search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்கள் பிரச்சனைகளை மறந்து நிம்மதியடைய புதிய வழி
    X

    பெண்கள் பிரச்சனைகளை மறந்து நிம்மதியடைய புதிய வழி

    நடப்பதெல்லாம் நல்லதாக நடக்கும் என்ற தைரியத்தோடு ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளுங்கள். நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை நிம்மதியின் திறவுகோல்.
    மனஅழுத்தம் என்பது ஒவ்வொருவர் மனதிலும் நிரந்தரமாய் இருக்கை போட்டு அமர்ந்துவிட்டது. அதனால்தான் பெரும்பாலானவர்கள் வீட்டிலும், வேலை பார்க்கும் இடத்திலும் எப்போதும் டென்ஷனாக இருந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் உட்கார்ந்து சாப்பிடக்கூட நேரம் இல்லை என்றும் அங்கலாய்க்கிறார்கள். அதுபோல், ‘மனைவி சரியில்லை. அதனால்தான் நான் மனநிம்மதியின்றி தவிக்கிறேன்’ என்று ஆண்கள் சொல்வதும், ‘கணவரால் நிம்மதியின்றி தவிக்கிறேன்’ என்று பெண்கள் சொல்வதும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

    இப்படிப்பட்ட மனஅழுத்தங்களையும், பிரச்சினைகளையும் மறந்து, எல்லோரும் நிம்மதியாக வாழ வழி இருக்கிறதா?

    இருக்கிறது!

    நிம்மதியடைய நீங்கள் முதலில் உங்கள் அலைபாயும் மனதை கட்டுப்படுத்தவேண்டும்.

    ஒவ்வொன்றுக்கும் பயந்துகொண்டிருக்காமல், ‘நடப்பது நடக்கட்டும். நமது கடமையில் கண்ணுங்கருத்துவமாக இருப்போம்’ என்ற சிந்தனைத் தெளிவுக்கு வரவேண்டும். ஆரோக்கியத்திலும், ஓய்விலும் அதிக கவனத்தை செலுத்தவேண்டும். சத்தான உணவை, அளவோடு, சரியான நேரத்தில் சாப்பிட்டுவிடுங்கள். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கவும் முன்வாருங்கள். நல்ல உணவும், போதுமான தூக்கமும் கிடைத்தால் உங்கள் மனதிற்கு பெருமளவு நிம்மதி கிடைத்துவிடும். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். அது உடலை மட்டுமல்ல, மனதையும் சரி செய்யும். யோகாசனம் செய்வதும் சிறந்தது.

    ஒரே வேலையை தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்காதீர்கள். இடைவேளையை உருவாக்கி அந்த வேலையில் இருந்து சிறிது நேரம் விடுபட்டு, சிறிது தூரம் நடக்கலாம். பாட்டு கேட்கலாம். விளையாடலாம்.

    எப்போதும் உங்கள் பிரச்சினைகளையே நினைத்து வேதனைப்படாமல் மற்ற மனிதர்களை திரும்பிப்பாருங்கள். எப்போதும் வீட்டிற்குள்ளேயோ, அலுவலகத்திற்குள்ளேயோ அடைபட்டுக் கிடக்கவேண்டாம். மாதத்தில் ஒரு நாள் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவுங்கள். மன வளர்ச்சி குன்றியவர்களோடு உங்களின் முடிந்த பொழுதை செலவிடுங்கள்.

    மனது சரியில்லை என்று நினைக்கும்போது, முதல் வேலையாக இளம் சுடுநீரில் ஒரு குளியல் போட்டு புதிய ஆடை உடுத்திவிட்டு ஏதாவது ஒரு பூங்காவை நோக்கி நடையைகட்டுங்கள்.

    கண்ணீர் சிறந்த வலி நிவாரணி. சோகம், துக்கம் உங்களுக்குள் எல்லையற்று இருக்கும்போது சிறிது நேரம் அழலாம் என்று நினைத்தால் அழுதுவிடுங்கள். நம்பகமானவர்கள், தன்னம்பிக்கை தருகிறவர்களை பார்த்து பேசவேண்டும் என்று விரும்பினால் அவர்களைப் போய் பாருங்கள்.

    அழுவதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சிரிப்பதற்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். சில நண்பர்களோடு சேர்ந்து சிரித்து பேசுவது மிகவும் நல்லது.

    இருப்பதில் சிறந்த நண்பர் ஒருவரையும், இருப்பதில் நல்ல உறவினர் ஒருவரையும் தேர்ந்தெடுத்துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் துக்கம், சோகம் போன்றவைகளை எல்லாம் அவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். சில நேரங்களில் உங்களால் யோசிக்க முடியாத அளவுக்கு புதிய விஷயங்களை அவர்கள் சொல்வார்கள். அதன் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.



    தினமும் செக்குமாடு போன்று ஒரே மாதிரி வேலைகளை செய்யாதீர்கள். வாரத்தில் ஒரு நாளாவது உங்கள் வேலை முறையை மாற்றி அமையுங்கள். எல்லா நேரங்களிலும் இயந்திரங் களோடு பொழுதைக்கழிக்காதீர்கள்.

    சினிமாவுக்கு செல்வது, கோவிலுக்கு செல்வது, பயணம் மேற்கொள்வது போன்று, உங்கள் மனதை உற்சாகப் படுத்தும் செயலில் ஈடுபடுங்கள்.

    எல்லோருடைய வாழ்க்கையும் எப்போதும் பிரச்சினைகள் நிறைந்ததாகவே இருக்காது. நினைத்துப்பார்க்க நிறைய நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். பிரச்சினைகள் ஏற்படும்போது அதையே நினைத்து வேதனைப்படாமல், உங்கள் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களையும் நினைத்துப்பாருங்கள். சின்னச்சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடி, உங்களையே நீங்கள் உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள்.

    உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்து, ‘எனக்கு என்ன குறை. நான் அழகாக இருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னால் எல்லாம் முடியும்’ என்ற தன்னம்பிக்கை வார்த்தைகளை உச்சரியுங்கள். அதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களுக்கு சிரிக்கும் முகம் இருந்தால் அது உங்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் பிடிக்கும். அதனால் சிரிக்க பழகுங்கள். கண்ணாடி முன்னால் நின்று சிரித்துப்பார்த்து, உங்கள் முகத்திற்கு எந்த சிரிப்பு பொருத்தமாக இருக்கிறதோ அதை உங்கள் முகத்தோடு எப்போதும் ஒட்டவைத்துக்கொள்ளுங்கள். அந்த சிரிப்பை நீங்கள் அடிக்கடி வெளிப்படுத்தினால், உங்கள் முகமும், அகமும் அழகாகும்.

    பாசிட்டிவ்வான எண்ணங்களை வளர்க்கும் புத்தகங்களை படியுங்கள்.

    கபீன் அடங்கிய காபி, சாக்லேட் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

    பிரச்சினைக்குரியவர்களை தூரத்தில் வையுங்கள். யாரோடு பேசினால் உங்கள் மனம் குழப்பமடையும் என்று நினைக்கிறீர்களோ, அவர்களோடு பேசாதீர்கள்.

    பிரச்சினைகளை கண்டு பயந்து ஓடாமல், அதை தைரியமாக எதிர்கொள்ள பழகுங்கள். எதிர்காலத்தை நினைத்து ஒருபோதும் கவலை கொள்ளாதீர்கள். நடப்பதெல்லாம் நல்லதாக நடக்கும் என்ற தைரியத்தோடு ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளுங்கள். நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை நிம்மதியின் திறவுகோல்.
    Next Story
    ×