search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தொழில் தெரியாத டைரக்டர்கள் படங்களை இயக்க தடை: ஆர்.கே.செல்வமணி பேட்டி
    X

    தொழில் தெரியாத டைரக்டர்கள் படங்களை இயக்க தடை: ஆர்.கே.செல்வமணி பேட்டி

    தொழில் தெரியாத இயக்குனர் உள்ளிட்டோரை வைத்து தயாரிப்பாளர்கள் படங்களை தயாரிக்க கூடாது என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறினார்.
    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன(பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    “தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் 50-வது ஆண்டு பொன் விழாவையும் தமிழ் திரைப்பட நூற்றாண்டு விழாவையும் விரைவில் கொண்டாட இருக்கிறோம். இந்த விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். முன்பெல்லாம் வெற்றி படங்கள் தோல்வி படங்கள் என்று இருந்த சினிமாவில் இப்போது குப்பை படங்கள் அதிகம் வருவதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளது.

    திரைப்பட துறையில் அனுபவம் இல்லாதவர்களும் தொழில் தெரியாதவர்களும் படங்கள் எடுப்பதால்தான் இதுபோன்ற ஒழுங்கீனங்கள் ஏற்பட்டு குப்பை படங்கள் வருகின்றன. சம்பளம் வேண்டாம் என்று சொல்லும் திரைப்பட தொழிலாளர் சங்கங்களில் உறுப்பினர்களாக இல்லாத இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்களை வைத்து படங்கள் எடுப்பதாலேயே இந்த தவறுகள் நடக்கின்றன.

    இனிமேல் தொழில் தெரியாதவர்களை வைத்து படங்கள் தயாரிக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம். பெப்சியில் டைரக்டர் சங்கம் உள்பட 23 திரைப்பட தொழிலாளர்கள் சங்கங்கள் உள்ளன. டைரக்டர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத இயக்குனர்கள் எடுத்த 25 படங்கள் சமீப காலங்களில் வெளியாகி இருக்கிறது.



    ஏப்ரல் 15-ந்தேதி முதல் பெப்சியில் உறுப்பினராக இருக்கிறவர்கள் எடுக்கும் படங்களில் மட்டுமே திரைப்பட தொழிலாளர்கள் பணியாற்றுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் குப்பை படங்கள் வரத்து தவிர்க்கப்படும்.

    தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் தமிழ் நாட்டில்தான் நடத்தப்பட வேண்டும். அரசு இங்கு படப்பிடிப்புகளை நடத்துவதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். தமிழ் படங்களில் நடிக்கும் மும்பை கதாநாயகிகள் உதவிக்கு 5 பேரை தங்களுடன் அழைத்து வருகிறார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கு அதிகம் செலவு ஆகிறது. இங்குள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரமும் பாதிக்கிறது.

    இனிமேல் தமிழ் படங்களில் நடிக்கும் கதாநாயகிகள் ஒப்பனை உள்ளிட்ட பணிகளுக்கு தமிழ் திரைப்பட தொழிலாளர்களைத்தான் பயன்படுத்த வேண்டும். பெப்சியில் இருக்கும் சங்கங்கள் கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்து பணத்தை விரயம் செய்யாது. தயாரிப்பாளர்களிடம் இணக்கமாக செயல்படுவோம். பையனூரில் அரசு ஒதுக்கிய இடத்தில் விரைவில் திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டப்படும்.

    இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.

    பேட்டியின்போது பெப்சி பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் சாமிநாதன், துணைத்தலைவர்கள் ஸ்ரீதர், ஸ்ரீபிரியா, இணை செயலாளர்கள் தனபால், ராஜா, சபரிகிரிசன், செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×