search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியாத்தத்தில் ஸ்டெர்லைட் அதிகாரி உள்பட 5 வீடுகளில் 93 பவுன் நகை-பணம் கொள்ளை
    X

    குடியாத்தத்தில் ஸ்டெர்லைட் அதிகாரி உள்பட 5 வீடுகளில் 93 பவுன் நகை-பணம் கொள்ளை

    குடியாத்தம் பகுதியில் ஒரே நாளில் ஸ்டெர்லைட் அதிகாரி வீடு உள்பட 5 வீடுகளில் 93 பவுன் நகைகள், லட்சணக்கில் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்தனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் பகுதி காமாட்சி அம்மன் பேட்டை பவளக்காரத் தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன். இறந்து விட்டார். இவரது மனைவி திலகவதி (வயது 68). இவர்களுக்கு கதிரவன், பாண்டியன் என 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    கதிரவன், ஆடிட்டராக உள்ளார். இவரது தம்பி பாண்டியன், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மகன்கள் தொழில் ரீதியாக வெளியூர்களில் இருப்பதால், மூதாட்டி திலகவதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில், கண் பரிசோதனைக்காக மூதாட்டி திலகவதி நேற்று வீட்டை பூட்டி விட்டு வேலூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு நேற்று சென்றார். இதையறிந்த கொள்ளை கும்பல் நள்ளிரவு கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த சுமார் 75 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம், வெளிநாட்டு கரன்சி பணம் உள்ளிட்டவற்றை அள்ளிக் கொண்டு தப்பிச் சென்றனர்.

    குடியாத்தம் பிச்சனூர் நரி முருகப்ப முதலி தெருவை சேர்ந்தவர் முகேஷ் (வயது 45). திருமண மண்டபத்தில் வேலை செய்கிறோர். இவரது வீட்டில் நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள், 2½ பவுன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் பணத்தை தூக்கிச் சென்றனர்.

    குடியாத்தம் தரணம் பேட்டை காய்கறி பஜாரில் ஜாவித் அகம்மது என்பவர் வெங்காயம் மற்றும் பூண்டு மொத்த வியாபார கடை வைத்துள்ளார். இவர், அந்த பகுதி காய்கறி வியாபாரிகள் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார். நேற்றிரவு இவரது கடையின் பூட்டை உடைத்து கல்லா பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

    குடியாத்தம் அருகே உள்ள போடி பேட்டை வசந்தம் நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 30). நகை தொழிலாளி. இவர் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

    வீட்டில் ஆளில்லாததை தெரிந்துக் கொண்ட திருட்டு கும்பல், பின்பக்கமாக புகுந்து கதவின் பூட்டை உடைத்தனர். உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், 1 வெள்ளி கொலுசு ஜோடி, ரூ.4 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    போடிபேட்டை பகுதியில் உள்ள மற்றொரு வீட்டுக்குள் நள்ளிரவில் கொள்ளை கும்பல் எட்டி குதித்தனர். சத்தம் கேட்டு வீட்டு உரிமை யாளர்கள் வெளியே உள்ள லைட்டை போட்டனர். லைட் வெளிச்சத்தால், கொள்ளை கும்பல் திபுதிபுவென தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    கொள்ளை நடந்த ஸ்டெ ர்லைட் அதிகாரி உள்பட 4 வீடுகள் மற்றும் கொள்ளை முயற்சி நடந்த வீடு என 5 சம்பவங்களும், குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்குட்பட்டது.

    இன்ஸ்பெக்டர் இருதயராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கமலக் கண்ணன் மற்றும் போலீசார் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    மேலும், இந்த 5 கொள்ளை சம்பவங்களிலும் ஒரே கொள்ளை கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். திருட்டு நடந்த வீடுகள் இருக்கும் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் 2 பேரின் காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த துணிக கொள்ளை சம்பவம் குடியாத்தம்ற மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×