search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீராமகிருஷ்ண வழிபாடு ஏன்?
    X

    ஸ்ரீராமகிருஷ்ண வழிபாடு ஏன்?

    ஸ்ரீராமகிருஷ்ணரை வணங்குவதும் வழிபடுவதும் மட்டும் போதாது, அவரை வாழ்க்கை லட்சியமாகவும் கொள்ள வேண்டும் என்பதை சுவாமி விவேகானந்தரும் எடுத்துக் கூறுகிறார்.
    ஸ்ரீராமகிருஷ்ண வழிபாடு ஏன்? பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் அவதார புருஷர். அவர் இன்றும் வாழ்கிறார். நாமும் அவருடன் வாழ முடியும். அவரை வழிபட்டு அவருடன் வாழ்வது, நமது வாழ்க்கைக்கு ஓர் ஆழ்ந்த பொருளைக்கொடுக்கும். வாழ்க்கையில் நிம்மதி பிறக்கும்.

    இதன் பொருள் என்ன?

    இந்து மதத்தில் தெய்வங்களுக்கோ, அவதார புருஷர்களுக்கோ குறைவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணரை ஓர் அவதார புருஷர் என்று நாம் கூறியது, இருக்கின்ற எண்ணிக்கையில் மேலும் ஒன்றைச் சேர்த்து, தெய்வங்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காக அல்ல. ஸ்ரீராமகிருஷ்ண வழிபாட்டிற்கு ஆழ்ந்த பொருள் உள்ளது. அது காலத்தின் தேவை.

    ஸ்ரீராமகிருஷ்ணரை வணங்குவதும் வழிபடுவதும் மட்டும் போதாது, அவரை வாழ்க்கை லட்சியமாகவும் கொள்ள வேண்டும் என்பதை சுவாமி விவேகானந்தரும் எடுத்துக் கூறுகிறார். அவரிடம் இயல்பாகவே திகழ்ந்த பண்புநலன்களை நாம் மனப்பூர்வமாக நம்மில் நிறைக்க வேண்டும். வளர்க்க வேண்டும்.

    அத்தகைய முக்கிய பண்பு நலன்களாக சுவாமிஜி கருதுபவை எவை? காமம், பேராசை மற்றும் புலனின்ப நாட்டத்தை விடுதல் மற்றும் துறவு. இதனைத் தமது ஆரதிப்பாடலில் ‘வஞ்சன காம காஞ்சன அதி நிந்தித இந்திரிய ராக்’ என்று குறிப்பிடுகிறார்.

    முதலில் ‘வஞ்சன காம காஞ்சன’ என்பதை எடுத்துக்கொள்வோம். இதன் பொருள் ‘காமத்தையும் பேராசையையும் விட்டவர்’ என்பதாகும். மனிதனின் துயரங்களுக்குக் காரணம் என்ன? இதற்கு விடையாக நமது சாஸ்திரங்கள் எண்ணற்ற காரணங்களைக் காட்டுகின்றன. ஆனால் ‘காமம் மற்றும் பேராசை என்ற இரண்டு மட்டுமே’ என்பதுதான் ஸ்ரீராமகிருஷ்ணரின் எளிய, மதி நுட்பம் மிக்க பதில். இதில் ஆச்சரியம் என்னவென்றால் நவீன சிந்தனையாளர்களின் கருத்து அவரது கருத்தை அப்படியே ஆமோதிப்பதாக உள்ளது.

    காமம் மற்றும் பேராசை தான் தீமைகள் அனைத்திற்கும் மூல காரணம் என்பதைத் தமது ஈடிணையற்ற ஆன்மீக சாதனைகளின் விளைவாகக் கண்ட போது அதனைச் சுவடின்றி முற்றிலுமாகத் துறந்தார் அவர். அவரது பெரு வாழ்வைப் படிக்கின்ற யாரும் அவரது காம காஞ்சனத் துறவை கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

    அடுத்தது, புலனின்ப நாட்டத்தை விடுதல். புலனின்ப நாட்டம் என்பது இன்றைய சமுதாயத்தின் சாபக்கேடாக உள்ளது. இத்தகைய நிலைமையிலிருந்து மனிதன் தன்னை எவ்வாறு காத்துக் கொள்வது என்பதை எடுத்துக் கூறி ஸ்ரீராம கிருஷ்ணரின் பெரு வாழ்வும், உபதேசங்களும் அவனை வழி நடத்துகின்றன. புலனின்பப் பொருட்கள் எவ்வளவுதான் சூழ்ந்திருந்தாலும், அவற்றில் பற்றின்றி வாழ்ந்தால் பேரானந்த வாழ்வு வாழலாம் என்பதை அவர் தமது வாழக்கையில் வாழ்ந்து காட்டினார்.

    ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்ந்தது போல் காமத்திலும் பேராசையிலும், புலனின்பங்களிலும் வரம்பற்ற நாட்டத்தை விட்டு பற்றற்ற வாழ்க்கை வாழும் போது மனிதன் துயரமின்றி வாழலாம். இதுவே அவரது வாழ்க்கையின் செய்தியாக உள்ளது.

    அடுத்தது துறவு. ‘துறவும் தொண்டும் இந்தியாவின் தேசிய லட்சியங்கள். இந்த இரண்டின் பாதையில் இந்தியாவை வழி நடத்துங்கள். மற்றவை தானாக நடைபெறும்’ என்பார் சுவாமி விவேகானந்தர்.

    அனைவரும் காவியுடுத்து துறவு நெறியை மேற்கொள்ள வேண்டும் என்றோ பிச்சைக்காரர்களாகச் சுற்றியலைய வேண்டும் என்றோ விரும்பினாரா அவர்? ஒரு போதும் இல்லை. அவர் கூறிய துறவு இதுவல்ல.

    துறவின் நோக்கம் பற்றறுத்தல். எந்தப் பொருளோ மனிதர்களோ, சூழ்நிலைகளோ கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக வாழ்தல்.

    ஸ்ரீராமகிருஷ்ணரின் இணையிலா துறவு இன்றைய கால கட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ‘துறவே ஸ்ரீராம கிருஷ்ணரின் அணிகலனாக விளங்கியது’ என்பார் அன்னை ஸ்ரீசாரதா தேவி.

    மேலே கண்ட காமமின்மை, பேராசை விடுதல் மற்றும் துறவு என்ற மூன்று முக்கிய பண்புநலன்களைத் தவிர உண்மை, எளிமை, பணிவு, கருணை போன்ற பண்புகளுக்கும் ஸ்ரீராமகிருஷ்ணர் உறைவிடமாகத் திகழ்ந்தார். இத்தகைய பண்புகள் மனித வாழ்வில் இடம்பெறும் போது சமுதாய வாழ்வு எவ்வளவு இனிமையாக, வளமானதாக, இருக்கும்! அதனால் தான் விவேகானந்தர் அவரை தேசிய லட்சியமாக வைத்தார்.

    ‘ஒரு நாடு விழித்தெழ வேண்டு மானால் அதற்கு உயர்ந்தோர் லட்சியம் வேண்டும். அத்தகைய லட்சிய உருவே ஸ்ரீராமகிருஷ்ணர். எனவே இவரை எல்லோருக்கும் முன்னால் வைக்க வேண்டும்’ என்றார்.

    ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடிகளில் சரணடைகின்ற ஒருவனிடம் இந்தப் பண்புகள் வளர்கின்றன. அவன் புலன்களின் மீதுள்ள பற்றிலிருந்து விடுபடுகிறான். வாழ்க்கை லட்சியத்தை அடைகிறான். எனவே ஸ்ரீராமகிருஷ்ண வழிபாடு என்பது தனி மனிதனைப் பண்பாளனாக உருவாக்கவும் அதன் மூலம் சமுதாயத்தில் மாற்றம் காணவும் மிக முக்கியமான ஒன்று.

    ஸ்ரீராமகிருஷ்ண வழிபாடு என்பது தெய்வங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சி அல்ல. மற்ற தெய்வங்களைவிட இவர்தான் அதிகமாக பிரார்த்தனைகளைக் கேட்பார் என்றெல்லாம் ஒப்புமைப்படுத்துவதற்கான முயற்சியும் அல்ல. மாறாக, தனி மனிதனையும், சமுதாயத்தையும் மாற்றி அமைப்பதற்கான செய்தியுடன் வந்த ஓர் அவதார புருஷர் காட்டுகின்ற பாதையில் செல்வதற்கான ஒரு முயற்சியே ஸ்ரீராம கிருஷ்ண வழிபாடு.
    Next Story
    ×