search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாவை நோன்பும் தை நீராடலும்
    X

    பாவை நோன்பும் தை நீராடலும்

    ‘பாவை நோன்பு’ என்ற விரதம் இருந்து, தை முதல் நாள் விரதத்தைக் கலைத்து நீராடி அறுசுவை உணவு சமைத்து உண்பர். இதனை “தை நீராடல்” என்பர்.
    தமிழர் மரபில் சங்ககாலம் தொட்டே, அதாவது கி.மு. 2-ம் நூற்றாண்டு முதலே பொங்கல் திருநாள் வெவ்வேறு வடிவங்களில், வளமைகளில் தமிழ் நிலத்தில் நிலைபெற்றுள்ளதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன.

    ‘அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம்போல’ என்று குறுங்கோழியூர் கிழார் எனும் புலவர் அறுவடை விழாவை சாறு கண்ட களம் என வர்ணிக்கிறார். கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்த சீவகசிந்தாமணி பொங்கல் பற்றி “மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்நீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்” என பொங்கலைக் குறிப்பிடுவதில் இருந்தே அதன் தொன்மையை அறியலாம்.

    சங்க காலத்தில் பெண்கள் மார்கழி மாதம் முப்பது நாட்களும், மழைவளம் வேண்டியும் பயிர் வளம் வேண்டியும், நல்ல கணவன் அமையப்பெற வேண்டும் என்பதற்காகவும் ‘பாவை நோன்பு’ என்ற விரதம் இருந்து, தை முதல் நாள் விரதத்தைக் கலைத்து நீராடி அறுசுவை உணவு சமைத்து உண்பர். இதனை “தை நீராடல்” என்பர். 

    தை நீராடல் குறித்து பரிபாடல் “தாயருகா நின்று தவத் தைநீராடல் நீயுரைத்தி வையை நதி” என்கிறது. திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் தாய்மார் அருகில் நின்று வைகையில் தை நீராடி சிறந்த கணவனைப் பெற வேண்டும் என்பதற்காகவும் பழந்தமிழர் இந்தத் திருநாளைக் கொண்டாடினர். “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்கிறது கலித்தொகை. ஆண்டாளின் திருப்பாவையும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் இதனை விரிவாக விளக்குகிறது. பல்லவர் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 400-கி.பி. 800) “தை நீராடல்” தமிழ்நிலத்தில் சிறப்பு வாய்ந்த பண்டிகையாகத் திகழ்ந்தது.

    “பாவை நோன்பு” காலத்தில் பால் மற்றும் பால் பொருட்களை கன்னிப் பெண்கள் உண்ண மாட்டார்கள். தலைக்கு எண்ணெய் வைக்காமலும் கண்ணுக்கு மையெழுதாமலும் இருப்பர். மார்கழி மாதம் முழுவதும் வாசலில் கோலமிட்டு, கோலத்தின் மையத்தில் சாணம் வைத்து அதில் பூசணிப் பூவைச் செறுகுவர். ஒவ்வொரு நாள் மாலையிலும் பூவோடு சேர்த்து சாணத்தினை வறட்டியாக்குவர். தை மாதம் பிறந்த உடன் அதன்மேல் கற்பூரம் ஏற்றி ஆறு, ஏரி, குளம் இவற்றில் நீராடித் திரும்புவர்.

    பொங்கல் திருநாள் குறித்த பழந்தமிழரின் அறிவியல் நோக்கையும் நாம் கருதிப் பார்க்க வேண்டும். சூரியன் தை மாதத்தில் இருந்து ஆனி மாதம் வரை ஆறுமாதம் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகர்கிறது. இதை உத்தராயண காலம் என்றும், ஆடிமாதம் முதல் மார்கழி வரை வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகர்கிறது. இதை தட்சிணாயாணம் என்றும் கணித்து உத்தராயண காலத்தின் தொடக்கத்தினையே, அதாவது தை முதல் நாளையே சூரியனை வணங்கும் பொங்கல் பண்டிகை என்னும் “அறுவடை” நாளைக் கொண்டாடுகின்றனர். ஆண்டின் முதல் அறுவடை என்ற வகையில் இதனை ‘புதுயீடு’ என்றும் சோழர் கல்வெட்டுகள் கூறுகின்றன.

    பொங்கல் விழாவின் ஒரு அங்கமாக உழவர்கள் மார்கழி மாதத்தில் தைப் பொங்கலுக்கு முன்னர் “புதிர் எடுத்தல்” என்ற நிகழ்வை நிகழ்த்துவர். குடும்பத் தலைவன், காலையில் நீராடி, குலதெய்வத்தினை வணங்கி வயலின் வரப்பில் பிள்ளையார் பிடித்துவைத்து பூ, பழம், பாக்கு, வெற்றிலை படைத்து, தேங்காய் உடைத்து, அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்கதிர்களை சிறிதளவு வெட்டி, வீட்டிற்குக் கொண்டு வருவார்கள். அதை மனையாள் வாங்கி வீட்டின் கூடத்திலோ, தெய்வத்தை வழிபடும் இடத்திலோ கட்டித் தொங்க விடுவர். அது அடுத்த வருடம் கதிர் எடுக்கும் வரை அங்கு தொங்கிக் கொண்டிருக்கும்.

    கதிர் எடுப்பதன் மூலம் அந்த வருடம் முழுவதுவும் தானியத்திற்கு குறைவு இருக்காது என்பது நம்பிக்கை. மிகுதியாக உள்ள நெற்கதிர்களை அரிசியாக்கி அந்த புத்தரிசியைப் பயன்படுத்தி, புதுப்பானையில் பொங்கலிடுவது வழக்கம். அதுவரை களத்து மேட்டில் நெற்கதிர்கள், நெல் பிரிக்கப்படாமல் குவியலாகக் கிடக்கும்.

    பொங்கலின்போது, படைக்கப்படும் பொங்கல் பச்சரிசி, பால், வெல்லம் அல்லது இலுப்பை பூ, உளுந்து அல்லது பச்சைப் பயிறு, வாழைப்பழம் போன்றவற்றைக் கொண்ட இனிப்புப் பொங்கலாகும். சோழர்காலம் வரை அதாவது 13-ம் நூற்றாண்டு வரை பொங்கல் இதே கூறுகளைக் கொண்டு, “அக்கார அடிசில்” எனப்பட்டது. அதன் பின்னர்தான் முந்திரி, திராட்சை, ஏலக்காய் சேர்க்கப்பட்டன.

    பொங்கலிடும்போது அரிசியைப் பானையில் இடுதல், அது பொங்குதல், பொங்கி வழியும் திசை, நிறைவு செய்தல் எல்லாமே மங்கல குறியீடாகவே பார்க்கப்படும் மரபு இன்னும் தொடர்கிறது. பொங்கலோடு சிறு கிழங்கு, பனங்கிழங்கு என ஐந்து வகைக் கிழங்குகளும், பூசணி, மொச்சை, புடலை, சுரைக்காய், கத்தரிக்காய் என ஐந்துவகைக் காய்கறிகளும் படைக்கப்படும்.

    பொங்கலுக்கு முன் பூளைப் பூ, பிரண்டை, ஆவாரம் பூ, எருக்கம் பூ கொண்டு காப்புக் கட்டும் வழக்கம் உள்ளது. பொங்கல் பண்டிகையில் பூளைப் பூ முதன்மையிடம் பெறுகிறது. நிகண்டு “பூளை வெற்றிப் பூவாகும் மே” என்று குறிப்பிடுகிறது. “ஏரார் இரும்பூளை இடங்கொண்ட ஈசனே” என்று ஞானசம்பந்தர் தேவாரம் குறிப்பிடுகிறது.

    பொங்கல் விழா தமிழ்நிலத்தில் மரபு வழியாக உழவர்களின் அறுவடை விழாவாக, இயற்கை சக்திகள் தவிர பயிர், தாவரங்களில் குடியிருக்கும், ஆவிகள், சிறு தெய்வங்கள், குல தெய்வங்கள் போன்றவற்றிற்கு நன்றி கூறும் விழாவாக நிலைபெற்றிருக்கிறது. பொங்கல், தமிழ்நாட்டிலும், தமிழர்கள் வாழும் வெளிநாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

    ஆந்திராவில், மகா சங்கராந்தி என்றும் பஞ்சாப், ஹரியானாவில் லோஹ்ரி என்ற பெயரில் கோதுமை அறுவடைத் திருவிழாவாகவும், அசாமில் மாஹ் பிகு, புகுலி பிகு என்ற பெயரில் நெல் அறுவடைத் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

    பாரதிபாலன்
    Next Story
    ×