search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சியில் விநாயகர் சிலை வைக்க சான்று பெற சிறப்பு முகாம்
    X

    பொள்ளாச்சியில் விநாயகர் சிலை வைக்க சான்று பெற சிறப்பு முகாம்

    விநாயகர் சிலை வைக்க அரசின் சான்று பெறுவதற்கு வசதியாக ஒரே இடத்தில் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்ற சிறப்பு முகாம் பொள்ளாச்சியில் நடைபெற்றது.
    பொள்ளாச்சி:

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட விண்ணப்பிப்பவர்கள் அரசின் பல்வேறு துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். அதற்கு அரசின் 8 விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க பல்வேறு துறை அதிகாரிகள் ஒரே இடத்தில் பங்கேற்ற சிறப்பு முகாம் பொள்ளாச்சி காவலர் குடியிருப்பு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, வால்பாறை டிஎஸ்பி சுப்பிரமணியம், வட்டாட்சியர் செல்வபாண்டி, நகரமைப்பு அலுவலர், மின்வாரிய உதவி செயற்பொறியாளர், தீயணைப்பு அலுவலர், மாசு கட்டுபாட்டு துறை அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது,

    பொள்ளாச்சி வருவாய் கோட்ட பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முக்கிய வீதிகளில் பிரமாண்டமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட முறைப்படி பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். சிலை வைக்கும் இடம் பொது இடமாக இருந்தால் உள்ளாட்சி அமைப்புகளிடமும், நெடுஞ்சாலைத்துறையிடமும், தனிநபர் இடமாக இருந்தால் அதன் உரிமையாளர்களிடமும் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.

    மேலும் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, சிலைகள் வைக்கும்போது ஊர்வலத்தின்போது பட்டாசு மற்றும் வெடிபொருட்களை ஒருபோதும் வெடிக்க மாட்டேன் என தீயணைப்பு துறையினரிடமும், விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டது, மாசு ஏற்படுத்தும் ரசாயன வர்ணம் போன்றவற்றை பயன்படுத்தவில்லை என மாசு கட்டுப்பாட்டு துறையிடமும், பெட்டி வடிவ ஒலி பெருக்கியை குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும், விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடத்திற்கு சட்டத்துக்கு புறம்பாக மின்சாரம் எடுக்க மாட்டேன் என மின்வாரியத்திடமும், அரசியல் மற்றும் சமுதாய தலைவர்கள் சம்பந்தமான பதாகைகள் வைக்க மாட்டேன், ஊர்வலத்தை காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வழிதடங்களில் எடுத்துச் சென்று, அனுமதிக்கப்பட்ட இடத்தில் கரைப்பேன் உள்ளிட்ட உத்திரவுகளை கடைபிடிப்பதாக உறுதி அளிக்கும் விண்ணப்பத்தில் பல்வேறு துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்றுக்கான கையொப்பம் பெற வேண்டும்.

    பொள்ளாச்சி காவல் உட்கோட்டத்தில் 282 சிலைகளும், வால்பாறை உட்கோட்டத்தில் 230 சிலைகளும், கிணத்துக்கடவு பகுதியில் 60 சிலைகளும் என மொத்தம் 572 சிலைகள் வைக்கப்பட உள்ளது. பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் கையொப்பம் பெற்றனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சப்- கலெக்டரின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். சப்-கலெக்டரின் அனுமதிக்கு பின்னர் சிலைகள் வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்,
    Next Story
    ×