search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் 2-ந்தேதி நடக்கிறது
    X

    பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் 2-ந்தேதி நடக்கிறது

    65 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் வருகிற 2-ந் தேதி நடக்கிறது.
    பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வேலூர் மாவட்டத்திலே மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் போது தேரோட்டம் நடைபெற்று வந்தது.

    இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு நிதி ஒதுக்கப்படாமல் பராமரிப்பின்றி தேர் சிதைந்து போனதால் சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பு தேரோட்டம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பக்தர்களின் பங்களிப்புடன் ரூ.60 லட்சம் செலவில் புதிய மரத்தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடந்தது.

    இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு அடுத்த மாதம் 8-ந் தேதி வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 2-ந் தேதி நடக்கிறது.



    இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அசோக்குமார் வழிகாட்டுதலின்படி கோவில் வளாகத்தில் நடந்தது. அணைக்கட்டு தாசில்தார் உஷாராணி தலைமை தாங்கினார். வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில் செயல் அலுவலர் குமரன் வரவேற்றார். பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் நிஷாந்த், வருவாய் ஆய்வாளர் தனசேகரன் பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் கவிதா, மின்வாரிய செயற்பொறியாளர் லோகேந்திரன், தீயணைப்பு துறை முதன்மை அலுவலர் சேகரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பிரம்மோற்சவ விழாவுக்கும், 65 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் சித்திரை தேரோட்டத்தையும் காண வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×