search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களே கோடீஸ்வரர் ஆக விரும்புகிறீர்களா?
    X

    பெண்களே கோடீஸ்வரர் ஆக விரும்புகிறீர்களா?

    கோடீஸ்வரர் நிலையை நோக்கி முன்னேற வேண்டும் என்றால், சில விஷயங்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்கிறார்கள், நிதி ஆலோசனை நிபுணர்கள்.
    ‘கோடீஸ்வரர்’ ஆக வேண்டும் என்று யாருக்குத்தான் விருப்பமில்லை?

    ஆனால், படிப்படியாக கோடீஸ்வரர் நிலையை நோக்கி முன்னேற வேண்டும் என்றால், சில விஷயங்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்கிறார்கள், நிதி ஆலோசனை நிபுணர்கள்.

    அவை பற்றி...

    * ‘எனக்கு இப்போதே வேண்டும்’ என்ற ஆசை தூண்டுதலை உங்களால் கடக்க முடிந்தால், நிதி நிர்வாகத்தில் பெரிய திறமை பெற்றவராகிவிடுவீர்கள். உடனடி மனநிறைவு என்பது குறுகிய காலத்துக்கு விலைமதிப்பில்லாததாகத் தெரிந்தாலும், அதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் நாளடைவில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் நெருக்கடியான காலத்தில் உதவும். அதை நீங்கள் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் உங்களின் சொத்து மதிப்பும் உயரும்.

    * நீங்கள் உங்கள் பணியில் சிறந்தவராக மாறப் போதுமான அளவு நேரத்தை ஒதுக்கினீர்கள் என்றால், உங்களின் வருமானம் ஈட்டும் திறனும் கண்டிப்பாக அதிகரிக்கும். விருப்பமானவற்றை அயராது இடைவிடாமல் செய்வதன் மூலம், சந்தேகங்கள், போராட்டங்கள், நிராகரிப்பு இன்றி சிறப்பான பலன்களைப் பெறமுடியும். எல்லோரையும் போல நாமும் பணி செய்வதைக் காட்டிலும், செய்வதை சிறப்பாகச் செய்தால், அதற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்.

    * குறைந்த பட்ஜெட்டிலும் உங்களால் சீரான வாழ்க்கை வாழ முடியுமா என்று முயன்று பாருங்கள். பணத்தைச் செலவழிக்கும்போது சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பீர்களா? உங்கள் தேவைகளுக்காக முன்கூட்டியே பணத்தைச் சேர்த்து வைக்கிறீர்களா? கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தைத் தேவைக்கும் விருப்பத்துக்கும் இடையில் வைப்பது அவரவர் முடிவு. நாம் நினைப்பதற்கு மாறாக பணக்காரர்கள் பலரும் எளிய வாழ்க்கையை விரும்புகிறார்கள். உலகப் பெரும் பணக்காரர்கள் மார்க் சக்கர்பெர்க், வாரன் பப்பெட் போன்றோரைச் சொல்லாம். அவர்கள் ஆடம்பரமற்ற வாழ்க்கையை விரும்புவது, சிக்கன குணத்தால் அல்ல, எளிமை வாழ்க்கையின் சுகத்தை உணர்ந்ததால்தான்.



    * நாம் செலவழிக்கும் முறையானது, நமது நிதிநிலை மற்றும் சொத்துகள் மீது குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தேவையில்லாத செலவுகளைத் தவிர்த்தல், அடிக்கடி வெளியில் சாப்பிடுவதைக் குறைத்தல், தேவையில்லாமல் பல பொருட்களை வாங்கிப் போடுவதைத் தவிர்த்தல் போன்றவை அதிகப் பணம் சேமிக்க வழிவகுக்கும்.

    * உங்களின் பணத்தைச் சிறப்பாக ஒதுக்கீடு செய்யும் சரியான திட்டத்தின் மூலம்தான் பணக்காரர் ஆவதற்கான பாதை துவங்குகிறது. நல்ல பொருளாதார அடித்தளத்துக்கான முதல் அடி, சிறந்த நிதித் திட்டமிடல்தான். ஒவ்வொரு செலவையும் வகைப்படுத்துதல், உங்களின் தேவைகளுக்கான செலவுகளை மாதாமாதம் மதிப்பிடுதல் போன்றவை குறைவாகச் செலவு செய்ய வைத்து அதிகமாகச் சேமிக்க வழிவகுக்கும். உங்களின் வருமானம் மற்றும் செலவுகள் பற்றிய தெளிவான பார்வை உங்களுக்கு ஏற்கனவே இருந்தால், நிதித் திட்டமிடலில் வராத தேவையில்லாத செலவுகளைக் குறைப்பது எளிதாக இருக்கும்.

    * பணக்காரராக இருப்பது என்பது ஒருவருடைய திறன் அல்லது அதிர்ஷ்டம் அல்லது வாரிசு உரிமை போன்றவற்றைப் பொறுத்ததல்ல. ஆனால் செல்வச் செழிப்பு இல்லாமல் இருப்பவர்கள் ஏன் பெரும்பாலும் முதலீட்டாளர்களாக இல்லாமல் இருக்கிறார்கள் என்பது யோசிக்க வேண்டிய விஷயம். முதலீடு செய்வதற்கு அதிகளவு பணம் தேவைப்படும் என்றே நாம் நினைப்போம். ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக, சிறுதுளிகள் ஒன்று சேர்ந்து பேராறாக உருவாவது போல, முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்துவரும் சிறிய அளவிலான தொகையும், சரியான சொத்து முதலீடும் விரைவில் உங்களைக் கோடீஸ்வரராக மாற்றும்.

    கோடீஸ்வரர் ஆவது மட்டுமல்ல, அதை நோக்கிய பயணமும் சுகமானதுதான். அலுக்காமல் சலிக்காமல் ஒவ்வொரு படியாக ஏறிக்கொண்டே இருந்தால், கடைசியில் மலை உச்சியை அடைந்து விடலாம்தானே?
    Next Story
    ×