search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.8½ லட்சத்தை திருப்பிக்கொடுத்த சிவகாசி பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகிறது
    X

    ரூ.8½ லட்சத்தை திருப்பிக்கொடுத்த சிவகாசி பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகிறது

    மனித நேயத்தை மறந்து பணத்திற்கு மட்டுமே மதிப்பு கொடுக்கும் இன்றைய உலகில் ரூ.8½ லட்சம் கைக்கு கிடைத்தும் அதனை உரியவரிடம் சேர்த்து மனித நேயத்தை காப்பாற்றி உள்ளார் சிவகாசி சிவசங்கரி.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள சாட்சியாபுரம் புதுக்காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி சிவசங்கரி (வயது33). இவர் வீட்டிலேயே துணி தைத்து கொடுத்து வருகிறார்.

    அவ்வப்போது சிவகாசி டவுனில் உள்ள ஜவுளிக் கடைகளுக்கு சென்று துணிகளை வாங்கி வருவது வழக்கம். சம்பவத்தன்று சிவசங்கிரி தனது அக்காள் மகள் விக்னேஷ்வரியுடன் (22) ஜவுளிக்கடைக்கு சென்றார்.

    சிவகாசி தெற்கு ரதவீதியில் உள்ள ஒரு கடையில் இருவரும் ஜாக்கெட் பிட் வாங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிவகாசியை சேர்ந்த லெனின் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடை உரிமையாளரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

    வியாபார வி‌ஷயமாக கடை உரிமையாளர் ரூ.8½ லட்சத்தை பேப்பரில் கட்டி லெனின் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்தார். அவரும் மேஜையில் வைத்து விட்டு பேசிக்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் துணி வாங்கிக்கொண்டு இருந்த சிவசங்கரி பில் போடுமாறு ஊழியரிடம் கூறினார்.

    அவர்களும் பில் போட்டு ஜாக்கெட் பிட்டுகளை பேப்பரில் மடித்து சிவசங்கரி கொண்டு வந்திருந்த பையில் வைத்தனர். ஊழியரின் கவனக்குறைவு காரணமாக அருகில் இருந்த ரூ.8½ லட்ச பணக்கட்டையும் சிவசங்கரி பையில் வைத்தனர்.

    இதை அறியாத சிவசங்கரியும் சிறிது நேரத்தில் கடையில் இருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்றார். இதனிடையே பணம் தொலைந்ததை அறிந்த லெனின் கிருஷ்ணமூர்த்தி கடை முழுவதும் தேடி பார்த்தார். ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. எந்த பலனும் இல்லை. இது குறித்து அவர் சிவகாசி போலீசில் புகார் செய்தார்.

    இதற்கிடையில் மாலையில் சிவசங்கரி ஜாக்கெட் பிட்டுகளை தைப்பதற்காக எடுத்தார். அப்போது ஒரு பேப்பர் கட்டில் 2000, 500 ரூபாய் என மொத்தம் ரூ.8½ லட்சம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் தான் ஜாக்கெட் பிட் வாங்கிய ஜவுளிக்கடையில் இருந்து தான் ஊழியர்கள் தவறுதலாக பணத்தை வைத்து இருக்கலாம் என்று கருதி அந்த கடைக்கு சென்று நடந்த விவரத்தை தெரிவித்தார்.

    பணம் கிடைத்ததை கண்டு லெனின் கிருஷ்ண மூர்த்தியும், கடை உரிமையாளரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இளம்பெண் சிவசங்கரியின் நேர்மையை அவர்கள் பாராட்டினர்.

    இதை அறிந்த சிவகாசி போலீசாரும் நேர்மையாக நடந்து கொண்ட சிவசங்கரிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

    பணத்தை மட்டுமே பெரிதாக என்னும் இந்த காலத்தில் தவறுதலாக பையில் இருந்த ரூ.8½ லட்சத்தை நேர்மையுடனும், கண்ணியத்துடனும் திருப்பிக்கொடுத்த சிவசங்கரிக்கு சமூக வலை தளங்களிலும், போன் மூலமாகவும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    இதுகுறித்து சிவசங்கரி கூறுகையில், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நான் தையல் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறேன். உழைத்து சம்பாதித்த பணம் மட்டுமே நமக்கு சொந்தம். மற்றவர்களின் பணம் தேவையில்லை என்று கருதி தவறுதலாக கிடைத்த பணத்தை உடனே திருப்பி கொடுத்துவிட்டேன்.

    அந்த பணம் எனது கையில் இருந்தவரை மனம் மிகுந்த பாரமாக இருந்தது. அதை திருப்பிக்கொடுத்த பிறகுதான் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது என்றார். #Tamilnews

    Next Story
    ×