search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உங்கள் மனைவியை கண்ணியப்படுத்துங்கள்
    X

    உங்கள் மனைவியை கண்ணியப்படுத்துங்கள்

    ‘எந்த முஃமினான கணவனும் தன் மனைவியை கோபப்பட்டு பிரிந்துவிட வேண்டாம். அவளின் ஒரு குணம் உன்னை வெறுப்படையச் செய்தால், மறு குணம் உன்னை திருப்தியுறச் செய்யும்’ என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
    வாழ்க்கைக்கு கணவன்-மனைவி உறவு முக்கியமானது. குடும்பத்திற்கு அடிநாதமாக இருந்து தாங்குபவர்கள் கணவன்-மனைவி தான் என்று கூறலாம். ‘கணவன்-மனைவிக்கு ஆடையாகவும், மனைவி கணவனுக்கு ஆடையாகவும் இருக்கின்றனர்’ என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

    ஆடைகள் மனிதனின் வெட்கத்தலங்களை மறைத்து அவர்களை பாதுகாக்கின்றது. அதுபோல ஒருவருக்கொருவர் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இஸ்லாம் இவ்வாறு குறிப்பிடுகின்றது.

    கதிஜா (ரலி) இறந்து பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. அப்போது மக்கா வெற்றி கொள்ளப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா நகரினுள் நுழைகிறார்கள். அங்கு குழுமியிருக்கிற அனைவரும் நபி அவர்களை தங்கள் வீட்டில் விருந்தினராக தங்குமாறு அன்பு அழைப்பு விடுக்கின்றார்கள்.

    நபி அவர்களோ ‘கதிஜாவின் கப்ருக்கு (கதிஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தின்) அருகே எனக்குக் கூடாரம் அடியுங்கள்’ என்று அறிவிக்கின்றார்கள். பதினான்கு ஆண்டுகள் கடந்த பின்பும் தனது மனைவி கதிஜா அவர்களின்மேல் நபியவர்கள் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்துகிறது இச்சம்பவம்.

    அன்பு, பாசம், நேசம், கருணை, பரிவு, விட்டுக்கொடுத்தல், அரவணைத்து செல்லுதல், குற்றம், குறை காணாது தவிர்த்தல், மனம் விட்டு பேசுதல் இவைகள்தான் கணவன்-மனைவி இடையே நெருக்கத்தையும், மன பிணைப்பையும் ஏற்படுத்தும்.

    கால மாற்றத்தினூடே இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சிறு, சிறு பிரச்சினைகள், கருத்து மாறுபாடுகள் காலப்போக்கில் பெரிய பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறது.

    இதில் கோபம் தான் முக்கிய பங்காற்றுகிறது. எதற்கெல்லாம் கோபப்பட வேண்டும் என்று வரையறை இல்லாமல் சாதாரண விஷயங்களுக்குக் கூட கோபத்தில் வார்த்தைகளை விட்டு மீண்டும் அதை அள்ள முடியாமல் பிரிந்து வாழ்கிறார்கள் பலர்.

    ‘கண்ணியமானவன், சங்கையானவன் மனைவிக்குக் கண்ணியம், சங்கை செய்வான். சாபத்திற்குரியவன் மனைவியை கேவலப்படுத்துவான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். மனைவியை கேவலப்படுத்துபவன் சாபத்திற்கு உரியவன் என்பதே இதன் பொருள்.

    தனது மனைவியை ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் இது. தன் மரணப்படுக்கையில் அபுபக்கர் (ரலி) கூறியது நாம் கனவில்கூட நினைத்து பார்க்க முடியாது.

    அவர்கள் கூறினார்கள் ‘என் மரணத்திற்கு பிறகு என் ஜனாஸாவை (உடலை) என் மனைவி அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) குளிப்பாட்ட வேண்டும்’.

    ‘ஏன்?’ என்று கேட்டார்கள் தோழர்கள்.

    ‘என் இதயத்துடன் நெருக்கமானவள் என் மனைவி. அவள் அதைச்செய்தால் எனக்கு பிடித்தமானதாக இருக்கும்’ என்று பதிலளித்தார்கள்.

    தனது இறுதி சடங்கைக் கூட தனது மனைவி செய்ய வேண்டும் என்று விரும்பும் அளவிற்கு தனது மனைவியை நேசித்தார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.

    ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் தவறுகள் செய்யக் கூடியவர்கள் தாம். ஆணும் பெண்ணும் இதில் விதி விலக்கல்ல. மனைவி தன் கணவனுக்காகவும், அவன் குடும்பத்திற்காகவும் எத்தனையோ நன்மைகளை, தியாகங்களை செய்திருந்தாலும், அவள் அறிந்தோ, அறியாமலோ செய்த சிறு தவறுகளால் கோபப்பட்டு அவசர முடிவுகளை எடுத்து இறுதியில் பிரிவை நோக்குகிறார்கள். மனைவி இத்தனை நாள் தனக்கு செய்த உபகாரங்களை கணவன் கொஞ்சம்கூட நினைத்து பார்ப்பதில்லை.

    ‘எந்த முஃமினான கணவனும் தன் மனைவியை கோபப்பட்டு பிரிந்துவிட வேண்டாம். அவளின் ஒரு குணம் உன்னை வெறுப்படையச் செய்தால், மறு குணம் உன்னை திருப்தியுறச் செய்யும்’ என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

    அன்பும், கருணையும் இருக்கும் இடத்தில் பகைமைக்கும், பிரிவினைக்கும் வேலையில்லை. மனைவி என்பவள் குடும்பத்தை தாங்கும் அஸ்திவாரம். அவள் மீது காட்டப்படும் அன்பும், பரிவும், கண்ணியமும் மனைவி எனும் அஸ்திவாரத்தை பலப்படுத்தும். அது கட்டிடம் எனும் குடும்பத்தை மகிழ்ச்சியிலும், அமைதியிலும் நிலைத்திருக்கச் செய்யும்.
    Next Story
    ×