search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பை 7 நாட்களுக்குள் இடிக்க உத்தரவு
    X

    கோவையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பை 7 நாட்களுக்குள் இடிக்க உத்தரவு

    கோவையில் நீர்பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து 133 வீடுகள் கொண்டு கட்டிய தனியார் அடுக்குமாடி குடியிருப்பை 7 நாட்களுக்குள் இடிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    கோவை:

    கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை சாலையில் ‘சுருதி என்கிளேவ்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 133 வீடுகள் உள்ளன.

    இந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்கனூரில் இருந்து சிங்காநல்லூர் குளத்துக்கு செல்லும் நீர்பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் புகார் செய்தனர்.

    மேலும் நீர்வழிப்பாதையில் பாலம் கட்டுவதாக கூறி பொதுப்பணித்துறையிடம் இருந்து தடையின்மை சான்று பெற்று தார்சாலை அமைத்தாகவும், கூட்டு குடியிருப்பு கட்டுவதாக கூறி சென்னை நகர ஊரமைப்புத் துறை இயக்ககத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தனர். பின்னர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில் நகர ஊரமைப்புத்துறை இயக்ககத்தின் அனுமதியை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் கட்டட உரிமத்துக்கான மாநகராட்சியின் அனுமதியும் ரத்தானது.

    இதைத்தொடர்ந்து அந்த குடியிருப்பை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் நேற்று நோட்டீசு அளித்துள்ளது. அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள குடியிருப்பை 7 நாட்களுக்குள் இடிக்க வேண்டும். அவ்வாறு இடிக்கவில்லை என்றால் மாநகராட்சி சார்பில் இடிக்கப்பட்டு அதற்கான தொகையை வசூலிக்கப்படும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விதிமீறல் தொடர்பாக சுருதி என்கிளேவில் ஏற்கனவே ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அங்கு சாலை வசதி இல்லாதது, பாசன வாய்க்காலை ஆக்ரமித்து கட்டியது, அனுமதிக்கு மாறாக கட்டியது போன்ற விதிமுறை மீறல்கள் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து டி.டி.சி.பி. அங்கீகாரம், மாநகராட்சி சார்பில் வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டது. எனவே கோவை மாநகராட்சி சட்டம் 296 பிரிவு 2-ன் கீழ் விதிமுறையை மீறி கட்டிடம் கட்டியதால் அதை 7 நாட்களுக்குள் இடிக்க உத்தரவிடப்பட்டு நோட்டீசு வினியோகிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×