search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 35 பவுன் அபேஸ்
    X

    மதுரையில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 35 பவுன் அபேஸ்

    மதுரையில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 35 பவுன் நகையை இளம்பெண் அபேஸ் செய்தார்.
    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம், மடத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஜெகதா (வயது 65). இவர் உறவினர் திருமணத்திற்காக மதுரை வந்தார்.

    விழாவில் பங்கேற்றுவிட்டு ஊருக்கு செல்வதற்காக ஜெகதா ஆரப்பாளையம் வந்தார். அங்கிருந்து மாட்டுத் தாவணிக்கு செல்ல நகர பஸ்சில் பயணம் செய்தார்.

    அப்போது அவரது அருகே இளம்பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அந்த பெண் சில்லறையை கீழே போட்டுவிட்டதாக கூறி இருக்கைக்கு அடியில் தேடினார். அதன் பிறகு அவர் சிம்மக்கல் நிறுத்தத்தில் இறங்கி சென்றுவிட்டார்.

    பஸ் மாட்டுத்தாவணி சென்றதும் தனது பேக்கை ஜெகதா எடுத்தபோது அது திறந்திருந்தது தெரியவந்தது. அந்த பேக்கில் ஜெகதா வைத்திருந்த நகைப்பை மாயமாகி இருந்தது.

    எனவே பஸ்சில் சில்லறையை தொலைத்து விட்டதாக இருக்கைக்கு அடியில் தேடிய இளம்பெண் தான் நகைப்பையை அபேஸ் செய்திருக்கலாம் என ஜெகதா கருதினார்.

    இது குறித்து அண்ணாநகர் போலீசில் ஜெகதா புகார் செய்தார். அதில், மாயமான பையில் 35 பவுன் நகைகள், ஒரு ஜோடி வெள்ளி வளையல் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறித்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனக்கன்குளம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சுல்தான் பாட்ஷா (39). நேற்றிரவு 12 மணியளவில் காம்ப்ளக்ஸ் பஸ் நிறுத்தத்தில் சுல்தான் பாட்ஷா நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த கரும்பாலை மணிமுத்து (23), மீனாட்சிபுரம் சுப்பிரமணி (36), மேலவாசல் ஆனந்த் (31) ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

    சுல்தான் பாட்ஷா பணம் கொடுக்க மறுத்ததால் அவரது செல்போனை பறித்துக் கொண்டு 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து திடீர்நகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து 3 பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×