search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி மரணத்தால் வேதனை - பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் குதித்த தி.மு.க. தொண்டர்
    X

    கருணாநிதி மரணத்தால் வேதனை - பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் குதித்த தி.மு.க. தொண்டர்

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தாங்கிக் கொள்ள முடியாமல் மனமுடைந்த தி.மு.க. தொண்டர் ஒருவர் ஈரோடு அருகே பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் குதித்தார்.
    ஈரோடு:

    ஈரோட்டை அடுத்த பள்ளிபாளையம் அருகே உள்ள வெடியரசாம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 47). தொழிலாளி. தி.மு.க. தொண்டரான இவர் கருணாநிதி இறந்த தகவல் வெளியானது முதல் சோகமாகவே இருந்தார். நேற்று மாலை அவர் அங்குள்ள காவிரி ஆற்றுப்பாலத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    மோட்டார் சைக்கிளை ஒரு பகுதியில் நிறுத்திய அவர் பாலம் வழியாக நடந்து சென்றார். பின்னர் அங்கு ஒரு இடத்தில் அவர் கடும் விரக்தியில் நின்றார்.

    திடீரென அவர் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்தார். மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து சென்று கொண்டிருந்தது.

    அந்த தண்ணீரில் குதித்த செந்திலை ஆற்று வெள்ளம் அடித்து சென்றது. அவர் ஆற்றில் குதித்ததை அந்த பகுதியில் நின்ற சிலரும், வாகனங்களில் சென்றவர்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கும், பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

    தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதாலும், இரவு நேரமாகி விட்டதாலும் செந்தில் என்ன ஆனார்? என தேட முடியாத நிலை ஏற்பட்டது.

    இன்று (9-ந் தேதி) 2-வது நாளாக போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். காவிரி ஆற்றில் குதித்த செந்திலின் கதி என்ன? என்று தெரியவில்லை.

    அவர் ஆற்றில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் ஈரோடு மற்றும் பள்ளிபாளையம் பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×