search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஏசு, முகம்மது நபி, புத்தர் மூலம் பரம்பொருளைக் காணல்
    X

    ஏசு, முகம்மது நபி, புத்தர் மூலம் பரம்பொருளைக் காணல்

    மனிதன் தன்னுள் இருக்கின்ற பரம் பொருளை அல்லது கடவுள் தன்மையை உணருகின்ற பொழுது அவனே பரம் பொருளாகின்றான். (கடவுளாகின்றான்).
    சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ணரைக் குருவாக ஏற்றுக் கொண்ட போது கூட பல சமயங்களில் பகவானைச் சோதனை செய்ததுண்டு. அது ஆத்மீக சோதனை, அதில் தவறு கிடையாது.

    அத்தகைய சுவாமி விவேகானந்தரின் குரு எத்தகையவர் தெரியுமா?

    உதாரணமாக ஒன்று-... பகவான் ராமகிருஷ்ணர் காளியைத் தமது தெய்வாகக் கொண்டு பரம் பொருளை அடைந்தாரல்லவா?

    அதோடு அதை நிறுத்தி காளி மட்டுமே பரம்பொருளைக் காட்டும் வழி என்று தம்முடைய சாதனையை நிறுத்தினாரா? இல்லை. பல நூற்றாண்டுகளாகத் தமது கடவுளாக ஏசுவை வணங்கி வரும் மக்கள் கதி என்ன? என்பதை ஆராய வேண்டி, ஏசுபிரானைத் தமது சாதனைப் பொருளாக்கினார்.

    ஏசு பிரானை மிகவும் நேசித்த பகவானுக்கு அவரது நண்பர் சம்புசரன் மல்லிக் விவிலிய கருத்துக்களை விளக்க அதிகமாக உதவினார். ராமகிருஷ்ணர் ஏசுவின் காட்சியைப் பெற்ற நிகழ்ச்சி வியப்புக்கு உரியது.

    ஒரு நாள் அவர் தட்சிணேசுவரத்தில் இருந்த யது நாத்மல்லிக்கின் வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு வரவேற்பு அறையில் அழகான பல படங்கள் சுவரில் மாட்டப்பட்டிருந்தன. அவைகளில் ஒன்று குழந்தை ஏசு மேரியுடன் இருக்கும் படம். அந்தப் படத்தை உற்றுப் பார்த்தபடியே ஏசுவின் அற்புதமான வாழ்க்கையில் ஆழ்ந்தவராய் சிந்தனையில் மூழ்கி இருந்தார்.

    அப்போது அந்தப் படம் உயிர் பெற்று எழுவதை அவர் உணர்ந்தார். மேரியின் உருவத்தில் இருந்தும் ஏசுவின் உருவத்தில் இருந்தும் ஒளிக்கதிர்கள் எழுந்து அவருள் புகுந்தன. மூன்று நாட்கள் வரை இரவும் பகலும் இதே நினைவுகள் அவர் மனதை மூடிக்கிடந்தன. நான்காம் நாள் காலையில் பஞ்ச வடியில் நடந்து கொண்டிருந்தார். அப்போது ஓர் அதிசயமான காட்சியைக் கண்டார்

    ஆச்சரியப்படத்தக்க அமைதியே வடிவான ஒரு மனித உருவம் தம்மையே உற்றுப்பார்த்தபடி தம்மை நோக்கி வருவதைக் கண்டார். அவர் வெளிநாட்டைச் சார்ந்தவர் என்பது பார்த்த உடனே தெரிந்தது. அவருடைய கண்கள் மிக அழகாக இருந்தன. மூக்கு சிறிய தட்டையாக இருந்ததால் அது எந்த விதத்திலும் அந்த முகத்தின் ஆழ்ந்த அமைதியையும் அழகையும் குலைக்கவில்லை. ராமகிருஷ்ணர் அந்த வடிவத்தால் மிகவும் கவரப்பட்டவராய் அவர் யாராக இருக்கும் என்று ஆச்சரியத்தோடு சிந்தித்தார்.

    அந்த நேரத்தில் அந்த வடிவம் அவர் அருகே நெருங்கி வந்து ராமகிருஷ்ணரைத் தழுவி அவருள் கலந்துவிட்டது. அவர் பிரம்மத்தில் ஆழ்ந்தவராய் உலக நினைவற்றுச் சமாதியில் மூழ்கிவிட்டார்.

    பிறகு, நெடுநேரம் கழித்து அவருக்கு உலக நினைவு திரும்பியது. இந்தக் காட்சி. “ஏசுவும் கடவுள் அவதாரமே” என்ற நம்பிக்கையை ராமகிருஷ்ணருக்கு அளித்தது.

    ஏசுபிரானைத் தன் நினைவில் நிறுத்தி வைத்து அதே நினைவில் இருக்கும் நிகழ்ச்சியை இங்கு நோக்குக. தியானத்தில் ஏசுவில் கரைந்து “கடைசி பற்று” அறுக்கப்பெற்று “சத்“ பொருளான பரம் பொருளை அடைகின்றார்.

    இதே நிலையில் முகம்மது நபி, புத்தர் இவர்களையும் தியானித்துப் பரம் பொருளை அடையும் வழியாக இருந்து பகவான் வழி காட்டுகிறார்.

    ராமகிருஷ்ண பரமஹம்சர் பரந்த மனப்பான்மையோடு உண்மை நிலை காண்பதற்காகச் செய்த பாதைகளில் ஏசுவின் பாதையும் ஒன்று. அவதார புருஷனே அவதார புருஷனைப் பாதையாக்கிக் கொண்டது வியப்பாக இல்லையா?

    மனிதன் தன்னுள் இருக்கின்ற பரம் பொருளை அல்லது கடவுள் தன்மையை உணருகின்ற பொழுது அவனே பரம் பொருளாகின்றான். (கடவுளாகின்றான்). இதை எளிதான முறையில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் வாழ்ந்து காட்டி, தம் வாழ்கையை வேதவாழ்வாகக் காட்டினார். ஒவ்வொரு மனிதனும் தெய்வமே என்பதை எடுத்துக் காட்டினார். அவரே அதை அடையும் பாதையுமானார்.
    Next Story
    ×