search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அற்பங்களின் அற்புதங்களைச் சொல்லும் அருள்மறை
    X

    அற்பங்களின் அற்புதங்களைச் சொல்லும் அருள்மறை

    'மெய்யாகவே இந்த குர்ஆன் இறைவனிடமிருந்து ரூஹால் குத்தூஸ் என்னும் ஜிப்ரீல் தான் இறங்கி வைத்தார் என்று நபியே கூறுவீராக' என்பது திருக்குர்ஆன் (16:102) வசனம் ஆகும்.
    'மெய்யாகவே இந்த குர்ஆன் இறைவனிடமிருந்து ரூஹால் குத்தூஸ் என்னும் ஜிப்ரீல் தான் இறங்கி வைத்தார் என்று நபியே கூறுவீராக' என்பது திருக்குர்ஆன் (16:102) வசனம் ஆகும்.

    இந்த வசனத்தின் மூலம் அருள்மறை திருக்குர்ஆன் தனக்குத்தானே ஒரு சாட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டு, எந்தவித முரண்பாடுகளும் இன்றி நிலைத்து நிற்கும் என்பதையும் உண்மைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

    மனிதனின் தோற்றம் பற்றி அருள்மறை கூறும் போது, 'ஆரம்பத்தில் மனிதனை களிமண்ணைக் கொண்டே படைத்தான். பின்னர் ஓர் அற்பத்துளியாகிய இந்திரியத்திலிருந்து அதனுடைய சந்ததியைப் படைக்கின்றான்' (32:7) என்று குறிப்பிடுகிறது.

    அற்ப இந்திரியத்துளியில் இருந்து உலகின் அற்புதமான, அதிசயமான படைப்பினை இறைவன் வெளிக்கொணர்கின்றான்.

    அற்பமான மனிதனின் ஆரம்பத்தைச் சொன்ன அருள்மறை, இன்னும் பல அற்பமான படைப்பினங்கள் குறித்தும் பேசுகிறது. அதுமட்டுமல்ல அவற்றிற்கென தனித்தனி அத்தியாயத்தையே உருவாக்கியுள்ளது.

    அற்பமான கொசுவைப் பற்றிய பதிவில், 'கொசு அல்லது அதைவிட அற்பத்தில் மேலான எதையும் உதாரணமாக கூறுவதற்கு அல்லாஹ் நிச்சயமாக வெட்கப்படமாட்டான். ஆதலால் எவர்கள் உண்மையாக நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் அவ்வுதாரணம் தங்கள் இறைவனால் கூறப்பட்ட உண்மையான உதாரணம் தான் என்று உறுதியாக அறிந்து கொள்வார்கள்' என்று திருக்குர்ஆனில் (2:26) குறிப்பிடப்பட்டுள்ளது.

    தன்னோடு ஒப்பிடும் போது, எதிரி பல மடங்கு பெரிதாய் அமைந்தவன் என்று அறிந்திருந்தும் எந்தவித அச்சமுமின்றி எதிர்கொள்ளும் தைரியத்தை எங்கிருந்து கொசு கற்றுக் கொண்டது?. இந்த போராட்டத்தில் சாவு நிச்சயம் என்று தெரிந்திருந்தும் மீண்டும் மீண்டும் எதிர்த்து போராடும் போர்க்குணத்தை எங்கே அது கற்றுக் கொண்டது?.

    இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக மனிதன் கொசுவுக்கு பயந்து வலைக்குள் பதுங்கி கொள்ளும் அச்சத்தை அது ஏற்படுத்தி இருக்கிறதே!

    உலகில் உயிர் கொல்லி நோய்கள் என்று அறிவிக்கப்பட்டவைகளில் மிக அதிகமானவை கொசுக்களால் தான் பரப்பப்படுகின்றன. இத்தனை ஆச்சரியங்களை உள்ளடக்கிய கொசுவை அற்பமாக எண்ணிக் கொண்டீர்களா?, அதுபற்றி ஆராய வேண்டாமா?. அதை தானே திருக்குர்ஆன் சொல்லிக் கொண்டிருக்கிறது.

    ஒரு பூச்சியின் மூலம் அபாயத்தை அறிவுறுத்தியவன், இன்னொன்றின் மூலம் அருமருந்தை அருளியுள்ளான். அது தான் தேனி.

    தேனீ மூலம் கிடைக்கப்பெறும் தேன், எல்லா வியாதிகளுக்கும் அருமருந்தாய் இருப்பது கண்கூடு,

    'தேனீயே! நீ ஒவ்வொரு பூக்களில் இருந்தும் புசித்து உனது இறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் உன்னுடைய கூட்டுக்குள் ஒடுங்கிச்செய். இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய பானம் தேன் வெளியாகின்றது. அதில் மனிதர்களுக்கு நிவாரணம் உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்திக்க கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது' என்கிறது திருக்குர்ஆன் (16:69).

    தேனீக்களின் வாழ்வியலை ஆராய்ந்தால் மனிதனின் கூட்டுக்குடும்ப தத்துவத்தை ஒத்திருப்பது ஆச்சரியம் அளிக்கும். தலைமைக்கு கட்டுப்படுதல், ஒன்றிணைந்து உழைத்தல், எதிர் காலத்திற்காக சேமித்து வைத்தல், தேன் கூட்டை அழகிய முறையில் பராமரித்தல் போன்றவை மனித பண்பை ஒத்திருக்கும்.

    மலர்களில் இருக்கும் சாதாரண ஒரு திரவத்திற்கும், தேனீக்கள் வயிற்றில் சுரக்கும் தேனிற்கும் எட்ட முடியா உயரங்களில் வித்தியாசங்கள், குணாதிசயங்கள் இருப்பதை சொல்லித் தந்தது இறை மறை. அந்த அற்ப தேனீயில் இருந்து அதிமதுர மருந்தை வெளிக்கொணர்ந்தானே அல்லாஹ், அதனை ஆராய வேண்டாமா?

    'ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளிலும் உங்களுக்கு ஓர் படிப்பினை உண்டு. ரத்தத்திற்கும், சாணத்திற்கும் இடையில் அதன் வயிற்றிலிருந்து பாலை உற்பத்தி செய்து நாம் உங்களுக்கு புகட்டுகிறோம். அது அருந்துபவர்களுக்கு மிக்க இன்பகரமானது' என்கிறது திருக்குர்ஆன் (16:66).

    தாய்ப்பாலுக்கு இணை உலகில் இல்லை. இருந்தும் அதற்குப்பதிலாக ஒன்றை அற்பங்களுக்கு இடையில் தான் படைக்கின்றான். அதனால் அற்பங்களில் சூழ்ந்துள்ள அதிசயங்களை, அற்புதங்களை ஆராய்ந்து பாருங்கள் என்கின்றார் அல்லாஹ்.

    அற்பமான எறும்பையும், அதன் அறிவையும், ஆற்றலையும், அறிவுசால் திறனையும், ஒன்றுபட்டு வாழும் வாழ்வியலையும், பாதுகாப்பு உணர்வையும் அறிந்து கொள்வதற்கென ஒரு அத்தியாயமே அருள்மறையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

    பாலைவனத்தில் வசிக்கும் ஒட்டகம் வடிவமைக்கப்பட்ட விதம், அதன் கண் அமைப்பில் மணற்துகள்கள் படாமல் பாதுகாக்க ஒளி ஊடுருவும் சவ்வுத்திரை, பல நாட்கள் தண்ணீரை வயிற்றில் சேமித்து வைத்து தேவையான போது திரும்பப்பெறும் வகையில் வயிற்றின் அமைப்பு, மணலில் ஊன்றி நடப்பதற்கு ஏதுவாய் கால் குளம்புகள், இப்படி எத்தனையோ அமைப்புகள்.

    அதனால் தான் அல்லாஹ் சொல்கின்றான்: 'நாம் ஒட்டகத்தை எப்படி படைத்திருக்கிறோம் என்பதை நீங்கள் ஆராய வேண்டாமா?' என்று.
    அதுபோல அற்பத்திலும் அற்பமான சிலந்தி பூச்சி பற்றியும் திருக்குர்ஆன் பேசுகிறது. 'வீடுகளில் எல்லாம் மிக்க பலவீனமானது நிச்சயமாக சிலந்திப்பூச்சியின் வீடு தான்' (28:41).

    சிலந்திப்பூச்சியின் வீடு பலவீனமானது தான். ஆனால் அதன் வடிவமைப்பு மிக அற்புதமானது. தன் வாயில் சுரக்கும் ஒரு திரவத்தைக் கொண்டே, தன் வீட்டை அது அமைத்துக்கொள்கிறது. அந்த திரவம் வெளிவந்ததும் கடினப்பட்டு நூலிழையாய் மாறிவிடுகின்றது.

    எளிதில் அறுந்துவிடும் அந்த அற்ப நூலைக் கொண்டு கலைநயம் மிளிரும் ஓவியம் போன்று கட்டங்களிலும், அளவிலும் கொஞ்சமும் மாற்றம் காணாத வீட்டை அமைத்துக் கொள்கிறது என்றால், சிலந்திக்கு அந்த அறிவை கொடுத்தது யார்?

    ஒவ்வொரு சிலந்திக்கும் அதன் முழு எடையைத் தாங்கும் சக்தி கொண்ட தகுதி வாய்ந்த நூலிழையை அமைத்து கொடுத்து, எதிரி வந்தால் அதில் தொங்கி தன்னை காப்பாற்றிக் கொள்ளும் யுக்தியை கொடுத்தவனும் அல்லாஹ் அல்லவா?

    இப்படி எத்தனையோ அற்பங்களின் அதிசயங்கள் பற்றி அருள்மறையில் பல இடங்களில் செய்திகள் பரவி கிடக்கின்றன.
    Next Story
    ×