search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமகிருஷ்ணர் என்ற பெயர் எப்படி வந்தது?
    X

    ராமகிருஷ்ணர் என்ற பெயர் எப்படி வந்தது?

    ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று அழைப்பது குறித்து முரண்பட்ட பல தகவல்கள் காணப்படுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ராமகிருஷ்ணருக்கு அவரது பெற்றோர்கள் வைத்த பெயர் கதாதர் என்பதாகும். பின்னர் அவரது பெயர் ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று எப்படி மாறியது என்பது குறித்து முரண்பட்ட பல தகவல்கள் காணப்படுகின்றன.

    கிரிஷ் சந்திர கோஷ் என்பவர் ராமகிருஷ்ணரை பார்த்து 'ஐயா தாங்கள் யார் என்று கேட்டார்?" அதற்கு விடையளித்த அவர் 'என்னை சிலர் ராமபிரசாத் என்கிறார்கள். வேறு சிலர் ராஜா ராமகிருஷ்ணா என்று அழைக்கிறார்கள். நான் தட்சிணே சுவரத்தில் இருக்கிறேன்" என்று கூறினார். 'தி மிர்ரர்' என்ற ஆங்கில நாளேடு தனது 1875-ம் ஆண்டு மார்ச் 28-ந் தேதி இதழில் 'கேசவ சந்திரசென் என்ற பிரம்ம சமாஜத் தலைவர் பரமஹம்சா என்று அழைக்கப்படுகிற ராமகிருஷ்ணரை சந்தித்தார்' என்று குறிப்பிட்டிருந்தது.

    கேசவ சந்திரா, ஈஸ்வர சந்திர வித்யாசாகர் போன்றவர்கள் 'பரமஹம்ச பாபு" என்று அவரை அழைத்திருக்கிறார்கள். சுவாமி விவேகானந்தர் 1894-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி எழுதிய ஒரு கடிதத்தில் 'பரமஹம்சர்' என்ற சொல்லையே பயன்படுத்தினார். ராமகிருஷ்ணரது வரலாற்றை எழுதிய நூலாசிரியர்கள் அனைவரும் ஆரம்ப காலத்தில் 'பரமஹம்ச தேவா" என்றே அவரைக் குறிப்பிட்டார்கள். 'ஸ்ரீ ராமகிருஷ்ணரின் போதனை" என்ற உலகப் புகழ் பெற்ற நூல் எழுதிய மகேந்திரநாத் பாபு தனது நாட்குறிப்புகளில் பரமஹம்சர் என்றே குறிப்பிட்டுள்ளார்.



    1895-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதாப் சந்திர மசும்தார் மார்க்ஸ்மூல்லருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் 'பரமஹம்சர்' என்ற சொல்லையே பயன்படுத்தி உள்ளார். இவர்களில் எவரும் ராமகிருஷ்ணர் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

    ஆரம்ப நாட்களில் அவரது இயற்பெயர் கதாதர் என்பதே தட்சிணேசுவரத்தில் யாருக்கும் தெரியாது. அங்குள்ளவர்கள் அவரை 'பித்துகுளி பிராமணன், பட்டாச்சாரி, கோயில் ஐயர்" என்றே அழைத்தார்கள். பின்னர் இவரது பெயர் தட்சிணேசுவர பரமஹம்சர் என்று மாறிற்று. ராமகிருஷ்ணர் என்ற பெயர் இவருக்கு எப்படி வந்தது என்பதற்கு சரியான ஆதாரங்கள் எதுவும் இல்லை". ராமகிருஷ்ணர் என்று முதலில் இவரை அழைத்தவர்கள் மேக்ஸ்மூல்லவர், சி.எச். டாவ்னே மற்றும் டிக்பி போன்றவர்கள். புகழ்பெற்ற தோட்டாபூரி தீட்சை வழங்கும் போது 'ராமகிருஷ்ணர் என்று பெயரிட்டு துறவியாக மாற்றினர் என்றும் கூறப்படுகிறது.

    மதுரமோகன் தனது பக்தி மேலீட்டால் தனது குருவை 'ராமகிருஷ்ணர்' என்று அழைத்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. சகோதரி தேவமாதா தனது 'ஸ்ரீ ராமகிருஷ்ணா அண்ட் கிட்ஸ் டிஸ்பிளஸ்" என்ற புத்தகத்தில் கதாதருக்கு முதன் முதலில் ராம கிருஷ்ணர் என்று பெயர் சூட்டியவர் தோட்டாபூரி என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்தக் தகவலை ராமகிருஷ்ணர் மூலமாகவே தெரிந்து கொண்டு அவர் எழுதியிருக்கிறார் என்று நம்புவதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. டாக்டர் சசிபூஷன் கோஷ் என்பவர் ராமகிருஷ்ணரை இளமைக்காலம் முதலே நன்கு அறிந்தவர். ராமகிருஷ்ண மிஷனின் சார்புச் செயலாளராக பணியாற்றியவர்.
    அவர் தனது நூலில் 'பெற்றோர்கள் கதாதர் என்றே பெயர் சூட்டினார்கள். ஊர் மக்களும் அப்படியே அழைத்தார்கள். ராமகிருஷ்ணர் என்பது அவரது குடும்ப பரம்பரையை ஓட்டி வந்த பெயர் என்று கூறுகிறார்.
    Next Story
    ×