search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே தாழ்வான மின்கம்பியால் தடுப்பணை கரை அமைக்கும் பணி பாதிப்பு
    X

    ஊத்துக்கோட்டை அருகே தாழ்வான மின்கம்பியால் தடுப்பணை கரை அமைக்கும் பணி பாதிப்பு

    ஊத்துக்கோட்டை அருகே கரைகள் அமைக்கும் பகுதியில் உயர் அழுத்த மின் கம்பிகள் தாழ்வாக தொங்கி கொண்டிருப்பதால் கரைகள் அமைக்கும் பணிகள் தாமதமாகி உள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பினால் ‌ஷட்டர்கள் வழியாக தண்ணீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்துபடுவது வழக்கம். அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டி, ஆற்றம்பாக்கம், ஒதப்பை, சோமதேவன்பட்டு, கொரகண்தண்டலம், மோவூர், மெய்யூர், செம்பேடு, தாமரைபாக்கம், அனைகட்டு வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது.

    இப்படி தண்ணீர் வீணாக வங்கக்கடலில் கலப்பதை தடுத்து விவசாயிகள் பயன்படும் விதத்திலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்காகவும் தமிழக அரசு ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒதப்பை பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட முடிவு செய்து ரூ. 7 கோடி ஒதுக்கியது.

    இந்த நிதியை கொண்டு 200 மீட்டர் நீளத்துக்கு தடுப்பு அணை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு இரவு பகலாக நடந்து வருகிறது.

    இதுவரை 95 சதவீதப் பணிகள் முடிவு பெற்று தற்போது தடுப்பு அணை பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் இரு புறங்களில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுமார் 20 அடி உயரத்தில் கரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கரைகள் அமைக்கும் பகுதியில் உயர் அழுத்த மின் கம்பிகள் தாழ்வாக தொங்கி கொண்டிருக்கின்றன. இதனால் கரைகள் அமைக்கும் பணிகள் தாமதமாகி உள்ளது.

    இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தாழ்வான உயர் அழுத்த மின் கம்பிகளை சீர் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    மின்வாரிய உயர் அதிகாரிகள் தாழ்வான மின் வயர்களை சீர் செய்ய விரைந்து நடவடிக்கை எடுத்தால் தடுப்பு அணை பணிகள் நிறைவு பெற்று பருவ மழையின் போது நீரை சேமித்து வைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

    Next Story
    ×