search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஏப்.2-ந் தேதி ரசிகர் மன்ற கூட்டம் எதற்கு? : ரகசியத்தை போட்டு உடைத்த ரஜினி
    X

    ஏப்.2-ந் தேதி ரசிகர் மன்ற கூட்டம் எதற்கு? : ரகசியத்தை போட்டு உடைத்த ரஜினி

    ஏப்ரல் 2-ந் தேதி சென்னையில் ரஜினி ரசிகர் மன்றம் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இது எதற்காக என்பதற்கான காரணத்தை ரஜினி தெரிவித்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    உலகம் முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ரசிகர்கள் ஏராளமாக இருப்பது நாம் அறிந்ததே. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் ரஜினிகாந்துக்கு பயங்கரமான ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ரஜினியின் ‘கபாலி’ படம் மலேசியாவில் நடைபெற்ற போது, அங்கு தங்கியிருந்த ஹோட்டல், படப்பிடிப்பு நடந்த இடங்கள் என ரசிகர்கள் அவரை சூழ்ந்து இருந்தனர்.

    இது ஒருபுறம் இருக்க மலேசியாவின் பிரமரான நஜீப் ரஸாக் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஜினியின் தீவிர ரசிகர்களாம். இந்நிலையில், இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருகை தரும் மலேசியா பிரதமர் நஜீப் ரஸாக், பிரதமர் மோடியை சந்திப்பதற்கு முன் ரஜினியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தது.



    அதன்படி, இன்று சென்னை வந்த மலேசியா பிரதமர் நஜீப் ரஸாக், ரஜினியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். அப்போது, இருவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர். பின்னர், ரஜினி செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘கபாலி’ படப்பிடிப்பின்போது மலேசிய அரசு நல்ல ஒத்துழைப்பு வழங்கியது. அதனடிப்படையில், என்னுடைய அழைப்பை ஏற்று என்னை சந்திக்க வந்த மலேசியா பிரதமருக்கு நன்றி. மலாக்கா நகரின் சுற்றுலா தூதராக என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் செய்திகள் அனைத்தும் வதந்திதான்.



    ரசிகர்கள் மன்ற கூட்டம் கூடுவது அரசியல் பிரவேசத்திற்கான முதல் அடி என்று கூறுவதெல்லாம் பொய்யானது. ரசிகர்களுடன் நான் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 16 வரை நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் நான் கலந்துகொள்ளவிருக்கிறேன். அதற்காகத்தான் ஏப்ரல் 2-ந் தேதி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறவிருக்கிறது. ‘2.ஓ’ படத்தில் என்னுடைய பகுதிகளுக்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றனர். வரும் தீபாவளிக்கு படம் வெளிவரும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×