search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவளக்குப்பத்தில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
    X

    தவளக்குப்பத்தில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி

    தவளக்குப்பத்தில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பாகூர்:

    புதுவை தவளக்குப்பம் ஆஸ்பத்திரி ரோட்டில் சிவசுப்பிரமணிய கோவில் உள்ளது. குடியிருப்புகள் மத்தியில் உள்ள இக்கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலுக்கு தினந்தோறும் அப்பகுதி மக்களும், சுற்று வட்டார பகுதி மக்களும் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணம் செலுத்துவார்கள்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்கள் இந்த கோவிலுக்குள் புகுந்து சாமி கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலியை திருடி சென்றதால் கோவில் நிர்வாகம் கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கோவிலின் உள்ளே வைக்கப்பட்டிருந்த 2 உண்டியலுக்கும் பூட்டு போட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைக்க முயன்றுள்ளனர். 2 உண்டியலில் தலா ஒரு பூட்டை மட்டுமே உடைத்த மர்ம நபர்கள் மற்றொரு பூட்டை அவர்கள் உடைக்க முடியாமல் திரும்பி சென்று விட்டனர்.

    இன்று காலை வழக்கம் போல் பூஜை செய்ய கோவிலுக்கு வந்த அர்ச்சகர் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். கோவில் நிர்வாகிகள் இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்குபதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    இந்த கோவிலில் சமீபத்தில் தான் கருவறையில் முருகருக்கு ரூ.1½ லட்சம் மதிப்பில் வெள்ளி கவசமும், ரூ. 40 ஆயிரம் செலவில் வெள்ளியால் ஆன வேல் சாத்தப்பட்டது. கொள்ளையர்களால் கருவறை பூட்டை உடைக்க முடியாததால் அவைகள் தப்பின. அதே போல பங்குனி உத்தர திருவிழா முடிந்து 2 நாளில் உண்டியலை திறந்து காணிக்கை பணம் எடுக்கப்பட்டு விட்டதால் அவைகளும் கொள்ளையர்களிடம் இருந்து தப்பின.

    Next Story
    ×