search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் பிராந்திய இட ஒதுக்கீட்டால் 50 சதவீத மருத்துவ இடங்களை தட்டி பறிக்கும் காரைக்கால், மாகி
    X

    புதுவையில் பிராந்திய இட ஒதுக்கீட்டால் 50 சதவீத மருத்துவ இடங்களை தட்டி பறிக்கும் காரைக்கால், மாகி

    காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்திய இட ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதால் புதுச்சேரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட உயர் கல்விகளுக்கு சென்டாக் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    அனைத்து படிப்புகளுக்கும் புதுவையில் பிராந்திய ரீதியாக இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்படி காரைக்கால் பிராந்தியத்துக்கு 18 சதவீதமும், மாகிக்கு 4 சதவீதமும், ஏனாமுக்கு 3 சதவீதமும் உள்ளன. புதுவை பிராந்தியத்துக்கென்று தனி இட ஒதுக்கீடு கிடையாது. இந்த இடஒதுக்கீடு சண்முகம் முதல்- அமைச்சராக இருந்த காலத்தில் கொண்டு வரப்பட்டது.

    ஆனால், பிராந்திய இட ஒதுக்கீட்டால் புதுவை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். ஏனென்றால், 3 பிராந்திய மாணவர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டை பெற்றதற்கு பின்பு அவர்கள் மீதம் உள்ள பொது ஒதுக்கீட்டிலும் போட்டியிட முடியும்.

    இதன் காரணமாக அவர்களுக்கு பொது ஒதுக்கீட்டிலும் கணிசமான இடங்கள் சென்றன. இதனால் விகிதாச்சாரப்படி பார்க்கும் போது, புதுவை மாணவர்களை விட மற்ற பிராந்திய மாணவர்களுக்கு அதிக இடங்கள் கிடைத்தன.

    எனவே, இதை எதிர்த்து அப்போதே போராட்டங்கள் நடந்து வந்தன. முழு அடைப்பும் நடத்தப்பட்டது. ஆனாலும், இந்த வி‌ஷயத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் நீட் தேர்வு காரணமாக மருத்துவ மாணவர் இடஒதுக்கீட்டில் இந்த ஆண்டு புதுவை மாணவர்கள் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    காரைக்கால், மாகி, ஏனாமில் அதிக அளவில் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நீட் தேர்வை பொருத்த வரை சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே முதன்மை இடங்களை பிடிக்க முடியும் என்ற நிலை உள்ளது.

    காரைக்கால், மாகி, ஏனாமில் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அதிகமாக இருப்பதால் அந்த மாணவர்களே நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று தர வரிசையில் முன்னணியில் உள்ளனர்.

    புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் 105 மருத்துவ இடங்கள் உள்ளன. இதில், 3 பிராந்தியங்களையும் சேர்த்து 25 சதவீதம் இடங்கள் அங்கு சென்றுவிடும்.

    அதன்படி 26 இடங்கள் வரை அந்த 3 பிராந்திய மாணவர்களுக்கு கிடைக்கும். மேலும் தரவரிசை ரீதியில் 3 பிராந்திய மாணவர்களே முன்னணியில் இருப்பதால் மீதம் உள்ள 79 பொது இடங்களிலும் 25 இடங்கள் வரை 3 பிராந்திய மாணவர்களுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு பார்த்தால் 50 இடங்களுக்கு மேல் பிராந்திய மாணவர்களுக்கு சென்றுவிடும். மீதம் உள்ள இடங்கள்தான் புதுவை பிராந்திய மாணவர்களுக்கு கிடைக்கும்.

    அதாவது மொத்தம் உள்ள மருத்துவ இடங்களில் சரிபாதி இடங்கள் பிராந்திய மாணவர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    புதுவை மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 12 லட்சம். இதில், காரைக்கால், மாகி, ஏனாமில் 3 லட்சம் பேர் வசிக்கின்றனர். மீதி 9 லட்சம் பேர் புதுவையில் வசிக்கின்றனர்.

    மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும் போது புதுவை பிராந்தியத்தின் மக்கள் தொகையில் 3-ல் ஒரு பங்கு மக்களே காரைக்கால், மாகி, ஏனாமில் வசிக்கின்றனர்.

    ஆனால், பிராந்திய இட ஒதுக்கீடு காரணமாக சரி பாதி மருத்துவ இடங்களை அந்த பிராந்திய மாணவர்கள் கைப்பற்றும் நிலை உள்ளது.

    இதே போல் பல் மருத்துவ கல்லூரி, விவசாய கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி இடஒதுக்கீட்டிலும் புதுவை மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
    Next Story
    ×