search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக சிறையில் இருந்த வீரப்பன் கூட்டாளி மரணம்
    X

    கர்நாடக சிறையில் இருந்த வீரப்பன் கூட்டாளி மரணம்

    கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரப்பனின் கூட்டாளி சைமன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். #Veerappan

    மேட்டூர்:

    தமிழக-கர்நாடக எல்லையான பாலாறில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் சுரக்காய் மடுவு என்ற இடத்தில் கடந்த 1993-ம் ஆண்டு வீரப்பன் கூட்டாளிகளால் கன்னி வெடி தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த திடீர் தாக்குதலில் 5 போலீசார், 2 வன ஊழியர்கள், போலீஸ் உளவாளிகள் 17 பேர் என மொத்தம் 24 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். மேலும் அதிரடி படை எஸ்.பி. கோபால கிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

    இது தொடர்பாக தொடர் விசாரணை நடத்திய கர்நாடக போலீசார் வீரப்பன் கூட்டாளிகளான கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஒட்டர்தொட்டியை சேர்ந்த சைமன் (வயது 60), மீசைகார மாதையன், நாகேஷ் உள்பட 4 பேரை தடா வழக்கில் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சைமன் கன்னி வெடி தாக்குதலை நடத்தி விட்டு தப்பி ஓடிய போது காலில் காயம் ஏற்பட்டதால் திருப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது போலீசாரிடம் சிக்கினார்.

    இந்த வழக்கை விசாரித்த கோர்ட் சைமன் உள்பட 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பை அளித்தது. பின்னர் மைசூர் சிறையில் அடைக்கப்பட்ட சைமன் கடந்த 6 மாதமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

    மைசூர் சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சைமனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நிலை மேலும் மோசம் அடைந்ததால் பெங்களூரு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை 4 மணியளவில் சைமன் இறந்தார். அவரது உடல் பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. சைமனுக்கு திருமணம் ஆகாததால் அவரது உறவினரான அன்பரசன் என்பவரிடம் இன்று மாலை அவரது உடல் ஒப்படைக்கப்படுகிறது.

    பின்னர் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்வதற்கான நடவடிக்கையில் உறவினர்கள் இறங்கி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் வீரப்பன் ஆதரவாளர்கள் திரண்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×