search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ கல்வி சேர்க்கை இணையதளம் 2 நாட்களாக முடக்கம் - மாணவர்கள், பெற்றோர் அவதி
    X

    மருத்துவ கல்வி சேர்க்கை இணையதளம் 2 நாட்களாக முடக்கம் - மாணவர்கள், பெற்றோர் அவதி

    கலந்தாய்வு நாளை தொடங்க உள்ள நிலையில் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை இணையதளம் 2 நாட்களாக முடங்கி இருக்கிறது. இதனால் தகவல்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியாமல் மாணவர்கள்-பெற்றோர் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
    சென்னை:

    மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்க இருக்கிறது. தரவரிசை பட்டியலில் இடம் பிடித்து இருப்பவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்டவர்கள் பார்ப்பதற்கு www.tnmedicalselection.org என்ற இணையதளத்தை மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்து இருந்தது.

    ஆனால் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதில் இருந்து இதுவரை அந்த இணையதளம் சரிவர இயங்கவில்லை. சென்னையில் இருப்பவர்கள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்துக்கு சென்று தரவரிசை பட்டியல் தொடர்பான தகவல்களை பெற்று வருகின்றனர். ஆனால் வெளியூரில் இருப்பவர்கள் எந்த தகவலையும் பெற முடியாமல் திண்டாடி உள்ளனர்.

    கலந்தாய்வு தொடர்பான தகவல்களும் இதே இணையதளத்தில் தான் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

    ஆனால் அந்த இணையதளம் 2 நாட்களாக இயங்காததால், கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இதுகுறித்து சென்னை அண்ணாநகரை சேர்ந்த நடராஜ் கூறியதாவது:-

    என்னுடைய மகள் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று, தரவரிசை பட்டியலிலும் இடம் பிடித்து இருக்கிறார். கலந்தாய்வுக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில் அதுதொடர்பான தகவல் அந்த இணையதளத்தில் தான் பதிவிடுவோம் என்று தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் இதுவரை அந்த இணையதளம் முடங்கி இருக்கிறது.

    மாநில பாடத்திட்டத்தில் படித்து, ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று வருவதே பெரிய விஷயம். அப்படி வந்த எங்களுக்கு மனவேதனையை ஏற்படுத்துவது போல இணையதளம் முடங்கி இருப்பது பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×