search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களுக்கு தன்னம்பிக்கை அவசியம்
    X

    பெண்களுக்கு தன்னம்பிக்கை அவசியம்

    வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு லட்சியமும், அதை அடைய தன்னம்பிக்கையும் அவசியம்.
    வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைப்பவர்களுக்கு லட்சியமும், அதை அடைய தன்னம்பிக்கையும் அவசியம். தொடர்ந்து முயற்சியும், பயிற்சியும் செய்துக்கொண்டே இருந்தால் லட்சியத்தை அடைய முடியும். தலைவராவது எப்படி என்று காந்திஜிக்கோ, ராணுவம் அமைப்பது எப்படி என்று நேதாஜிக்கோ யாரும் கற்றுக் கொடுக்கவில்லை. அவர்கள் தளராத தன்னம்பிக்கையுடன் சுதந்திரத்துக்காக உழைத்தவர்கள்.

    ஒரு முறை அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எப் கென்னடி தன்னை காண வந்த பார்வையாளர்களில் இருந்த மாணவன் ஒருவனின் கன்னத்தை தட்டி உன்னுடைய எதிர்கால லட்சியம் என்னவென்று கேட்டார். அந்த மாணவன் தயக்கமின்றி, ‘இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம்’ என்றான். அதே போல பிற்காலத்தில் அந்த இடத்தை பிடித்து அமெரிக்க ஜனாதிபதியாகி அசத்தினான். அந்த வேறு யாருமில்லை, பில் கிளிண்டன் தான்.

    வாழ்க்கையில் உண்டாகும் அவமதிப்பு, அலட்சியம், அவமானம் இவையெல்லாம் நம்முடைய வெற்றிக்கான எரிசக்திகள் என்று எடுத்துக் கொண்டால் நம்மை தாழ்த்த நினைப்பவரும் ஒரு நாள் நம்மிடையே நட்புக் கொண்டு நம்முடைய வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்பார்கள்.

    மனிதர்களை மூன்று வகையாக பெரியவர்கள் பிரித்து இருப்பதாக யாரோ சொல்ல கேள்விப்பட்டேன். எல்லோரும் செய்வதையே தானும் செய்து செத்து போகிறவன், யாரும் செய்யாததை தான் செய்து வாழ்ந்து காட்டுகிறவர்கள், எவரும் செய்ய முடியாததைச் செய்து மரணத்தைக் கொல்கிறவர்கள் என்பதுதான் அவை. இவற்றில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை சற்று சிந்தித்து பார்த்து நம் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    மனிதர்களின் வாழ்வில் வெற்றி, தோல்வி என்பது ஏதோ ஓரிரு சம்பவங்களை மட்டும் வைத்து முடிவெடுக்கப்படுவதில்லை. அது நம்முடைய முழுமையான வாழ்க்கையை சார்ந்தது. தற்போது, தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் பற்றி நம் இளைஞர்களிடம் ஒரு நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இது நமக்கும், நாட்டுக்கும் நல்லது.

    -மா.பழனி, கூத்தப்பாடி
    Next Story
    ×