search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியை கட்டமைப்பு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் - லட்சுமிநாராயணன்
    X

    ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியை கட்டமைப்பு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் - லட்சுமிநாராயணன்

    புதுவை அரசு, ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியை வீணாக்காமல் தேவையான அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு உபயோகப்படுத்த வேண்டும் என்று லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. கவர்னர் கிரண்பேடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலாளர் அஸ்வினிகுமார் ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

    ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் கீழ் உள்ள திட்டங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டமானது நகரத்தின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகத்தான்.

    இந்த திட்டத்தின்படி 24 மணி நேரமும் குடிநீர் தடையற்ற மின்சார சப்ளை செய்யப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் தீர்க்கப்பட வேண்டும். தெருக்களில் நாய்கள் மற்றும் கால்நடை நடமாட்டம் இருக்க கூடாது.

    நகர பகுதியில் குப்பை என்பதே இருக்க கூடாது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். இதற்காக ரூ.1,850 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. நகர பகுதி முழுவதும் 100 சதவீதம் கண்காணிப்பு கேமராவின் கீழ் இருக்க வேண்டும்.

    இதற்கிடையே ஸ்மார்ட் சிட்டி வாரிய திட்டமிடுபவர்கள் எல்.இ.டி. விளக்குகள், சி.சி.டி.வி. கேமரா, வைபை போன்றவற்றை புறக்கணித்துள்ளனர். தடையற்ற போக்குவரத்து பழைய ஜெயில் வளாகத்தில் அடுக்குமாடி பார்க்கிங் வசதி செய்யப்பட வேண்டும்.

    வீடுகளில் சூரிய சக்தியை பயன்படுத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பொது போக்குவரத்து வாகனங்கள், குறிப்பாக பஸ், ஆட்டோ, கார், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதவாறு இயக்கப்பட வேண்டும்.

    பழம் பெருமை வாய்ந்த கட்டிடங்களில் இயங்கும் கலவை கல்லூரி மேல்நிலைப்பள்ளி, வ.உ.சி. பள்ளி, பான்சியானா பள்ளி போன்றவற்றின் கட்டிடங்கள் பழுது நீக்கப்பட்டு உயர்தர அடிப்படை வசதி செய்யப்பட்டு ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட வேண்டும். சுனாமி புனரமைப்பு திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பணிகள் பல தோல்வியடைந்துள்ளன. அதிகாரிகளின் திட்டமிடுதலின் அனுபவங்களை கடந்த கால நிகழ்வுகள் நமக்கு உணர்த்தி உள்ளன.

    எனவே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அழகுபடுத்துதல் என்பது 2-வது கட்டம்தான். இதனால் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியை அரசு தேவையான அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு உபயோகப்படுத்த வேண்டும். இந்த திட்டத்துக்கான நிதி ஒரு பைசாகூட வீணாக்கப்படக் கூடாது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
    Next Story
    ×