search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தெய்வங்களை பற்றிய அரிய ஆன்மிக தகவல்கள்
    X

    தெய்வங்களை பற்றிய அரிய ஆன்மிக தகவல்கள்

    அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய சில தெய்வங்களின் வழிபாடுகள் பற்றிய அரிய ஆன்மிக தகவல்களை கீழே விரிவாக பார்க்கலாம்.
    நெல்லில் எழுதும் குழந்தைகள் :

    விஜயதசமி நாளில் புருஷோத்தமபாரதிக்கு அம்பிகையின் அருள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அன்று குழந்தைகளுக்கு கல்வியை தொடங்க (வித்தியாபியாசம்) பக்தர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வருகின்றனர். அதாவது பெற்றோர் தங்கள் குழந்தையின் விரலை பிடித்து தட்டில் நிரப்பப்பட்ட நெல்லில் பிள்ளையார் சுழிபோட்டு ‘அ’ என்ற எழுத்தை எழுத வைக்கின்றனர். அதன்பிறகே குழந்தைகளை பள்ளியில் சேர்க்கின்றனர். பள்ளி மாணவர்கள் தாம் தேர்ச்சி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து தம் தேர்வு எண்களை குறித்து வைப்பது உண்டு. மூலவர் சரஸ்வதிக்கு நோட்டு, பேனாவை வைத்து அர்ச்சனை செய்கிறார்கள்.

    கேதுவின் அதிதேவதை :

    நவக்கிரகங்களில் கேது பகவானுக்கு அதிதேவதையாக சித்திரகுப்தன் போற்றப்படுகின்றார். கேது தோஷம் உள்ளவர்கள் தங்கள் நட்சத்திர நாளில் வந்து அர்ச்சனை செய்து கொள்வது சிறப்பு. என்றாலும், பிறந்த கிழமை, பிறந்த நட்சத்திரம் கூடும் நன்னாளில் வந்து அர்ச்சனை செய்து வழிபடுவது கூடுதல் சிறப்பைத் தரும். நீல மலர்கள், பலவண்ண ஆடை, சித்திரகுப்தனுக்கு உகந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

    சாளக்கிராம ஆஞ்சநேயர் :

    ராமபக்தரான அனுமனுக்கு சுசீந்திரம், நாமக்கல், நங்கநல்லூர், தெய்வச்செயல்புரம், குலசேகரன்கோட்டை, பஞ்சவடி என்று பல ஊர்களில் மிக உயரமான சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பல ஊர்களில் தனிக்கோவில்களும் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதே போல் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டிக்கு அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் அமைந்துள்ளதுதான் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில். இந்த ஆலயத்தில் உள்ள மூலவரான ஆஞ்சநேயர் 16 அடி உயரத்தில் கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் காட்சியளிக்கிறார். இந்த சிலை மிகப்பெரிய சாளக்கிராமக் கல்லால் செய்யப்பட்டதாகும்.

    ஐம்படைத் தாலி :

    குழந்தைகள் பிறந்த ஐந்தாம் மாதத்தில், ஐம்படைத் தாலி என்ற அணிகலன் குழந்தைக்கு அணிவிக்கப்படும். காக்கும் கடவுளான திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் ஆகியவற்றின் வடிவாக தங்கம், வெள்ளி, தாமிரம் ஆகிய உலோகங்களில் ஏதாவது ஒன்றைக் கொண்டு, இவை செய்யப்படுகின்றன. இதனை அணிவதால் குழந்தைகளிடம் எந்த தீய சக்திகளும் அண்டாது என்பது நம்பிக்கையாகும்.

    பக்தர்கள் பூஜிக்கும் தலம் :

    காசி, ஸ்ரீசைலம் ஆகிய இரண்டு தலங்களில் மட்டும்தான், ஜோதிர்லிங்கமும், தேவியும் ஒன்றாக தரிசனம் தருகிறார்கள். ஸ்ரீசைலம் கோவில் வில்வ மரங்கள் சூழ, ஸ்ரீசக்கர வடிவமாக உள்ள மலையின் நடுவே அமைந்துள்ளது. ஆதிசேஷனின் தலை அகோபிலத்திலும், உடல் திருப்பதியிலும், வால் ஸ்ரீசைலத்திலும் இருப்பதாக ஐதீகம். காசியைப் போலவே பக்தர்கள், தாங்களாகவே ஸ்ரீசைலத்தில் உள்ள லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபடலாம்.

    14 திவ்ய தேசங்கள் :

    பெருமாளின் பெருமைகளைக் கூறும் 108 திவ்ய தேசங்களில், 14 திவ்யதேசங்கள் ஒரே ஊரில் இருக்கின்றன. இந்தப் பெருமையைப் பெற்ற திருத்தலம் காஞ்சீபுரம் ஆகும். பெரிய காஞ்சீபுரத்தில் திருப்பாடகம், திருநிலாத்திங்கள் துண்டம், திருஊரகம், திருநீரகம், திருக்காக்கரம், திருக்கார்வானம், திருக்கள்வனூர், திருப்பவனவண்ணம், திருப்பரமேச்சுவர விண்ணகரம் ஆகிய கோவில்களும், சின்னக் காஞ்சீபுரத்தில் திருக்கச்சி, திருஅட்டபுயக்கரம், திருத்தன்கா, திருவேளுக்கை, திருவெஃகா ஆகிய தலங்களும் உள்ளன.

    நண்டு வெளியில் வருமா? :


    தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில், வேப்பத்தூர் அருகில் உள்ளது திருந்துதேவன்குடி. இங்குதான் கற்கடேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 42-வது சிவாலயமாக விளங்குகிறது. இக்கோவிலில் இரண்டு அம்பிகை சன்னிதிகள் இருக்கின்றன. இந்தக் கோவிலின் கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தில், இந்திரன் வாளால் வெட்டிய வெட்டுத் தழும்புகளும், சிவலிங்கத்தில் நண்டு நுழைந்து வெளியேறிய துவாரமும் இருக்கின்றன.

    ஆடி அமாவாசையும், பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில், 21 குடம் காராம் பசுப்பாலைக் கொண்டு இங்கிருக்கும் சிவலிங்கத்தை நீராட்டினால், சிவலிங்கத்திலிருந்து நண்டு வெளியில் வந்து காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மகாத்மியத்தில் கூறப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

    ஆணவத்தின் காரணமான நண்டை வெட்ட முயன்ற இந்திரன், வாள் தவறுதலாக சிவலிங்கத்தின் மீது பட்டதும் பதறினான். சிவபெருமான் தோன்றி அவனுக்கு அறிவுரை கூறியதும் வருந்தி திருந்தினான். தேவர்களின் தலைவர் திருந்திய இடம் என்பதால், இந்த தலம் ‘திருத்துதேவன்குடி’ என்றானதாக வரலாற்று காரணம் கூறப்படுகிறது.

    Next Story
    ×