search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோழவரம் முருகன் கோவிலில் மரகத சிலை கொள்ளை - ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி புகார்
    X

    சோழவரம் முருகன் கோவிலில் மரகத சிலை கொள்ளை - ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி புகார்

    சோழவரம் முருகன் கோவிலில் ரூ.2 கோடி மதிப்புள்ள மரகத சிலை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    சோழவரம் அருகே உள்ள பழைய அலமாதி, செங்குன்றம்- திருவள்ளூர் சாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக தங்கவேல் முருகன் கோவில் கட்டப்பட்டது.

    இதன் நிர்வாகியாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவக்குமார் உள்ளார். அவரே கோவிலில் பூஜையும் செய்து வருகிறார்.

    கோவில் கருவறையில் ஒரு அடி உயரத்தில் தங்கவேல் முருகன் மரகத சிலை வைத்து பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சிவக்குமார், இன்று காலை கோவிலுக்கு பூஜைகள் செய்ய வந்தார். அவர் கருவறை கதவை திறந்து வைத்து விட்டு பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டார்.

    கோவில் வளாகத்திற்கு சென்று விட்டு சிவக்குமார் திரும்பி வந்தபோது கருவறையில் இருந்த மரகத முருகன் சிலை மற்றும் ஒரு அடி உயரம் உள்ள வெள்ளி வேலை காணவில்லை. பக்தர்கள் போல் வந்த மர்ம நபர்கள் அவற்றை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து சிவக்குமார் சோழவரம் போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி மற்றும் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    கோவிலில் கண்காணிப்பு கேமிரா இல்லாததால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கொள்ளை போன மரகத சிலையின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும்.

    மர்ம கும்பல் பல நாட்கள் கோவிலை நோட்டமிட்டு இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

    Next Story
    ×