search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமியார் திட்டியதால் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை
    X

    மாமியார் திட்டியதால் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை

    அரியலூரில் மாமியார் திட்டியதால் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் செவுடு கிராமத்தை சேர்ந்தவர் தலரா (வயது 25). இவரது மனைவி ரம்கோ (22). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இவர்கள் அரியலூரில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்து தொழில் செய்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்றுக் காலை ரம்கோவுக்கு, ராஜஸ்தானில் இருந்து அவரது மாமியார் போன் செய்த போது, அவர் தூங்கி கொண்டிருந்ததால் போனை எடுக்கவில்லை. பின்னர் மீண்டும் போன் செய்த போது ரம்கோ எடுத்து பேசினார்.

    அப்போது அவரது மாமியார், ஏன் நீண்ட நேரமாக போனை எடுக்கவில்லை என்று தட்டிக்கேட்டதோடு, 8 மணி வரை தூங்கி கொண்டிருந்தால் எப்படி வியாபாரத்தை பார்க்க முடியும் என்று திட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் அவரது கணவர் தலராவிடம் கூறியபோது, வயதாகி விட்டதால் அப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் கூறியதை கண்டு கொள்ள வேண்டாம் என்று சமாதானப்படுத்தியுள்ளார். இருப்பினும் ரம்கோ மிகவும் மனமுடைந்தநிலையிலேயே இருந்துள்ளார். இதனிடையே தலரா வியாபாரத்திற்காக கடைக்கு சென்றுவிட்டார். மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்தபோது, வீட்டில் ரம்கோவை காணவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் அரியலூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக அரியலூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது ரம்கோ என தெரியவந்தது.

    இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு வைத்தனர். மேலும் அவர் சென்னை சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. மாமியார் திட்டியதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×