search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ‘கார்டு’ உபயோகிப்பதில் கவனம் தேவை
    X

    ‘கார்டு’ உபயோகிப்பதில் கவனம் தேவை

    இன்றைய டிஜிட்டல் உலகில் பணம் செலவு செய்வது, பரிமாற்றம் செய்வது எல்லாம் எந்த அளவு எளிதாக இருக்கின்றனவோ, அதே அளவு அபாயங்களும் அதிகரித்திருக்கின்றன.
    இன்றைய டிஜிட்டல் உலகில் பணம் செலவு செய்வது, பரிமாற்றம் செய்வது எல்லாம் எந்த அளவு எளிதாக இருக்கின்றனவோ, அதே அளவு அபாயங்களும் அதிகரித்திருக்கின்றன.

    சில கில்லாடி கிரிமினல்களால் எங்கிருந்து கொண்டோ நமது பணத்தைச் ‘சுட்டுவிட’ முடிகிறது. குறிப்பாக, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.

    இந்தக் கார்டு உபயோகிப்பாளர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்று பார்க்கலாம்...

    மால்வேர்: மால்வேர் எனப்படும் வைரஸ் மென்பொருட்கள் மூலம் உங்கள் கணினி, செல்போன், ஏன், ஏ.டி.எம்.மில் இருந்துகூட உங்கள் கார்டு பற்றிய தகவல்கள் திருடப்படலாம். ஒரு ஏ.டி.எம்.மில் மால்வேர் செலுத்தப்பட்டிருந்தால், அதில் நீங்கள் கார்டை பயன் படுத்தும்போது உங்கள் கார்டின் தகவல் திருடப்பட்டு, பணத்தை உருவப் பயன்படுத்தப்படும்.

    குளோனிங்: உங்கள் கார்டில் இருந்து தகவல்களைத் திருடி அப்படியே ஒரு போலி கார்டை உருவாக்கிவிடுவதுதான், ‘குளோனிங்’. ‘பி.ஓ.எஸ்.’ எனப்படும் கார்டு மெஷின்களில் உங்கள் கார்டை பயன்படுத்தும்போது இந்தத் தகிடுதத்தம் நடக்க வாய்ப்பிருக்கிறது.

    ஸ்கிம்மிங்: ஏ.டி.எம். மையங்களில் மோசடிப் பேர்வழிகள் ஓர் எந்திரம் அல்லது காமிராவை ரகசியமாகப் பொருத்தி, வாடிக்கையாளர்கள் தங்கள் கார்டை பயன் படுத்தும்போது அதைப் பற்றிய தகவல்கள், ‘பின்’ நம்பரை அறிந்துவிடக்கூடும். அந்தத் தகவல்களைக் கொண்டு நமது பணத்தை சுளையாக சுருட்டிவிடுவார்கள்.



    பிஷிங்: சில சமயங்களில் உங்களுக்கு, உங்கள் வங்கியில் இருந்து அல்லது ரிசர்வ் வங்கியில் இருந்து வருவதைப் போல போலியான மின்னஞ்சல்கள் அனுப்பப்படும். உங்கள் வங்கிக் கணக்கு எண், ஏ.டி.எம். ‘பின்’ நம்பர், ‘கார்டு வெரிபிகேஷன் வேல்யூ’ (சி.வி.வி.) நம்பர் போன்றவற்றை அவை கேட்கும். நீங்களும் அப்பாவியாய் அவற்றை அளித்தால், கூடிய சீக்கிரம் உங்கள் கணக்கில் இருந்து பணம் மாயமாகி இருக்கும்.

    விஷிங், ஸ்மிஷிங்: சில நேரங்களில் ஏமாற்று ஆசாமிகள் உங்களை போனில் அழைத்து, உங்கள் வங்கி அல்லது ரிசர்வ் வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறுவார்கள். உங்களிடம் இருந்து இப்படி வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களைக் கறந்து மோசடிக்கு முயல்வது, ‘விஷிங்’. அதேபோல ‘ஸ்மிஷிங்’கில் ஒரு வங்கி வாடிக்கையாளருக்கு இணையதள லிங்குடன் ஓர் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். அதை ‘கிளிக்’ செய்தால், ஒரு வைரஸ் மென்பொருள் விறுவிறுவென்று டவுன்லோடு ஆகி, நமது விவரங்களை கபளகரம் செய்துவிடும்.

    சரி, இந்த மோசடிகளில் இருந்து எல்லாம் எப்படித் தப்புவது?

    எப்போதும் உங்கள் கிரெடிட், டெபிட் கார்டுகளை கவனமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் பயன்படுத்துங்கள். உங்கள் கார்டுகளில் பணப் பரிமாற்றம், பணம் எடுப்பதற்கு ‘லிமிட்’டை ‘செட்’ செய்துகொள்ளலாம். அதன்மூலம், உங்கள் தகவல் திருடப்பட்டாலும், பாதிப்பு குறையும். இப்படி எல்லையை நிர்ணயித்துக்கொள்ளும் வாய்ப்பை பல வங்கிகள் ‘நெட் பேங்கிங்’ மூலமாகவே வழங்குகின்றன.

    உங்கள் பாஸ்வேர்டு, ‘பின்’ நம்பரை அவ்வப்போது மாற்றவும் மறக்காதீர்கள். உங்கள் வங்கியில் இருந்து, ‘பின்’ நம்பரை மாற்றிக்கொள்ளும்படி தகவல் வந்தால் உடனே மாற்றிக்கொள்ளுங்கள். ஆனால் அதற்கு முன், அத்தகவல் உங்கள் வங்கியில் இருந்துதான் வந்திருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அதேபோல, உங்கள் ‘பின்’ நம்பர், ‘ஓ.டி.பி.’-ஐ யார் எப்போது கேட்டாலும் தெரிவிக்காதீர்கள்.
    Next Story
    ×