search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பூக்களை எடுத்து சென்ற போது எடுத்த படம்.
    X
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பூக்களை எடுத்து சென்ற போது எடுத்த படம்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 2-வது வார பூச்சொரிதல் விழா

    சமயபுரம் மாரியம்மன் கோவில் 2-வது வார பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பூத்தட்டுக்களை சுமந்து வந்து அம்மனுக்கு செலுத்தி வழிபட்டனர்.
    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 12-ந் தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது.

    சமயபுரம் மாரியம்மன் தன்னை நாடி வருவோர் மட்டுமின்றி நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களை காக்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்வித நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல சவுபாக்கியங்களும் கிடைக்க வருடந்தோறும் மாசிமாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பார்.

    இந்த 28 நாட்களும் கோவிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.



    கடந்த 12-ந் தேதி முதல் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. நேற்று 2-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. சமயபுரம் சிறு கடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 29-வது ஆண்டாக அதன் தலைவர் சூறாவளிபிச்சை தலைமையில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் படத்தை வைத்து தேரோடும் வீதி வழியாக எடுத்து வந்தனர். இதில், ஏராளமான பெண்களும், வியாபாரிகளும், பொதுமக்களும் பூத்தட்டுக்களை சுமந்து வந்து அம்மனுக்கு பூக்களை சாத்தினர். இதில் சமயபுரம் மாரியம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் துரை.ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருச்சி பெரியமிளகுபாறை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு பூக்களை எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தென்னரசு மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    பூச்சொரிதல் விழாவையொட்டி திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில், 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் நூற்றுக் கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×