search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமகிருஷ்ணர் குண்டலினி சக்தியை மேல் எழுப்பிய அனுபவம்
    X

    ராமகிருஷ்ணர் குண்டலினி சக்தியை மேல் எழுப்பிய அனுபவம்

    தாந்திரிக சாதனையின் விளைவாக ராமகிருஷ்ணர் மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை மேல் எழுப்பியபோது தன்னுடைய அனுபவத்தை கூறி உள்ளார்.
    64 வகையான தாந்திர சாதனையும் செய்தார். எல்லாவற்றிலும் வெற்றி கண்டார்.

    தாந்திரிக சாதனையின் விளைவாக ராமகிருஷ்ணர் மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை மேல் எழுப்பியபோது தன்னுடைய அனுபவத்தை கூறி உள்ளார்.

    ஒவ்வொரு பகுதியிலும் குண்டலினி சக்தி கிளம்பிமேனோக்கி வரும் மூலாதாரம், சுவாதிஷ்டானம் மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற 6 ஆதாரங்களையும் அடையும் வரை எல்லா விபரங்களையும் அதன் அனுபவங்களையும் விளக்கமாகச் சொல்லி வருவார்.

    ஆனால், 7-வது நிலையாகிய சகஸ்ராம் பகுதியை அடைந்த போது பேச முடியாத நிலை உருவாகுவதாகவும் விளக்க முடியாமல் திகைப்பதாகவும் அடிக்கடி ராமகிருஷ்ணர் கூறுவார்.

    அவற்றை அவருடைய வார்த்தைகள் மூலம் காண்போம்.

    ஏதோ ஒன்று டிங் என்ற ஒலியுடன் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலைக்குச் செல்லும். அது தலையை அடையும் வரை நான் நினைவோடு இருப்பேன். தலையை அடைந்த மறுவினாடியே வெளி உலகத்துக்கு பிணமாகி விடுவேன். கண்கள், காண்பதும், காதுகள் கேட்பதும் கூட நின்றுவிடும். பேசுவது பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை யார் பேசுவது? நான் நீ என்னும் வேற்றுமை போய்விடும்.

    சில நேரங்களில் அந்த விசித்திரமான சக்தி முதுகுத்தண்டில் ஏறிச் செல்லும்போது நான் காண்கின்ற, உணர்கின்ற எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன்.

    அது இதுவரையிலும்... அல்லது இதுவரையிலும்... வரும் வரை கூட (மார்பையும், கழுத்தையும் சுட்டிக்காட்டி) பேசுவதற்கு முடியும். அதுபற்றிச் சொல்வேன். ஆனால் இதைத் (கழுத்து) தாண்டியதும் மறுவினாடியே யாரோ என் பேச்சை நிறுத்திவிடுகின்றனர். நானும் நிலை தடுமாறிப் போகிறேன்.

    பிறகு நினைவு வந்ததும் குண்டலினியின் சக்தி தொண்டையைத் தாண்டிச் சென்றதும் என்ன நடக்கிறது என்று சொல்ல எண்ணுவேன். அந்த எண்ணம் தோன்றியதுமே மனம் ஒரே பாய்ச்சலில் தொண்டையைத் தாண்டிச் சென்றுவிடுகிறது. அவ்வளவு தான், விஷயமே முடிந்துவிடுறது.

    இவ்வாறு குண்டலினி அனுபவத்தை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியுள்ளார்.

    அவர் பலமுறை குண்டலினி தொண்டயைத் தாண்டிச் சென்றால் ஏற்படும் நிலை குறித்துச் சொல்ல முயன்றார். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே கண்டார். ஒருநாள் சொல்லியே தீருவது என்று உறுதியோடு அப்படியே அந்தச் சக்தி தொண்டையை அடையும் வரை சொல்லிக் கொண்டே வந்தார்.

    அவர் 6-வது இடமான புருவ மத்தியில் கையை வைத்தபடி, இங்கே மணம் சென்றடைந்ததும் பரமாத்மாவின் காட்சி கிடைக்கிறது. மனம் சமாதியில் மூழ்குகிறது ஜீவாத்மாவிற்கும் பாமாத்மாவிற்கும் இடையே இங்கு மிக மெல்லிய திரையே உள்ளது. இப்படி விரிவாகச் சொல்ல முயன்று கொண்டிருக்கும் போதே சமாதியில் மூழ்கிவிட்டார்.

    மனம் அங்கிருந்து சிறிது கீழே இறங்கி வந்ததும் அதுபற்றிக் கூற மறுபடியும் முயன்றார். ஆனால் மீண்டும் மீண்டும் சமாதியில் மூழ்கிவிட்டார். பலமுறை இவ்வாறு முயன்று கண்களில் நீர் வழிய, ஓ நான் சத்தியமாக எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன். ஆனால் அன்னை அனுமதிக்கவில்லை. என் வாயை அடைத்துவிடுகிறாள் என்றார்.

    குண்டலினி தலைக்குச் செல்லும் பல்வேறு விதங்களைப் பற்றி அவர் கூறும்போது ஆ டிங் என்ற உணச்சியோடு எழும் குண்டலினி ஒரே மாதிரியான வேகத்தோடு எப்போதும் தலை உச்சிக்கு சென்று விடுவதில்லை. சாஸ்திரங்களில் குண்டலினி சக்தி 5 வகையாக மேலேறிச் செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. முதலில் எறும்பு போல் வளர்ந்து அதாவது, எறும்புகள் வாயில் உணவை வைத்துக் கொண்டு ஊர்ந்து செல்வது போல பாதத்தில் இருந்து மேலாக நிதானமாகச் செல்லும். அது தலையை அடைந்ததும் சாதகன் சமாதி நிலையில் ஆழ்ந்து விடுவான்.

    இரண்டாவது, தவளை செல்வது போன்றது. தவளை ஒரே மூச்சில் இரண்டு மூன்று தகுதி குதித்து, கொஞ்சநேரம் ஓய்வு கொள்ளும். பிறகு அங்கிருந்து இரண்டு மூன்று முறை குதித்து மறுபடியும் கொஞ்ச நேரம் நிற்கும். இதுபோலக் குறிப்பிட்ட இடத்தைச் சென்று சேரும் வரை குதித்துச் செல்லும். அதுபோலவே உள்ளங்காலில் இருந்து தலைவரை குண்டலினி சக்தி செல்லும்.

    மூன்றாவது, பாம்பு போல வளைந்து வளைந்து செல்வது. பாம்பு தரையில் வளைந்து வளைந்து வேகமாக ஓடுவது போல இந்த முறையில் குண்டலினி இப்படியும் அப்படியுமாக வேகமாக அசைந்து மேலே செல்லும். சமாதியும் ஏற்படும்.

    4-வது, பறவை பறப்பது போன்றது. பறவை ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்குச் சிறகை விரித்துக் கொண்டு சில நேரங்களில் உயரத்திலும் சில நேரத்தில் தாழ்வாகவும் ஆனால் எங்கும் நில்லாமல் பறந்து செல்வது போலக் குண்டலினி சக்தி செல்லும்.

    கடைசியாக, குரங்கு செல்வது போன்றது. ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்திற்கு செல்லும் குரங்கு இடையே உள்ள பெருந்தூரத்தை ஒரே தாவாகத் தாவி அடைவது போல், குண்டலினி தலை உச்சியான சஹஸ்ராரத்தைச் சென்றடையும். உடனே யோகி சமாதி நிலையில் மூழ்கி விடுவான் என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×