search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளைநிலங்கள் வழியாக பெட்ரோல் குழாய் பதிக்க எதிர்ப்பு: வயலில் அமர்ந்து பெண் உண்ணாவிரதம்
    X

    விளைநிலங்கள் வழியாக பெட்ரோல் குழாய் பதிக்க எதிர்ப்பு: வயலில் அமர்ந்து பெண் உண்ணாவிரதம்

    நன்னிலம் அருகே விளைநிலங்கள் வழியாக பெட்ரோல் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து வயலில் அமர்ந்து பெண் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
    நன்னிலம்:

    இந்தியன் ஆயில் நிறுவனம், நாகை மாவட்டம் நரிமணத்தில் இருந்து பெட்ரோலை சுத்திகரித்து இரும்பு குழாய் மூலம் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் வழியாக திருச்சிக்கு விளை நிலங்களில் குழாய் பதித்து எடுத்து செல்ல திட்டமிட்டு கடந்த 2012-ம் ஆண்டு பணியை தொடங்கியது.

    இதற்கு நன்னிலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 10 கிராமங்களை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த பணிகளை தொடங்க இந்தியன் ஆயில் நிறுவனம், விவசாயிகளுக்கு இடையேயான ஆலோசனை கூட்டம் நன்னிலம் தாசில்தார் பரஞ்ஜோதி தலைமையில் கடந்த 3-ந் தேதி நன்னிலத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான விவசாயிகள், விளைநிலங்கள் வழியாக குழாய்கள் பதிப்பதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. என்றபோதிலும் ஒரு சிலர், இந்த ஆண்டு விவசாயம் முடிந்த பின்னர் இதுகுறித்து பரிசீலிக்கலாம் என்றனர்.

    இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி இந்தியன் ஆயில் நிறுவனத்தினர், சொரக்குடியில் உள்ள வயல்களில் இறங்கி அளவீடு செய்தனர். இதனை அறிந்த விவசாயிகள் அங்கு சென்று அந்த பணிகளை தடுக்க முயன்றனர்.

    அப்போது இந்தியன் ஆயில் நிறுவனத்தினர், நாங்கள் பணிகளை தொடங்கவில்லை. அளவீடு மட்டுமே செய்கிறோம் என்று கூறினர். இது தொடர்பாக விவசாயிகளுக்கும், இந்தியன் ஆயில் நிறுவத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்தியன் ஆயில் நிறுவனம் அளவீடு மட்டும் செய்யப்போவதாகவும், பணிகளை இப்போது தொடங்கவில்லை என கூறி வந்த நிலையில், காக்காகோட்டூரில் உள்ள உமாதேவி என்பவரது வயலில், நேரடி நெல் விதைப்பு செய்து ஒரு மாத பயிராக உள்ள வயலில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் பாதுகாப்புடன் இந்தியன் ஆயில் நிறுவனத்தினர், இரும்பு குழாய்களை இறக்கினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உமாதேவி, நேற்று காலையில் தனது வயலுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவர் தனது வயலை பார்த்து விட்டு கூச்சல் போட்டு கதறி அழுதார்.

    எனது நிலத்தில் குழாய்கள் இறக்குவதற்கு என்னிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. என் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். 2 மகன்களுடன் நான் வாழ்ந்து வருகிறேன். இந்த நிலம் தான் எனக்கு சோறு போடுகிறது. இந்த நிலத்தின் வழியாக பெட்ரோல் கொண்டு செல்வதற்கு குழாய் பதித்தால் 18 மீட்டருக்கு வீடு கட்டவும், மரம் நடவும் கூடாது என்று கூறுகின்றனர். எனது மகன்களுக்கு பிற்காலத்தில் நான் இதில் தான் வீடு கட்ட வேண்டும். அதுவரையில் நான் இதில் சாகுபடி செய்து தான் பிழைக்க வேண்டும் என்று கூறி கதறி அழுதார்.

    பின்னர் எனது வயலை விட்டு இந்த குழாய்களை எடுக்கும் வரை நான் என் வயலில் உண்ணாவிரதம் இருக்க போவதாக கூறி அவர் தனது வயலில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

    இந்த போராட்டம் குறித்த தகவல் அறிந்ததும் தாசில்தார் பரஞ்சோதி மற்றும் நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள உமாதேவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து உமாதேவி தனது போராட்டத்தை கைவிட்டார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது. 
    Next Story
    ×