search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகு உருவான வரலாறு
    X

    ராகு உருவான வரலாறு

    ராகு - கேது தோன்றியதற்கு புராணக் கதை உள்ளது. ராகு - கேகு பகவான் தோன்றிய வரலாற்றை இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்..
    பாற்கடலை கடைந்தபோது அமிர்தம் வெளிப்பட்டது என்ற புராணக் கதை உங்களுக்கு தெரியும். அமிர்தம் கிடைத்தவுடன் அதனை தேவர்களும் அசுரர்களும் சரிபாதியாக பங்கிட்டுக் கொள்ளுவது என்று ஒப்பந்தம் செய்திருந்தனர்.

    இந்த நேரத்தில் விஷ்ணு மோகினி வடிவம் எடுத்தார். அசுரர்களை மயக்கினார். அமிர்தகலசம் தன்வந்திரியின் கையில் இருந்தது. அதனை மோகினி வாங்கிக் கொண்டாள்.

    அவளது அழகில் மயங்கிய அசுரர்கள் மோகினியே அனைவருக்கும் பரிமாறட்டும் என கூறிவிட்டனர். தேவர்களும் ஒப்புக் கொண்டனர். யாருக்கு முதலில் அமிர்தத்தை தருவது என்ற பிரச்சினை எழுந்தது.

    மேலே தெளிவாக உள்ள நீரை தேவர்களுக்கும் அடியில் கலங்கி இருக்கும் திரவத்தை அசுரர்களுக்கும் கொடுப்பது என்று முடிவாயிற்று. முதலில் தேவர்களுக்கு அமிர்தம் வழங்கப்பட்டது. இதில் ஏதோ குளறுபடி உள்ளது என புரிந்துக்கொண்ட கஸ்யப மஹரிஷியின் மகனான ஸ்வர்பானு எங்கே தனக்கு அமிர்தம் கிடைக்காமல் போய்விடுமோ என அஞ்சி அசுரவடிவம் மாற்றி தேவர் வடிவம் பூண்டு தேவர்கள் வரிசையில் அமர்ந்தான். இதனை சூரியனும் சந்திரனும் பார்த்து விட்டனர்.

    இதற்குள் மோகினி, தேவன் என்று நினைத்து ஸ்வர்பானுவுக்கு அமிர்தம் அளித்து விட்டார். அவனும் அவசர அவசரமாக பருகி விட்டான். சந்திர, சூரியர்கள் மோகினியிடம் சென்று நடந்தவற்றை கூறினார்.

    மோகினி வடிவம் தாங்கிய விஷ்ணுவுக்கு கடுங்கோபம் உண்டாயிற்று. அவர் தன் கையில் இருந்த அகப்பையில் ஸ்வர்பானுவின் தலையால் ஓங்கி தட்டினார். இதனால் ஸ்வர்பானு தலை வேறு, முண்டம் வேறு என இருகூறுகளானார்.

    அமிர்தம் உண்ட காரணத்தால் ஸ்வர்பானுவின் உயிர் நீங்கவில்லை ஒப்பந்தத்தை மீறியதால் அசுரர்களுக்கு அமிர்தம் வழங்க முடியாது என மோகினி கூறிவிட்டாள். அமிர்த கலசத்தை பிடுங்க அசுரர்கள் முயல மோகினி வேகவேகமாக அனைத்தையும் தேவர்களுக்கு அளித்துவிட்டார். ஏமாற்றம் அடைந்த அசுரர்கள் ஸ்வர்பானுவால்தான் தங்களுக்கு அமிர்தம் கிடைக்கவில்லை என வருந்தி சுவர்பானுவை தங்கள் குலத்திலிருந்து விலக்கி வைத்து விட்டனர்.
    இரு உடலாக கிடந்தாலும் உடல் இருந்தும் தலை இல்லாமலும், தலை இருந்தும் உடல் இல்லாமலும் இருந்த ஸ்வர்பானு, பிரம்மனிடம் முறையிட்டான். பிரம்மனோ விஷ்ணுவால்தான் இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய இயலும் என்று கூறிவிட்டார்.

    விஷ்ணுவை ஸ்வர்பானு வணங்கி பிராயச்சித்தம் செய்யும்படி கேட்டான். விஷ்ணு பகவான் மனம் இரங்கி பாம்பு உடலை கொடுத்து ஸ்வர்பானுவின் தலையுடன் பொருத்தினார். அதேபோல் பாம்புத்தலையை ஸ்வர்பானு உடலுடன் பொருத்தினார். இதையடுத்து மனித தலையும் பாம்பு உடலும் கூடியவன் ராகு எனவும், பாம்பு தலையும் மனித உடலும் கூடியவன் கேது எனவும் அழைக்கப்பட்டனர்.

    ஆனால் இருவருக்கும் உயிர் ஒன்றுதான். இருவரும் நேர் எதிர்திசையில் நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்கும் படி கூறி விஷ்ணு அருள்பாலித்தார்.
    அமிர்தம் பருகியதால் உயிர்பெற்று பரமனை நோக்கித் தவம் செய்து கிரக பதவி பெற்றதினால் ராகு கேது இருவரும் ராசிமண்டலத்தில் அப்பிரதட்சணமாக இயங்கி வருகிறார்கள்.

    மற்ற ஏழு கிரகங்களும் ராசி சக்கரத்தில் வலமாகச் சுற்றி வருகையில் ராகுவும் கேதுவும் அவர்களுக்கு எதிர் திசையில் இடமாக எப்பொழுதும் எதிரெதிராக 180 டிகிரியிலேயே சுற்றிவருவர். ராகு பகவான் நவக்கிரக பீடத்தில் சூரியனுக்கு வடமேற்கே அமர்ந்திருக்கிறார். உயரமான தோற்றம் உடையவர். ஆட்டுக்கடா வாகனமுடையவர் எட்டுக்குதிரைகள் பூட்டிய தேரிலும் இருப்பவர். நான்கு கைகள் உடையவர் கறுப்பு வண்ணம் இவருக்கு பிடித்தமானது.
    Next Story
    ×