search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ‘இத்தா’ என்பது காத்திருப்புக் காலம்
    X

    ‘இத்தா’ என்பது காத்திருப்புக் காலம்

    விவாகரத்து காரணமாக திருமண உறவு முறிந்தாலும், கணவன் இறந்து போன காரணத்தால் திருமண உறவு நீங்கினாலும் மனைவி இவ்வாறு (இத்தா) காத்திருக்க வேண்டும்.
    ‘இத்தா’ என்பது காத்திருப்புக் காலம். ‘இத்தா’ என்ற சொல்லுக்கு அகராதியில் கணக்கிடுதல், எண்ணுதல் என்பது பொருள். இஸ்லாமிய வழக்கில் திருமண உறவு நீங்கும்போது ஒரு குறிப்பிட்ட காலம் வரை மனைவி, மறுமணம் செய்து கொள்ளாமல் எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கு ‘இத்தா’ என்பர்.

    விவாகரத்து காரணமாக திருமண உறவு முறிந்தாலும், கணவன் இறந்து போன காரணத்தால் திருமண உறவு நீங்கினாலும் மனைவி இவ்வாறு (இத்தா) காத்திருக்க வேண்டும்.

    கணவனால் மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண், மூன்று மாதவிடாய் காலமும், கணவனை இழந்த கைம்பெண், நான்கு மாதம் பத்து நாட்களும் மறுமணம் செய்து கொள்ளாமல் தம் கணவர் வீட்டில் தங்கி இருப்பதே ‘இத்தா’ எனப்படும்.

    “தலாக் சொல்லப்பட்ட பெண்கள் மூன்று மாத விடாய்கள் ஆகும் வரை தாமாகவே பொறுத்திருக்க வேண்டும்” (2:228) என்றும் “உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணம் அடைந்து விட்டால், அவருடைய அந்த மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் தாமாகக் காத்திருக்க வேண்டும்” (2:234) என்றும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.

    மணவிலக்குச் செய்யப்பட்ட பெண், இத்தா காலம் முடியும் வரை கணவனுடைய வீட்டிலேயே வசிப்பது கட்டாயம் ஆகும். அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கோ, அங்கிருந்து கணவன் அவளை வெளியேற்றுவதற்கோ அனுமதி கிடையாது.

    மணவிலக்கோ அல்லது கணவனின் மரணத்தால் ஏற்படும் பிரிவோ கணவனுடைய வீடு அல்லாத ஓரிடத்தில் வைத்து நடந்தால், சம்பவம் அறிந்த உடனேயே அவள் கணவனின் வீடு செல்வது கட்டாயம் ஆகும்.

    மாதவிடாய் அற்றுப் போன பெண், மணவிலக்குச் செய்யப்பட்டால் மூன்று மாதங்கள் ‘இத்தா’ இருக்க வேண்டும். கருவுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’ காலம், குழந்தை பெற்றெடுக்கும் வரை ஆகும். கணவனை இழந்த கர்ப்பிணிப் பெண்ணின் இத்தா காலமும் குழந்தை பெற்றெடுக்கும் வரையே ஆகும்.

    “உங்கள் பெண்களில் எவர்கள் ‘இனி மாதவிலக்கு வராது’ என்று நம்பிக்கை இழந்து விட்டிருக்கின்றார்களோ அவர் களுடைய விஷயத்தில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால் (நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்) அவர்களுடைய இத்தா காலம் மூன்று மாதங்களாகும். மேலும் எந்தப் பெண்களுக்கு இதுவரை மாத விலக்கு வரவில்லையோ அவர் களுக்கான வழிமுறையும் இதுவே! மேலும் கர்ப்பிணிகளுக்கான இத்தா வரம்பு அவர்கள் குழந்தை பெற்றெடுப் பதுடன் முடிகின்றது” (65:4) என்று திருமறை கூறுகிறது.

    கணவனை இழந்த பெண்களை உடனே மறுமணம் செய்ய அனுமதிக்காமல் இவ்வளவு காலம் காத்திருக்கக் கூறுவது, பெண்களைக் கொடுமைப்படுத்துவதற்கு அல்ல. மாறாக அவர்களுக்கு நன்மை செய்வதற்கே.

    கணவனுடன் வாழ்ந்தவள் அவனது கருவைச் சுமந்திருக்கலாம்; அந்த நிலையில் அவள் இன்னொருவரை மணந்து கொண்டால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும்; இரண்டாம் கணவன் அந்தக் குழந்தை என்னுடைய குழந்தை இல்லை என்று கூறக்கூடும். முதல் கணவனின் குடும்பத்தாரும் அது தம்முடைய குடும்பத்துக் குழந்தை இல்லை என்று சொல்லி விடலாம். தந்தை யார் என்று தெரியாததால் அந்தக் குழந்தை மனரீதியாகப் பாதிக்கப்படும். தந்தையிடம் இருந்து கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்காமல் போய் விடும். இன்னொருவரின் குழந்தையைச் சுமந்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டாள் என்று இரண்டாவது கணவன் நினைத்தால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடும்.

    இத்தகைய காரணங்களால் பெண்களுக்கு நன்மை செய்யும் வகையில் அவர்களின் எதிர்காலம் மகிழ்ச்சியாக அமைவதற்காக, அவர்களது குழந்தையின் வருங்காலப் பாதுகாப்புக்காக இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளான்.

    “தங்களது கருவறைகளில் அல்லாஹ் எதையேனும் படைத்திருப்பானேயானால் அதை மறைப்பது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல” (திருக்குர்ஆன்-2:227) என்பது இறைவன் வாக்கு.

    மணவிலக்கு அளித்த அல்லது இறந்துபோன கணவனின் கரு மனைவியின் வயிற்றில் வளர்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதற்காகவும், மண உறவு அகன்று தான் பிரிந்து வாழ்வதை உறவினர்களுக்கும் அண்டை அயலாருக்கும் மனைவி குறிப்பால் உணர்த்துவதற்காகவும் இவ்வாறு ‘இத்தா’ இருப்பது மனைவியின் கடமையாகும்.

    கணவனை இழந்த பெண் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு ‘அல் இஹ்தாத்’ என்பர். இந்தச் சொல்லுக்கு ‘தடுத்தல்’ என்று அர்த்தம். இறந்தவருக்காகத் துக்கம் கடைப்பிடிப் பதையே மக்கள் வழக்கில் ‘அல் இஹ்தாத்’ என்கிறார்கள்.

    அலங்காரம் செய்து கொள்வது, நறுமணம் பூசிக் கொள்வது, அஞ்சனம் (சுர்மா) இட்டுக் கொள்வது போன்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் செயல்களைக் கைவிடுவதே இஸ்லாமிய வழக்கில் ‘அல் இஹ்தாத்’ எனப்படுகிறது. தாய், தந்தை, சகோதரன், சகோதரி போன்ற நெருங்கிய உறவினர்களின் இறப்புக்காக ஒரு பெண் மூன்று நாட்கள் வரை இவ்வாறு துக்கம் கடைப்பிடிக்கலாம்.

    அதற்கு மேல் கூடாது. ஆனால் கணவனை இழந்த கைம்பெண், கணவன் இறந்தது முதல் அவளது இத்தா காலமான நான்கு மாதம் பத்து நாட்கள் வரை துக்கம் கடைப்பிடிப்பாள். இந்த நாட்களில் அவள் சாதாரண ஆடை அணியலாம். சாதாரண எண்ணெய் தேய்த்து தலை வாரிக் கொள்ளலாம். நறுமணம் இல்லாத பொருட்களை உடலில் தேய்த்துக் குளிக்கலாம். ஆனால் ஆடையில் கூடுதல் அலங்காரம் செய்தல், வாசனை எண்ணெய் தேய்த்தல், உடையிலோ உடலிலோ நறுமணம் பூசிக்கொள்ளுதல், கண்ணுக்கு அஞ்சனம் தீட்டுதல், மறுமணம் நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடத்துதல் ஆகியவற்றைத் தவிர்த்திட வேண்டும்.
    Next Story
    ×