search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

    கரூரில் உள்ள கடைகள்- நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவ- மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
    கரூர்:

    குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவதை தடுப்பது குறித்தும், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை தடுக்கும் பொருட்டும் கரூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது. அப்போது குழந்தை தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு கல்வி வழங்க துணை புரிவோம். குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுக்க பாடுபடுவோம் என கலெக்டர் அன்பழகன் தலைமையில் மாணவ- மாணவிகள் உள்ளிட்டோர் உறுதிமொழியேற்றனர். பின்னர் அங்கிருந்த போர்டில் கையெழுத்திட்டு அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலமானது வடக்கு பிரதட்சணம் ரோடு, மேற்கு பிரதட்சணம் ரோடு, காமாட்சி அம்மன் கோவில் வழியாக கரூர் பஸ் நிலையத்தை அடைந்தது.



    இதற்கிடையே முக்கிய வீதியிலுள்ள கடைகள், நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் இங்கு குழந்தை தொழிலாளர்கள் எவரும் பணியமர்த்தப்படவில்லை என்கிற ஒட்டு வில்லைகளை ஒட்டினர். பொதுமக்களிடையே துண்டு பிரசுரமும் வினியோகிக்கப்பட்டது. மாணவ- மாணவிகள் பேண்டு வாத்திய இசை கருவிகளை முழங்கியபடியே ஊர்வலத்தில் வீறுநடை போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குழந்தை தொழிலாளர்களின் வியர்வை துளிகள், பாரத தாயின் கண்ணீர் துளிகள், குழந்தை தொழிலாளர்களை பள்ளிக்கு படையெடுக்க வைப்போம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடியே மாணவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலமானது கரூர் பஸ் நிலையத்தினை கடந்து ஜவகர்பஜார் வழியாக சென்று சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி அன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக அனு சரிக்கப்பட்டு வருகிறது. குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்துவது உள்ளிட்டவற்றால் சட்டங்களை மீறுவோருக்கு ரூ.50,000 அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனையும், 2-ம் முறையாக மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பாதுகாவலர் அல்லது பெற்றோர்களுக்கும் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறினார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அரசு அலுவலர்கள், பணியாளர்களைக்கொண்டு குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி கலெக்டர் தலைமையில் ஏற்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, நகராட்சி ஆணையர் அசோக்குமார், மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி, வட்டாட்சியர் கலியமூர்த்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×