஐ.க்கு மாற்றியது. ஆனால் சி.பி.ஐ. இதனை விசாரிக்க மறுத்து விட்டது.

    இந்த நிலையில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையால் சிலை கடத்தல் விவகாரம் மீண்டும் பூதாகரமாகி உள்ளது. #IdolWingRaids #PonManickavel
    Next Story
    ×