search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நல்லாண்டவர்கள் கோவில் ஆடி வெள்ளி பெருந்திருவிழா இன்று காலை பால்குட விழாவுடன் தொடங்கியது
    X

    நல்லாண்டவர்கள் கோவில் ஆடி வெள்ளி பெருந்திருவிழா இன்று காலை பால்குட விழாவுடன் தொடங்கியது

    மணப்பாறை அருகே நல்லாண்டவர்கள் கோவில் ஆடி வெள்ளி பெருந்திருவிழா இன்று காலை பால்குட விழாவுடன் தொடங்கியது
    மணப்பாறை அருகே திருச்சி சாலையில் கண்ணுடையான்பட்டி ஊராட்சிப் பகுதியில் மான்பூண்டி ஆற்றங்கரையில் நல்லாண்டவர், ஓம்கார விநாயகர், பொந்துபுளி முத்துக்கருப்பண்ணசாமி, சப்தகன்னிமார், சித்தர் என்ற லாடசன்னியாசி, ஏழுகருப்பண்ணசாமி, மதுரை வீரர், பரிகாரர், பேச்சியம்மன், பழங்கால காட்டுமின்னைமரம் ஆகியவற்றை உள்ளடக்கிய நல்லாண்டவர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆடிவெள்ளிப் பெருந்திருவிழா இன்று முதல்நாள் காலை சிறப்பு வழிபாடுகளுடன் தொடங்கியது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு அகத்தியர் குன்றில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு முக்கியசாலைகள் வழியாக நல்லாண்டவர் கோவிலில் அடைந்ததும் 10.30 மணிக்கு நல்லாண்டவருக்கு பாலாபிஷேகம் தொடர்ந்து சிறப்பு வழிபாடு தீபாராதனை நடைபெற்றது.

    22–ந்தேதி 7 ம் நாள் முதல் வெற்றி திருவிழா, 29–ந்தேதி 14 ம் நாள் இரண்டாம் வெள்ளித்திருவிழா, ஆகஸ்ட் 2–ந்தேதி 18 ம் நாள் ஆடிபெருக்குவிழா 5–ந்தேதி 21ம் நாள் மூன்றாம் வெள்ளி திருவிழா, 12–ந்தேதி 28ம் நாள் நான்காம் வெள்ளிப் பெருந்திருவிழா, 9–ந்தேதி வெள்ளி திருவிழா நடைபெறுகின்றது.

    ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மிகச்சிறப்பாக வெகு விமரிசையாக நடைபெறும் நல்லாண்டவர் கோவில் ஆடிவெள்ளிப் பெருந்திருவிழாவில் மணப்பாறை சுற்றுவட்டார ஊர்களில் இருந்தும், தமிழகம் முழுவதுமுள்ள எல்லா மாவட்டங்களில் இருந்தும் குடிபாட்டுக்காரர்களும், பக்தர்களும், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் ஆயிரக் கணக்கான வாகனங்களில் வந்து திருவிழாவில் கலந்து கொண்டு காது குத்துதல், மொட்டை போடுதல், ஆடு, கோழி வெட்டி அனைவருக்கும் உணவு வழங்குதல் என வழிபாட்டில் ஈடுபடுவார்கள்.

    நல்லாண்டவர் கோவில் ஆடி வெள்ளிப்பெருந்திருவிழாவை சிறப்பாக நடத்திட நல்லாண்டவர் கோவில் செயல் அலுவலர் ப.ரமேஷ், கோவில் பரம்பரை அறங்காவலரும், குமாரவாடி, பொய்கைப்பட்டி ஜமீன் தாருமான கே.ஆர்.கே.முத்துவீர லெக்கைய நாயக்கர், கோவில் மணியம் சண்முகம் மற்றும் கோவில் தொடர்புடைய சுற்றுப்பட்டி ஊர்களின் நாட்டாண்மைகள், முக்கிய பிரமுகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    கண்ணுடையான் பட்டி ஊராட்சி சார்பில் பக்தர்கள் வசதிக்கான ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவர் கிருஷ்ண மூர்த்தி, துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் போஸ் என்ற அழகுமலை மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் ஊராட்சி அனைத்து பணியாளர்களும் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×