search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உஹதுப் போரில் நபிகளாருக்கு ஏற்பட்ட காயங்கள்
    X

    உஹதுப் போரில் நபிகளாருக்கு ஏற்பட்ட காயங்கள்

    உத்பா இப்னு அபீ வக்காஸ் என்பவன் நபியவர்களை நோக்கிக் கல்லெறிந்தான். இதனால் நபியவர்கள் கீழே விழுந்து நபிகளாரின் வலது கீழவரிசையில் முன் பல் சேதமடைந்து கீழ் உதடும் காயமடைந்தது.
    உஹுத் போரில் அம்பெறி வீரர்கள் செய்த தவறினால் எதிரிகள் நபிகளாரைச் சூழ்ந்து கொண்டனர். நபிகளாரைத் தாக்கவிடாமல் நபித்தோழர்கள் கடுமையாக எதிரிகளை எதிர்த்துப் போராடினர். நபி(ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த அன்பினால் தங்களையே அர்ப்பணித்து வீர மரணத்தைச் சுவைத்தனர். ஸஅது இப்னு அபீ வக்காஸ், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) ஆகிய இரு தோழர்களுமே மிகுந்த வீரத்துடனும் துணிவுடனும் போரிட்டனர்.

    இதற்கிடையில் நபி முஹம்மது(ஸல்) கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்தி பரவியது. முஸ்லிம்கள் நிலை தடுமாறி, எது முஸ்லிம் படையினர், எது எதிரிப்படையினர் என்று குழம்பிவிட்டவர்களாகத் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளும் நிலை வந்தது. நிலையை அறிந்த நபி முஹம்மது (ஸல்), அவர்களுக்குப் பின்னால் இருந்த அணியிலிருந்து அம்பெறி வீரர்களைப் போர்க்களத்திற்குத் திரும்பி வரும்படி அழைத்தார்கள். ஆனால் அவர்கள் அதைக் கவனிக்கவில்லை. அணிகளுக்கிடையில் பெரும் குழப்பம் நிலவியது எந்த அளவிற்கென்றால் முஸ்லிம்களில் முன்னணிப் படையினர் திரும்பிச் சென்று பின்னணிப் படையினருடன் போரிட்டார்கள்.

    அப்போது அங்கு ஹுதைஃபா(ரலி) அருகிலிருந்த தன் தந்தை யமான்(ரலி) அவர்களை முன்னணிப் படையினரிடம் சிக்கியதைப் பார்த்துவிட்டு, ‘அல்லாஹ்வின் அடியார்களே! இது என் தந்தை, இது என் தந்தை!’ என்று உரக்கக் கூறி தடுக்க முயன்றார்கள். ஆனால் முஸ்லிம் வீரர்களுக்கு அந்தக் கூச்சல் குழப்பத்தில் எதுவும் கேட்கவில்லை, அவரைத் தாக்கிக் கொன்றே விட்டனர். ஆனாலும் முஸ்லிம்களை ஹுதைஃபா மன்னித்ததோடு ‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!’ என்று பெருந்தன்மையாகக் கூறினார்.



    நபி முஹம்மது (ஸல்) கொல்லப்பட்டார்கள் என்ற வதந்தியைக் கேட்டு குழம்பி சோர்வடைந்த முஸ்லிம்களிடம் ‘இறைத்தூதர் இறக்கலாம் ஆனால் இறைவனுக்கு இறப்பில்லை நம் மார்க்கத்திற்காகக் கடைசி வரை போராடுவோம்’ என்று சொல்லப்பட்டதும் முஸ்லிம்கள் குழப்பத்திலிருந்து விடுபட்டவர்களாக முன்னேறினர்.

    உத்பா இப்னு அபீ வக்காஸ் என்பவன் நபியவர்களை நோக்கிக் கல்லெறிந்தான். இதனால் நபியவர்கள் கீழே விழுந்து நபிகளாரின் வலது கீழவரிசையில்  முன் பல் சேதமடைந்து கீழ் உதடும் காயமடைந்தது. எதிரிப் படையைச் சேர்ந்த மற்றவர் நபி(ஸல்) அவர்களின் முகத்தைக் காயப்படுத்தினர். நபிகளாரின் புஜத்திலும் வாளால் ஓங்கி வெட்டப்பட்டது, ஆனால் அவர்களின் கவசம் காத்துக் கொண்டாலும், வலியால் துடித்தார்கள்.

    தல்ஹா (ரலி) எதிரிகளுடன் சண்டையிட்டு நபிகளாரைக் காத்தார்கள். அப்போது அவருக்கும் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்களைத் தாக்க விரைந்த எதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்தவாறே இருந்தது. அதைப் போலவே, நபிகளாரைக் காக்க வேண்டுமென்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.

    நபிகளாரைக் காக்க வேண்டுமென்று அவர்களின் தோழர்களான அபூபக்ர்(ரலி), உமர்(ரலி), அலீ(ரலி) ஆகியோர் அங்கு விரைந்து நபிகளாரைச் சுற்றிப் பாதுகாப்பு அரணாக மாறினர்.

    ஸஹீஹ் புகாரி 3:59:3290, இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×