search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் யார் ஆட்சியில் தொடங்கப்பட்டது?
    X

    விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் யார் ஆட்சியில் தொடங்கப்பட்டது?

    தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் யார் ஆட்சியில் தொடங்கப்பட்டது? என்பது பற்றி சட்டசபையில் அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காரசாரமாக விவாதித்தனர்.
    சென்னை:

    தமிழக பட்ஜெட் குறித்த எம்.எல்.ஏ.க்களின் விவாதம் சட்டசபையில் நேற்று நடந்தது. தி.மு.க. தரப்பில் திட்டக் குடி எம்.எல்.ஏ. கணேசன் பேசினார். அப்போது அவையில் நடந்த விவாதம் வருமாறு:-

    கணேசன்:- தமிழகத்தில் 140 ஆண்டு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.


    அமைச்சர் உதயகுமார்:- பொத்தாம் பொதுவாகக் கூறக் கூடாது. குடிமராமத்து, தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் அதிகரிப்பு உள்பட பல்வேறு திட்டங்கள் நிவாரணத் தொகுப்பாக அறிவிக்கப்பட்டு உள்ளன. வறட்சிக்கு நிவாரணம் வழங்கிய ஒரே முதல்-அமைச்சர் ஜெயலலிதாதான்.

    தி.மு.க. கொறடா சக்கரபாணி:- 5 ஏக்கர் நிலத்துக்கும் குறைவாக உள்ள விவசாயிகளுக்குத்தான் இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது. நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

    பழனி பகுதிக்கு உட்பட்ட ஆயக்குடி, நெய்க்காரன்பட்டி ஆகிய பகுதிகள் நிவாரணத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. அரசுக்கு அறிக்கை கொடுத்த பிறகு அதில் அந்த 2 ஊர்களையும் சேர்க்க முடியாது என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் கூறுகிறார்.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்:- கலெக்டர் மற்றும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் நானும் சென்று அந்த இடங்களை பார்வையிட்டேன். வறட்சி நிவாரணத்துக்கு எந்த இடமும் விடப்படவில்லை.

    அமைச்சர் உதயகுமார்:- பயிர்க் காப்பீட்டுக்காக மாநில அரசின் பங்குத் தொகையாக ரூ.410 கோடி வழங்கப்பட்டுள்ளது. ரூ.8 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை, காப்பீட்டில் இருந்து இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம்.

    5 ஏக்கர் நிலம் என்ற வரையறை மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டதாகும். முன் உதாரணம் இல்லாத அளவுக்கு முழுமையாக நிவாரணத் தொகுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது.

    கணேசன்:- இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதன் முதலில் கொண்டுவந்தது தி.மு.க. தலைவர் கருணாநிதிதான்.


    அமைச்சர் ஜெயக்குமார்:- எம்.ஜி.ஆர்.தான் அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

    அவை முன்னவர் அமைச்சர் செங்கோட்டையன்:- எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் ஒரு குதிரை சக்தி மின்மோட்டாருக்கு ரூ.25 என்ற குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் தேர்தல் வரும்போது உங்களால் கூறப்பட்ட வார்த்தைதான் இலவச மின்சாரம்.

    அமைச்சர் ஜெயக்குமார்:- சட்டசபையில் ஏற்கனவே இந்த பிரச்சினை பற்றி பலமுறை விவாதிக்கப்பட்டு உள்ளது. நான் அரசு ஆவணங்களையும், அரசாணையையும் காட்டத்தயார். அதற்கு கணேசன் பொறுப்பேற்றால் சரி.

    கணேசன்:- 1989-90-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

    சக்கரபாணி:- மாமரம், தென்னை உள்ளிட்ட தோட்டப் பயிர்களுக்கும் நஷ்டஈடு தரப்படவேண்டும். விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் உள்பட மற்ற கடன்களையும் ரத்து செய்யவேண்டும்.

    கணேசன்:- ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    உணவு அமைச்சர் காமராஜ்:- சிறப்பு வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றுக்கான டெண்டர் 10 மற்றும் 11-ந் தேதிகளில் வெளியிடப்படும் என்று பத்திரிகைகளில் 3-ந் தேதி தகவல் வெளியிடப்பட்டது.

    அதை எதிர்க்கட்சித் தலைவர் பார்த்துவிட்டு, 7-ந் தேதியில் ரேஷன் கடைகளில் சோதனை செய்துவிட்டு போராட்டம் பற்றி அறிவிக்கிறார். எதற்காக இப்படி நடந்துகொள்ள வேண்டும்?

    இவ்வாறு விவாதம் நடந்தது. 
    Next Story
    ×