search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விவேகானந்தரை தயார்படுத்தினார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
    X

    விவேகானந்தரை தயார்படுத்தினார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்

    இளைஞர்களிடையே தேச பக்தியையும், விழிப்புணர்ச்சியையும் தூண்டியவர் விவேகானந்தர். சேவை ஒன்றே இறைவனை அடையும் வழி என்று இந்த உலகுக்கு உணர்த்தியவர்.
    குருதேவரின் வாழ்க்கையின் முக்கியமான பகுதிக்குள் இப்போது நாம் பிரவேசித்திருக்கிறோம்.

    காசிப்பூர் தோட்டத்திலேதான் அந்த ஆன்மீக விளக்கு ஐக்கியமாகிப் போனது. இங்கேதான் அவர் தம்முடைய தெய்வீக ஆற்றலின் உச்சத்தை உலகிற்குக் காட்டினார். தமக்குப் பின்னால் தம் கொள்கைகளை உலக மக்களுக்கு உரைத்து அவர்களை உய்விக்க தலைவனாக உருவாக்கித் தம்மை பின் பற்றுபவர்களுடைய பொறுப்புகளை ஏற்கும் கருவியாக மாற்றினார்.

    காசிப்பூர் தோட்டம் இயற்கை வளம் நிறைந்த இடம். ஐந்து ஏக்கர் நிலப் பரப்பில் பழ மரங்களோடு மலர் செடிகளும் பசுமையான புல்வெளியும் நீர் நிறைந்த குளங்களுமாக அமைந்திருந்தது.

    ஒரு நாள்...

    ஒரு மரத்தடியில் விவேகானந்தர் தியானத்தில் அமர்ந்திருந்தார். அவர் நிர்விகல்ப சமாதியடைய பெரிதும் முயன்று கொண்டிருந்தார். குருதேவரிடம் நிர்விகல்ப சமாதியைத் தனக்கு அருளும்படி கெஞ்சிக் கொண்டிருந்தார். ஆனால் குரு தேவரோ ஏதும் சொல்லாமல் தட்டிக்கழித்து வந்தார். இதனால் அந்த இளம் பக்தனுக்கு பெரிதும் வருத்தம். இன்று நிர்விகல்ப சமாதியடையாமல் இங்கிருந்து எழப்போவதில்லை என்று சங்கல்பம் செய்து கொண்டு அமர்ந்தார்.



    அவருடைய சகோதர சீடர்கள் அவரைத் தொந்தரவு பண்ணாமல் ஸ்நானம் செய்து வரக் குளத்திற்குச் சென்று விட்டனர். நரேந்திரன் நீண்ட நேரம் மவுனமாக அமர்ந்து சித்தத்தை ஒருமுகப்படுத்தி தியானத்தில் ஆழ்ந்தார். ஞான நிட்டை கூடி ஆன்மீகத்தின் அடி நாதத்தை அன்று தரிசித்தார். பெரும்பாலும் நிர்விகல்ப சமாதி அடைந்தவர்கள் இவ்வுலகத்திற்கு இறங்கி வர முடியாமல் அப்படியே ஆண்டவனின் சன்னதியை அடைந்து விடுவது வழக்கம்.

    அதே போல் விவேகானந்தரும் புற உலகிற்கு வர முடியாமல், எங்கே என் உடல், எங்கே என் உடல் என்று அலறினார். குளத்தில் குளித்துவிட்டு வந்த இளம் பக்தர்கள் மிரண்டுவிட்டனர். உடனே ராமகிருஷ்ணரிடம் விரைந்து சென்று விஷயத்தைக் கூறினர்.

    ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஆ... அடைந்துவிட்டான். இதற்காகத் தான் என்னை நீண்ட நாட்களாகத் தொந்தரவு செய்து கொண்டிருந்தான். இதில் பயப்பட ஒன்றுமில்லை. சாதாரண மனிதன் இந்த நிலையை அடைந்துவிட்டால், உலக நிலைக்கு இறங்கி வர முடியாது. ஆனால் நரேந்திரன் சாமான்யன் அல்லன். இன்னும் சற்று நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும். அவன் உலகத்திற்கு போதிக்கப் பிறந்த யோகி என்று சந்தோஷத்துடன் கூறினார்.

    இந்து சமயத்தின் எழுச்சிக்கும், உயர்வுக்கும் வித்திட்ட வீரத்துறவி சுவாமி விவேகானந்தர். ‘ஒருவன் தேவையில்லாமல் உன் ஒரு கன்னத்தில் அறைந்தால் நீ அவனது இரண்டு கன்னங்களையும் திருப்பித் தாக்கு’ என வீரக்குரல் எழுப்பியவர். இளைஞர்களிடையே தேச பக்தியையும், விழிப்புணர்ச்சியையும் தூண்டியவர். சேவை ஒன்றே இறைவனை அடையும் வழி என்று இந்த உலகுக்கு உணர்த்தியவர். பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவற்றையும், பின்னால் நிகழப்போவதைப் பற்றியும் அறிந்த அளப்பரிய ஆற்றல் கொண்டவராக சுவாமி விவேகானந்தர் விளங்கினார் என்பது வியப்பிற்குரிய ஒன்று!
    Next Story
    ×