search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ‘பாகுபலி-2’ படத்திற்கு தடைகோரி மீண்டும் ஒரு வழக்கு
    X

    ‘பாகுபலி-2’ படத்திற்கு தடைகோரி மீண்டும் ஒரு வழக்கு

    பாகுபலி-2 படத்தை திரையிடும் உரிமையை முடக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு, அந்த படத்தின் வெளியீட்டாளர் பதிலளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
    சென்னை ஐகோர்ட்டில், அண்ணாநகரை சேர்ந்த எஸ்.கார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ‘கே புரொடக்‌ஷன்ஸ்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.என்.ராஜராஜன். இவர், ‘சவாலே சமாளி’ என்ற திரைப்படத்தை தயாரிக்க 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பல தவணைகளில் என்னிடம் ரூ.1 கோடியே 11 லட்சத்தை கடனாக பெற்றார். அந்த திரைப்படம் தோல்வியடைந்ததால், இந்த கடனை அவரால் தர முடியவில்லை. நானும் அந்த கடனை திருப்பி கேட்கவில்லை.

    இந்த சூழ்நிலையில், நடிகர் சத்யராஜ், பிரபாஸ், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பாகுபலி-2’ என்ற திரைப்படத்தின் (இந்தி மொழி தவிர) தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளின் வெளியிடும் உரிமை, வெளிநாடுகளில் திரையிடும் உரிமை, ‘சேட்டிலைட்’ உரிமை உள்ளிட்ட உரிமைகளை ராஜராஜன் பெற்றுள்ளார்.

    இதையடுத்து நான் கொடுத்த கடன் தொகையை வட்டியுடன் ரூ.1.48 கோடி கேட்டபோது, அவர் காசோலை வழங்கினார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, அவரது வங்கி கணக்கு முடிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.



    இதையடுத்து அவருக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினேன். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. எனவே, எனக்கு தரவேண்டிய ரூ.1.48 கோடிக்கு, சொத்து உத்தரவாதத்தை வழங்க ராஜராஜனுக்கு உத்தரவிடவேண்டும். இந்த உத்தரவாதத்தை தர அவர் தவறினால், ‘பாகுபலி-2’ படத்தின் அனைத்து உரிமைகளையும், முடக்கம் செய்து உத்தரவிடவேண்டும்.

    அதேபோல, அவர் தயாரித்து விரைவில் வெளியில் வர உள்ள ‘மடை திறந்து’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘ஸ்நோ டைம்’ உள்ளிட்ட படங்களையும் வெளியிட தடைவிதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் பி.ராஜா ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி ‘கே புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் ராஜராஜனுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
    Next Story
    ×