search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை ரெயில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்த வசதி இருப்பது தெரியாததால் பயணிகள் அவதி
    X

    கோவை ரெயில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்த வசதி இருப்பது தெரியாததால் பயணிகள் அவதி

    கோவை ரெயில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்த இடவசதி இருந்தும் பயணிகளுக்கு தெரியாததால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ரோட்டின் ஓரத்தில் கார்களை நிறுத்துவதால் நெரிசல் ஏற்படுகிறது
    கோவை:

    கோவை ரெயில் நிலையத்துக்கு தினமும் 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. இதனால் இங்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகம். எனவே பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்தில் இருந்து நடைமேடைக்கு (பிளாட்பாரம்) மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதாக செல்லும் வகையில் தானியங்கி படிக்கட்டு, மின்தூக்கி வசதி இருக்கிறது.

    அதுபோன்று ரெயில் நிலையம் அருகே பல அடுக்கு வாகன நிறுத்தும் இடம் (மல்டிலெவல் பார்க்கிங்) கட்டும் பணியும் நடந்து வருகிறது. மேலும் இந்த ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் கார்களை நிறுத்தும் வசதி இருந்தது. அங்கு திடீரென்று வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுபோன்று ரெயில் நிலையத்தின் பின்பகுதியில் உள்ள நுழைவு வாசலில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி இருக்கிறது.

    ஆனால் அந்த வசதி வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு தெரிவது இல்லை. அத்துடன் அது குறித்த அறிவிப்பு பலகையும் ரெயில் நிலைய முன்பகுதியில் வைக்கப்பட வில்லை. இதனால் இங்கு கார்களில் வருபவர்கள் தங்கள் கார்களை நிறுத்த இடத்தை தேடும் நிலை உள்ளது.

    ஆனால் சிலர் ரெயில் நிலைய முன்பகுதியில் ரோட்டின் ஓரத்தில் கார்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இது குறித்து பயணிகள் நலச்சங்க தலைவர் ஜமீல்அகமது கூறியதாவது:-

    கோவை ரெயில் நிலையம் மூலம் ரெயில்வே நிர்வாகத்துக்கு ஏராளமான வருமானம் கிடைக்கிறது. ஆனால் அங்கு பயணிகளுக்கு செய்யப்பட்டு உள்ள வசதி மிகவும் குறைவு. குறிப்பாக ரெயில் நிலைய முன்பகுதியில் 50 கார்களை நிறுத்த இடவசதி இருந்தது. ஆனால் ரெயில் நிலைய முன்பகுதியை அழகுபடுத்துகிறோம் என்று கூறி ரெயில்வே நிர்வாகம், 24 கார்களை மட்டுமே நிறுத்தக்கூடிய வசதியை செய்து கொடுத்தது.

    ஆனால் இந்த வசதி அமைக்கப்பட்டு 3 மாதங்களுக்கும் மேல் ஆகிறது. ஆனால் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அதுபோன்று ரெயில் நிலைய பின்பகுதியில் உள்ள குட்செட் ரோடு வழியாக சென்றால் 2-வது நுழைவு வாயில் இருக்கிறது. இந்த பகுதியில் 35 கார்களை நிறுத்தும் வசதி இருக்கிறது. இந்த வசதி குறித்து உள்ளூர் பயணிகளுக்கு தெரியும். ஆனால் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு தெரியவாய்ப்பு இல்லை.

    இதனால் அவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடம் தெரியாமல் தேடி அலையும் நிலை உள்ளது. இந்த வசதி குறித்து ரெயில் நிலைய முன்பகுதியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அப்போது தான் அனைத்து பயணிகளுக்கும் தெரியும். அவர்கள் அங்கு சென்று கார்களை நிறுத்துவார்கள். அத்துடன் ரெயில்வே போலீஸ் நிலையம் அருகே இருசக்கர வாகன காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தை வேறு இடத்துக்கு மாற்றினால் அங்கு 30 கார்களை நிறுத்தலாம்.

    இது குறித்து ரெயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து உள்ளோம். ஆனால் இதுவரை அவர்கள் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. அதுபோன்று ரெயில் நிலையம் அருகே ரெயில்வே ஊழியர் ஓய்வு விடுதி உள்ளது. இங்கும் இருசக்கர வாகன காப்பகம் அமைத்தால் 3 ஆயிரம் இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம். ஆனால் அதையும் ரெயில்வே நிர்வாகம் செய்யவில்லை. எனவே முன்பகுதியில் அமைக் கப்பட்டு உள்ள கார்களை நிறுத்தும் வசதியை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×