search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி அ.தி.மு.க. எம்.பி.க்களை புறக்கணித்தது ஏன்?: மு.க.ஸ்டாலின்
    X

    மோடி அ.தி.மு.க. எம்.பி.க்களை புறக்கணித்தது ஏன்?: மு.க.ஸ்டாலின்

    நடிகர்களை சந்திக்கும் மோடி, ஜல்லிக்கட்டு பிரச்சினையில் அ.தி.மு.க. எம்.பி.க்களை புறக்கணித்தது ஏன் என்று மு.க.ஸ்டாலின் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
    சென்னை:

    ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க தவறிய மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    மகிழ்ச்சியோடு பொங்கல் கொண்டாட வேண்டிய நேரத்தில் இந்த போராட்டம் நடக்கிறது.

    ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தோம். ஆனால் அதிர்ச்சியூட்டும் செய்தியாக ஜல்லிக்கட்டு தடையை நீக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. தமிழர்களின் பண்பாட்டுக்கு கலாசாரத்துக்கு ஆபத்தை உருவாக்கும் வகையில் அந்த செய்தி அமைந்துள்ளது.

    வீரத்துக்கு எடுத்துக்காட்டான விளையாட்டு ஜல்லிக்கட்டு என்பதை நாமெல்லாம் தெளிவாக உணர்ந்து கொண்டுள்ளோம். ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு ஆகியும் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை.

    இதற்கு முன்பு தி.மு.க. ஆட்சியின் போது கலைஞர் முதல்-அமைச்சராக இருந்தபோது ஜல்லிக்கட்டு நடத்த இடையூறு ஏற்பட்ட போது சுப்ரீம் கோர்ட்டு அப்போது தடை விதித்தது.

    ஆனால் கலைஞரின் சாதுர்ய வியூகத்தால் சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்தது. இதன்படி தி.மு.க. ஆட்சியில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதால், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாக சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

    ஆனால் இதை மூடி மறைத்து அபாண்டமான குற்றச்சாட்டை தி.மு.க. மீது பா.ஜனதாவின் மத்திய-மந்திரிகளும், அ.தி.மு.க. அமைச்சர்களும் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

    இப்போது ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க அ.தி.மு.க. அரசு முயற்சித்ததா? மோடி தலைமையிலான பா.ஜனதாவினர் தடையை நீக்க முயற்சி எடுத்தார்களா? என்றால் இல்லை.

    நான் தமிழகம் முழுவதும் 234 தொகுதியிலும் நமக்கு நாமே சுற்றுப்பயணம் செய்த போது அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தேன். அப்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வீரர்களுடனும் கலந்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடம் நான் குறிப்பிடும் போது, ‘‘இந்த ஆட்சியாளர்கள் ஜல்லிகட்டை நடத்த முன்வராவிட்டால் தி.மு.க. மிகப்பெரிய போராட்டம் நடத்தும் என்று அறிவித்தேன்.

    இதற்காக கலைஞர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். இந்த சமயத்தில் மத்திய-மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டு நடக்கும், இதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக அறிக்கையும் வெளியிட்டார். அதை ஏற்று உண்ணாவிரதம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் பொன்.ராதாகிருஷ்ணன் இதையே தான் கூறுகிறார். இதுவரை ஜல்லிக்கட்டு நடந்தபாடு இல்லை.

    தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக இளைஞர்கள் மாணவர்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். இன்று நானும் துரைமுருகனும் கடற்கரை சாலையில் வந்த போது இளைஞர்கள் திரளாக மனித சங்கிலியாக நிற்பதை பார்த்தோம்.

    1965-ல் ஆட்சி மாற்றத்துக்கு மொழிப்போர் போராட்டம் எப்படி காரணமாக இருந்ததோ, அதுபோல் இளைஞர்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். பா.ஜனதா மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தான் சொல்கிறார்கள்.

    நேற்று முன்தினம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில் போகியன்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்கப் போகிறது என்றும், திராவிட இயக்கம் இங்கு அழிந்து போய் விடும் என்றார். இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்கும் போது, திராவிட இயக்கத்தை யாராலும் எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று கூறியிருந்தேன்.

    ஜல்லிக்கட்டு தடையை நீக்க இவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இல்லை. முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குடிநீர் கேட்டு ஐதராபாத் சென்றவர் ஜல்லிக்கட்டுக்கு இங்கிருந்து டெல்லிக்கு சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இருக்கலாமே ஏன் இந்த பணியை செய்யவில்லை.

    அ.தி.மு.க. எம்.பி.க்கள் 50 பேரால் பிரதமரை சந்திக்க முடியவில்லை. காவிரி பிரச்சினைக்காக சென்றபோதும் பிரதமர் மோடியை இவர்களால் சந்திக்க முடியவில்லை. இப்போதும் இவர்களால் சந்திக்க முடியவில்லை.

    ஆனால் பிரதமர் மோடி தனக்கு வேண்டியவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களான கவுதம், சோனாலி, சல்மான்கான், அமிர்கான், ரஜினிகாந்த், கரீனா கபூர் போன்றவர்களை சந்திக்கிறார்.

    இவர்களுக்கு தனியாக புகழ் இருக்கலாம் அதனால் சந்திக்கலாம். ஆனால் நமது பண்பாட்டு சின்னமாக உள்ள தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற 50 எம்.பி.க்கள் சந்திக்க வருகிறார்கள் என்றால் அவர்களை சந்திக்க வேண்டாமா? அன்றைய தினத்தில் நேரம் ஒதுக்கி சந்திக்க முடியாவிட்டாலும் கூட மறுநாளோ அல்லது அதற்கு மறுநாளோ நேரம் ஒதுக்கி அவர்களை சந்திக்கலாம் அல்லவா?

    தமிழகத்தில் பிரச்சினை என்று வரும் போது பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதற்கு என்ன காரணம்? இதை கேள்வி கேட்கும் தெம்பு, திராணி அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு இல்லையே.

    ஜல்லிக்கட்டு தடை பிரச்சினைக்கு காரணமாக விலங்கின நல வாரியத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். அதை புதிதாக அமைத்து தமிழகத்தை சேர்ந்தவரை அதில் நியமிக்க வேண்டும்.

    திட்டக் கமி‌ஷனையே டிஸ்மிஸ் செய்தவர்தான் மோடி. விலங்கின வாரியத்தில் உள்ள உறுப்பினர் கூறுகையில், ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழக அரசை கலைக்கலாம் என்று யோசனை கூறியிருக்கிறார். இதற்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்ன பதில் சொல்லப் போகிறார்.

    கடலூரில் மஞ்சு விரட்டு நடத்திய வீரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி உள்ளனர். மதுரை பகுதியில் காளை மாடுகள் வைத்திருப்பவர்களை வீடுகளுக்கு சென்று போலீ ர் மிரட்டி, ஜல்லிக்கட்டு நடத்த மாட்டோம் என்று எழுதித் தருமாறு வற்புறுத்தி வாங்குவதாக செய்தி வருகிறது.

    நாங்கள் கேட்பதெல்லாம் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய-மாநில அரசுகள் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு எத்தனையோ அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதுவரை 659 அவசர சட்டங்களை கொண்டுள்ளது. வாஜ்பாய் ஆட்சியில் 58 அவசர சட்டங்களும், மோடி ஆட்சியில் 22 அவசர சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

    மோடி பிரதமராக பொறுப்பேற்றதும் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் அலுவலக முதன்மை செயலாளரை நியமிக்க அவசர சட்டம் கொண்டு வந்தார். விவசாய நிலங்களை கையகப்படுத்த அவசர சட்டம், இன்சூரன்சில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க அவசர சட்டம் கொண்டு வந்தனர். இப்படி பல்வேறு அவசர சட்டம் கொண்டு வந்தவர்கள் தமிழர்களின் பண்பாட்டு கலாசாரமான ஜல்லிக்கட்டு நடத்த ஏன் அவசர சட்டம் கொண்டு வரக்கூடாது?

    ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆனால் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு வருடம் விலக்கு அளித்து மத்திய அரசு சட்டம் இயற்றியது.

    ஆதார் கார்டு கட்டாயம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. ஆனால் மத்திய அரசு ஆதார் கார்டு அவசியம் என்று இன்றும் இயங்குகிறது.

    பா.ஜனதா பொறுப்பேற்று 3 ஆண்டு ஆகிவிட்டது. இன்னும் ஜல்லிக்கட்டை நடத்த முடியவில்லை. நாளைய தினம் பொங்கல். இடையில் ஒருநாள் தான் உள்ளது. இப்போது கூட நேரம் கடந்து விடவில்லை.

    இந்த ஒரு நாளில் மத்திய அரசு நினைத்தால் நிச்சயம் அவசர சட்டம் கொண்டு வரமுடியும். மோடி அவர்களே உடனே அவசர சட்டம் கொண்டு வாருங்கள், தவறினால் உங்களையும் உங்கள் தலைமையிலான மத்திய அரசையும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

    Next Story
    ×