search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை திருமங்கலம் உதவி கமி‌ஷனர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை
    X

    சென்னை திருமங்கலம் உதவி கமி‌ஷனர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை

    சென்னை திருமங்கலம் உதவி கமி‌ஷனர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனையில் ரூ.5 லட்சம் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #Vigilancedepartment
    சென்னை:

    சென்னை திருமங்கலம் சரக போலீஸ் உதவி கமி‌ஷனராக இருப்பவர் கமீல்பாட்சா.

    திருமங்கலத்தில் தற்போது புதிய காவல் நிலையம் கட்டப்பட்டு வருவதால் ஜெ.ஜெ.நகர் கிழக்கில் உள்ள காவல் நிலையத்தின் ஒரு பகுதியில் திருமங்கலம் உதவி கமி‌ஷனர் அலுவலகம் உள்ளது. நேற்று இரவு கமீல் பாட்சா அங்கு பணியில் இருந்தார்.

    திருமங்கலம் உதவி கமி‌ஷனர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாகவும், அங்கு லஞ்சப் பணம் வைக்கப்பட்டு இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த அலுவலகத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்தபடி இருந்தனர்.

    நேற்று இரவு அந்த அலுவலகத்துக்கு கட்டிட ஒப்பந்தகாரர் செல்வம் என்பவர் வந்தார். இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அங்கு அதிரடி சோதனை நடத்த முடிவு செய்தனர்.

    நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு லவகுமார் தலைமையில் போலீஸ் படை (சி.சி.-2 அணி) ஒன்று திருமங்கலம் உதவி கமி‌ஷனர் அலுவலகத்துக்குள் நுழைந்தது. அவர்கள் அலுவலகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது உதவி கமி‌ஷனர் கமீல்பாட்சாவின் மேஜையில் ரூ.2.50 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது. அதை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அந்த பணம் எப்படி வந்தது என்று உதவி கமி‌ஷனர் கமீல்பாட்சாவிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதற்கு உதவி கமி‌ஷனரால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது அந்த பணத்தை தனது நண்பர் செல்வம் தந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்த செல்வத்திடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினார்கள். அவர் ரூ.2.58 லட்சம் வைத்திருந்தார்.

    அந்த பணத்தையும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைப்பற்றினார்கள். அவரிடம் விசாரித்தபோது அவராலும் சரியான தகவலை தெரிவிக்க இயலவில்லை.

    கொடுங்கையூரைச் சேர்ந்த செல்வம் கட்டிட ஒப்பந்தக்காரர் ஆவார். நிலப் பிரச்சினை தொடர்பாக அவர் திருமங்கலம் உதவி போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து பேசியதாக தெரிய வந்தது. அப்போதுதான் லஞ்சப் பணம் கைமாறியதாக கூறப்படுகிறது.

    ரூ.5.08 லட்சம் கைப்பற்றியது பற்றி ஜெ.ஜெ.நகர் போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில், “நில பிரச்சினையை தீர்த்து வைக்க இந்தப் பணம் கை மாறியது. மொத்தம் ரூ.8 லட்சம் பேரம் பேசப்பட்டுள்ளது. முதல் தவணை கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்” என்றார்.

    இந்த லஞ்சப் பணம் கைமாறியதில் ஜெ.ஜெ.நகர் கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜனுக்கும் தொடர்பு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தெரிய வந்தது. இவர் உதவி ஆணையாளர் கமீல் பாட்சாவின் சிறப்பு படை பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். அவரிடமும் போலீசார் விசாரித்தனர்.

    உதவி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு உள்ளேயே லஞ்சப்பணம் கைமாறியதால் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். நேற்று இரவு 10.30 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை விசாரணை நடந்தது.

    உதவி போலீஸ் கமி‌ஷனர் கமீல்பாட்சா அந்த பணம் தனது நண்பருக்குரியது என்று தொடர்ந்து கூறியதால் அதற்கு கணக்கு காட்டும்படி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் உத்தரவிட்டனர். 5 மணிக்கு பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    ரூ.5 லட்சம் பணத்துக்கு இன்று மதியத்திற்குள் கணக்கு காட்ட வேண்டும் என்று உதவி போலீஸ் கமி‌ஷனர் காமீல்பாட்சாவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர் கணக்கு காட்டாத பட்சத்தில் அவரை கைது செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    சென்னையில் உதவி போலீஸ் கமி‌ஷனர் ஒருவரே லஞ்சம் வாங்கியதாக சிக்கி இருப்பது காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் உதவி போலீஸ் கமி‌ஷனர் கமீல்பாட்சா சென்னையில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேப்பேரி, கோயம்பேடு காவல் நிலையங்களில் அவர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துள்ளார்.

    ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டபோது இவர் தான் அந்த விசாரணையை மேற்கொண்டார். #Vigilancedepartment
    Next Story
    ×