search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தூக்க திருவிழா கொடியேற்றம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடந்த போது எடுத்த படம்.
    X
    தூக்க திருவிழா கொடியேற்றம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடந்த போது எடுத்த படம்.

    கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் தூக்க திருவிழா தொடங்கியது

    கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் தூக்க திருவிழா தொடங்கியது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
    குமரி மாவட்டம் கொல்லங்கோடு வெங்கஞ்சி பத்ரகாளி அம்மன் கோவிலில் மீனபரணி தூக்கத்திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு பள்ளி உணர்த்தல், 5.30 மணிக்கு பிரதான கோவிலான வட்டவிளை கோவிலில் மகா கணபதிஹோமமும் நடந்தது.

    இதனை தொடர்ந்து அங்கிருந்து கமுக மரம், மேள தாளங்களுடன் வெங்கஞ்சி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அதேபோல் வட்டவிளை பிரதான கோவிலில் இருந்து அம்மன் திருமுடிகள் மேள தாளங்கள் முழங்கவும், முத்துக்குடை, தாலப்பொலி ஏந்தியும் வரும் நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நின்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    இரவு 7 மணிக்கு அம்மன் திருமுடிகள் வெங்கஞ்சி கோவிலை வந்தடைந்தது. பிறகு திருக்கோவில் தந்திரி கொட்டாரக்கரை நீர்மனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனையடுத்து கோவில் வளாகத்திற்குள் உள்ள ஒரு அரங்கில் தூக்கத்திருவிழாவிற்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு தூக்க திருவிழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

    தூக்க திருவிழா தொடக்க நிகழ்ச்சிக்கு கோவில் தலைவர் சதாசிவன் நாயர் தலைமை தாங்கினார். இதில் விஜயகுமார் எம்.பி., கேரள மந்திரி கடனப்பள்ளி ராமச்சந்திரன், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கேரள எம்.எல்.ஏ. சிவகுமார், கோவில் செயலாளர் மோகன்குமார், பொருளாளர் சூர்ய தேவன் தம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கவர்னர் வருகையையொட்டி கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் நவீன படகுகள் மூலம் கடலில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள 48 மீனவ கிராமங்களிலும் போலீஸ் கண்காணிப்பு பணி நடந்தது.

    திருவிழாவையொட்டி 14-ந் தேதி காலை 8 மணி முதல் தூக்கக்காரர்களுக்கு மருத்துவ பரிசோதனையும், 15-ந் தேதி காலை தூக்க நேர்ச்சையின் குலுக்கல் மற்றும் காப்புகட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு தூக்கக்காரர்கள் கடலில் நீராடி நமஸ்காரம் செய்கிறார்கள். 21-ந்தேதி சிறப்பு மிக்க தூக்க திருவிழா நடைபெறுகிறது. கடந்த ஆண்டு 1,468 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு 1,600 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட உள்ளது.

    தூக்க திருவிழாவை காண தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் வருவார்கள். இதையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    Next Story
    ×