search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மஞ்சள் காமாலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
    X

    மஞ்சள் காமாலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

    மஞ்சள் காமாலை எப்படி உருவாகிறது என்பதை புரிந்து கொண்டால் இதற்கான தீர்வு என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    உடல் ரத்தத்தில் மஞ்சள் பித்தம்(பிலிரூபின்) அதிகரிப்பதே மஞ்சள் காமாலை ஆகும். மஞ்சள் காமாலை என்று சொன்னால் மக்களிடையே ஒரு வித பயம் அல்லது பீதி ஏற்பட்டு விடுகிறது. முதலில் இதனை பற்றி மக்களிடையே ஒரு விழிப்புணர்வு வரவேண்டும். மஞ்சள் காமாலை எப்படி உருவாகிறது என்பதை புரிந்து கொண்டால் இதற்கான தீர்வு என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    மஞ்சள் பித்தம் என்பது சிவப்பு அணுக்கள் இறக்கும் போது அவற்றில் இருந்து வெளிவருகிறது. இது இயற்கையாகவே நமது ரத்தத்தில் ஒரு சிறு அளவு இருக்கும். இது அதிகமாகாமல் பார்த்து கொள்வது கல்லீரலின் வேலை ஆகும். அளவுக்குமேல் போகும் பித்தத்தை ரத்தத்தில் இருந்து எடுத்துக்கொண்டு, அதை பித்த நீராக மாற்றி பித்த நாளங்களில் சுரந்து பிறகு அது பித்தப்பையில் தேக்கி வைக்கப்படுகிறது. பின்னர் மலத்தின் வழியாக உடலை விட்டு வெளியேறி விடுகிறது.

    சிவப்பு அணுக்களில் இருந்து ஆரம்பித்து கல்லீரலினால் பித்த நீராக உருவாகி பித்தப்பையில் தங்கியிருந்து பித்தநாளம் மூலமாக குடலுக்கு வந்து பின்னர் வெளியேறும் பாதைகளில் ஏதாவது ஒரு இடத்தில் கோளாறு ஏற்பட்டால் வருவதே இந்த மஞ்சள் காமாலை நோய். இதனை அடிப்படையாக கொண்டே மஞ்சள் காமாலை மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. முதல்வகை சிவப்பு அணுக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள்.

    இதில் அளவுக்கு அதிகமாக சிவப்பு அணுக்கள் இறந்து அவற்றில் இருந்து அதிகமாக மஞ்சள் பித்தம் வருவது. 2-வது கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள். இதில் கல்லீரல் அதன் வேலையை செய்யாமல் இருப்பதனால் ரத்தத்தில் மஞ்சள் பித்தம் தங்கி விடுகிறது. 3-வது அடப்பு காமாலை என்பது அதாவது பித்தநீர் பாதையில் ஏதாவது அடைப்பு ஏற்பட்டு அது கல்லீரலில் இருந்து குடலுக்கு வரமுடியாமல் தடைபட்டு வருகிறது.

    இந்த 3 வகை வருவதற்கு தனித்தனியே நிறைய காரணங்கள் உள்ளது. எனவே மஞ்சள் காமாலை வந்தவுடன் முதலில் நாம் செய்யவேண்டியது என்னவென்றால் மூன்றில் எந்தவகை மஞ்சள் காமாலை என்று தெரிந்து கொள்ளவேண்டும். பின்னர் அதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும். ஏனென்றால் ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு சிகிச்சை முறைகள் உள்ளன.

    இதில் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம என்னவென்றால், கல்லீரலினால் வருகிற ஒரு சில காரத்திற்கு தான் நாட்டு மருந்து உதவி செய்யும். சிவப்பு அணுக்கள் சம்பந்தப்பட்ட காமாலை, அடப்பு காமாலை மற்றும் ஒரு சில கல்லீரல் நோய்களினால் வரும் காமாலைக்கு வேறுவிதமான மாத்திரை மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை மூலமாக அடைப்பை நீக்குதல் போன்ற சிகிச்சைகளும் தேவைப்படும்.

    நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் நோய்நாடி வாய்ப்பசெயல் என்ற வள்ளுவன் வாக்குக்கிணங்க மஞ்சள் காமாலையின் வகையை கண்டுபிடித்து அதன் காரணத்தை கண்டுபிடித்து அதற்கான சரியான சிகிச்சை முறையை தேர்ந்தெடுத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தால், இந்த மஞ்சள் காமாலை குணமடைய நிறைய வாய்ப்புள்ளது. மேற்கண்ட தகவலை கடலூர் குடல் கல்லீரல் மருத்துவம் மற்றும் குடல் உள்நோக்கு மைய டாக்டர் வினோத் கூறி உள்ளார்.

    டாக்டர் வினோத்
    Next Story
    ×