search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.6 கோடி கொள்ளையில் வடமாநில வாலிபர்களுக்கு தொடர்பு: ரெயில்வே ஊழியர்கள் கொள்ளையர்களுக்கு உதவி?
    X

    ரூ.6 கோடி கொள்ளையில் வடமாநில வாலிபர்களுக்கு தொடர்பு: ரெயில்வே ஊழியர்கள் கொள்ளையர்களுக்கு உதவி?

    சேலத்தில் இருந்து சென்னை வந்த சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்ட ரூ.6 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    சேலத்தில் இருந்து சென்னை வந்த சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்ட ரூ.6 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    2005-ம் ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் மற்றும் கிழிந்த அழுக்கு படிந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு மொத்தமாக அனுப்பி மாற்றிக் கொள்ளும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

    இதன்படி, நேற்று முன் தினம் இரவு 9.45 மணி அளவில் சேலத்தில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் 5 வங்கிகளின் சார்பில் சேகரிக்கப்பட்ட ரூ.342ž கோடி பணம் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சேலத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஒருங்கிணைப்பில் இந்த பணம் அனைத்தும் 226 மரப்பெட்டிகளில் பத்திரமாக அடுக்கி சீல் வைக்கப்பட்டு தனி பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. பயணிகளுடன் வந்த இந்த ரெயிலில் நடுப்பெட்டியாக பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டி பொருத்தப்பட்டிருந்தது. (பெட்டி எண்: எஸ்.ஆர்.08831).

    இதன் அருகில் உள்ள முன்பதிவு பெட்டியில் ரெயில்வே பாதுகாப்புபடை போலீஸ் உதவி கமி‌ஷனர் நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நேற்று அதிகாலை 5 மணிக்கு சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூருக்கு வந்தது. பின்னர் சேத்துப்பட்டில் உள்ள யார்டில் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று பகல் 11 மணிக்கு ரிசர்வ் வங்கி ஊழியர்கள் பணப்பெட்டிகளை பத்திரமாக எடுத்துச் செல்ல சென்றனர். பணம் வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியின் சீலை உடைத்து உள்ளே சென்று பார்த்த போதுதான் ரூ.6 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    500 ரூபாய் பணக்கட்டுகளை குறிவைத்தே கொள்ளையர்கள் மிகவும் துணிச்சலுடன் சினிமா பாணியில் கைவரிசை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

    ரெயிலின் மேற்கூரையில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு மட்டும் துளை போட்டு ரூ.6 கோடி பணத்தை கொள்ளையடித்து விட்டு கொள்ளை கும்பல் தப்பிச் சென்றுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட இந்த பணத்தின் மொத்த எடை 150 கிலோவாகும்.

    கொள்ளையர்கள் பெயர்த்தெடுத்துள்ள ரெயிலின் மேற்கூரையை பார்க்கும்போது, அது அறுத்து எடுக்கப்பட்டது போல தெரியவில்லை. சிறிய உளி, அல்லது டிரிலிங் மிஷின் (துளைபோடும் எந்திரம்) மூலமாகவே, மேற்கூரையில் கொள்ளையர்கள் ஓட்டை போட்டுள்ளனர்.

    இந்த ஓட்டை வழியாக உள்ளே இறங்கிய போதோ அல்லது வெளியில் வரும் போதோ கொள்ளையன் ஒருவனுக்கு உடலில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. ரெயில்பெட்டியில் படிந்திருந்த அந்த ரத்தக்கறையை போலீசார் முக்கிய தடயமாக சேகரித்து வைத்துள்ளனர்.

    தமிழகத்தில் ரெயிலில் இதற்கு முன்னர் பல்வேறு கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. ஓடும் ரெயிலில் பயணிகளை மிரட்டி செயின், பணத்தை பறிப்பது, சிக்னலில் காட்டுப்பகுதியில் ரெயில் நிற்கும்போது, வழிப்பறியில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களே நடைபெற்றுள்ளன.

    ரெயிலில் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் பணத்தை குறிவைத்து இதுவரை கொள்ளையர்கள் யாரும் கைவரிசை காட்டியதில்லை. முதல் முறையாக நடந்துள்ள இத்துணிகர கொள்ளை சம்பவம் தமிழக ரெயில்வே பாதுகாப்பில் கரும்புள்ளியாகவே விழுந்துள்ளது.

    ஓடும் ரெயிலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் கொள்ளையர்கள் யாரும் தமிழகத்தில் இல்லை. வடமாநில கொள்ளையர்களே, இதுபோன்ற ஆபத்தான, கொள்ளை சம்பவங்களில் துணிச்சலாக ஈடுபடுவார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், சென்னையில் வங்கிகளில் துப்பாக்கி முனையில் பீகார் கொள்ளையர்கள் 5 பேர் தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தினர்.

    அதன்பின்னரே அது போன்ற பயமுறுத்தும் வகையிலான கொள்ளை சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இச்சம்பவத்துக்கு பின்னர் தமிழகத்துக்கு வரும் வடமாநிலத்தவர்கள் கண்காணிக்கப்பட்டனர். ஆனால் அது காலப்போக்கில் மறைந்து போனது.

    வடமாநிலங்களை சேர்ந்த வாலிபர்கள், சென்னையில் தங்கி இருந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையை பொறுத்தவரையில் வட மாநில தொழிலாளர்களே அனைத்து துறைகளிலும் நிரம்பி வழிகின்றனர்.

    இதுபோன்று தொழிலாளர்கள் போர்வையில் சேலத்தில் பதுங்கி இருந்த வடமாநில கொள்ளையர்களே இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் ரெயிலின் மேற்கூரையில் அமர்ந்து சர்வ சாதாரணமாக பயணம் செய்வார்கள். ஓடும் ரெயிலில் எந்த பிடிமானமும் இல்லாமல் பயணம் செய்வது என்பது அவர்களுக்கு கைவந்த கலையாகும்.

    எனவே ரெயிலின் மேற்கூரையை உடைத்து வடமாநிலத்தவர்களே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் போலீசாருக்கு பலமாக ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய விசாரணையில் ரெயில்வே போலீசார் இறங்கியுள்ளனர்.

    சேலத்துக்கும், விருத்தாசலத்துக்கும் இடையிலேயே கொள்ளை சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்று போலீசார் உறுதியாக நம்புகிறார்கள். இருப்பினும் எந்த இடத்தில் வைத்து கொள்ளையர்கள் கட்டு கட்டாக கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மூட்டை கட்டி எப்படி எடுத்துச் சென்றனர்? கொள்ளையில் ஈடுபட்டது எத்தனை பேர்? என்கிற எந்த விவரங்களையும் போலீசாரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ரூ.6 கோடி கொள்ளையில் எந்தவித துப்பும் துலங்காமல் மர்மம் நீடிக்கிறது.

    திட்டம் போட்டு 5 பேர் வரை கூட்டாக சேர்ந்து இக்கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் சொல்கிறார்கள்.

    ரெயிலில் இவ்வளவு பெரிய தொகையை எடுத்துச் செல்லும் போது, அதனை எப்போதும் ரகசியமாகவே வைத்திருப்பது வழக்கமான நடைமுறையாகும். ரெயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் மட்டுமே இந்த வி‌ஷயங்கள் தெரிந்திருக்கும்.

    இந்த ரகசியத்தை கொள்ளையர்கள் கண்டுபிடிக்கும் அளவுக்கு யாரோ கசிய விட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இக்கொள்ளை சம்பவத்தில் ரெயில்வே ஊழியர்கள் சிலருக்கு தொடர்பு இருக்கலாமோ? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. இது தொடர்பான விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    எழும்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை மண்டல கமி‌ஷனர் அஷ்ரப் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    மாநில ரெயில்வே போலீசாரும் ஐ.ஜி.ராம சுப்பிரமணி தலைமையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். டி.ஐ.ஜி. பாஸ்கரன், சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 8 தனிப்படையினர், கொள்ளையர்களை தேடிக் கண்டு பிடிக்கும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சி ரெயில்வே எஸ்.பி. ஆனிவிஜயா தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் நேற்று சேலத்திற்கு சென்று ரெயில் நிலைய ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். பிறகு அவர் கூறியதாவது:-

    சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட வங்கிகளின் பணம் ரெயில்களில் சரக்கு ஏற்றி செல்லும் தனி பெட்டிகளில் அடைத்து வைத்து கொண்டு செல்லப்பட்டது.

    இந்த ரெயில் பெட்டி 10 நாட்களுக்கும் மேலாக ஈரோடு ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த பெட்டியின் மூலம் அடிக்கடி அதிக அளவில் பணம் கொண்டு செல்வது ஊழியர்களுக்கு நன்றாக தெரிந்துள்ளது.

    இதனால் அந்த பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் ரெயில் நிலையம் அருகில் உள்ள லேத் பட்டறை ஊழியர்கள் உதவியுடன் ரெயில் நிலைய ஊழியர்கள் ரெயில் பெட்டியின் மேற்கூரையை அறுத்து தொடுக்கில் வைத்து விட்டு அதனை நைசாக மூடி வைத்திருக்கலாம்.

    அதன் பின்னர் சேலத்தில் பணத்தை ஏற்றி கொண்டு ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்ற போது நடுவழியில் சிக்னலுக்காக ரெயில் நின்ற போது ரெயிலில் ஏறிய மர்மநபர்கள் மேற்கூரை அறுக்கப்பட்ட இடத்தில் இருந்த அந்த தகரத்தை அகற்றி விட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

    அல்லது ரெயில்வே ஊழியர்கள் உதவியுடன் ரெயில் பெட்டிக்குள் அமர்ந்தும் இந்த சதி செயலில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருக்கலாமா?என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் இந்த 2 கோணத்திலும் தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனால் ஈரோடு ரெயில் நிலைய ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ள லேத்பட்டறை ஊழியர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாளில் இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் பிடிபடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×