search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மணப்பாறை அருகே மலையடிப்பட்டியில் உள்ள புனித தோமையார் ஆலய தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.
    X
    மணப்பாறை அருகே மலையடிப்பட்டியில் உள்ள புனித தோமையார் ஆலய தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

    மலையடிப்பட்டி தோமையார் ஆலய தேரோட்டம்

    மணப்பாறை அருகே உள்ள மலையடிப்பட்டி புனித தோமையார் ஆலய தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில், பழமை வாய்ந்த புனித தோமையார் ஆலயம் உள்ளது. மலைமீது அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாஸ்கா திருவிழா நடைபெறும். அதேபோல இந்த ஆண்டும் கடந்த 22-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் பாஸ்கா திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த 25-ந் தேதி ஆண்டவர் ஏசுவின் பாடுகளை சித்தரிக்கும் வகையில் தூம்பா பவனியும், 26-ந் தேதி ஆண்டவர் ஏசுவின் உயிர்ப்பு பெருவிழா மற்றும் ரத பவனி நடைபெற்றது.

    இதன்தொடர்ச்சியாக நேற்று முன்தினம் நள்ளிரவு தூய தோமையார் சொரூபம் தோமையார் மலையில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டு மலையடிப்பட்டி நடு வீதியில் உயிர்த்த ஆண்டவர், தூய தோமையார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

    கோவில் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் உயிர்த்த ஆண்டவர் ஏசு மற்றும் தோமையார் சொரூபங்கள் வைக்கப்பட்டு தேர் மந்திரிக்கப்பட்டது. பின்னர், திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மலையடிப்பட்டி கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர், மீண்டும் நிலையை வந்தடைந்தது.

    வையம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×