search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையில் கொள்ளையடிக்கப்பட்ட 60 கிலோ தங்க நகைகள் வேலூர் அருகே மீட்பு: 5 பேர் தப்பி ஓட்டம்
    X

    நெல்லையில் கொள்ளையடிக்கப்பட்ட 60 கிலோ தங்க நகைகள் வேலூர் அருகே மீட்பு: 5 பேர் தப்பி ஓட்டம்

    நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 60 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.
    சென்னை:

    பாளையங்கோட்டை மகாராஜாநகரை சேர்ந்தவர் பாபு. இவருக்கு சொந்தமான அழகர் ஜூவல்லர்ஸ் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் 3 தளங்களில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான தங்க, வைர, வெள்ளி நகைகள் விற்பனைக்கு உள்ளன. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் ஊழியர்கள் கடையை அடைத்தனர். அதன்பின்னர் நம்பி, சுந்தரம் ஆகிய 2 இரவு காவலர்கள் பணியில் இருந்தனர்.

    இன்று காலையில் கடை உரிமையாளர் பாபு மற்றும் ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது நகைக்கடையின் கதவுகள் உடைக்கப்பட்டு தங்க, வைர நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே மாநகர துணை கமி‌ஷனர் பிரதீப் குமார், கூடுதல் துணை கமி‌ஷனர் இளங்கோ, குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் வரதராஜன், இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    முதற்கட்ட விசாரணையில் நகைக்கடையின் மாடி வழியாக கொள்ளையர்கள் உள்ளே நுழைந்திருப்பது தெரியவந்தது. நகைக்கடையின் அருகில் புதிய கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதில் கட்டப்பட்டுள்ள கம்புகள் வழியாக ஏறி நகைக்கடையின் மாடியை அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த இரும்பு கதவை கியாஸ் வெல்டிங் மூலம் துளையிட்டு ஒவ்வொரு தளமாக வந்து நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்துள்ளனர். அந்த நகைகளின் மொத்த மதிப்பு ரூ.20 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

    கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. நகைக் கடை ஊழியர்களிடமும், அருகில் உள்ள கட்டிடத்தில் வேலை செய்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்நிலையில், பாளையங்கோட்டை அழகர் ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 60 கிலோ தங்க நகைகளும் வேலூர் அருகே மீட்கப்பட்டுள்ளது.

    தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள சித்தூர் கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில், போலீசார் வாகனங்களை சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். காருக்குள் சோதனை செய்தபோது, 60 கிலோ தங்கம் இருந்தது. விசாரணையில் அது நெல்லையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் என்பது தெரியவந்ததும், நெல்லைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதேசமயம், காரில் இருந்து இறங்கி தப்பிய 5 பேரும் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று தலைமறைவாகிவிட்டனர். அவர்களைப் பிடிக்க சுமார் 100 போலீசார் வனப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் கொள்ளையர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காவல்துறையின் தீவிர கண்காணிப்பு காரணமாக, ஒரே நாளில் நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×