search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    திரைஉலகினர் ஆதரவு பெருகுகிறது: சென்னையில் நடந்த போராட்டத்தில் லாரன்ஸ், சிவகார்த்திகேயன் பங்கேற்பு
    X

    திரைஉலகினர் ஆதரவு பெருகுகிறது: சென்னையில் நடந்த போராட்டத்தில் லாரன்ஸ், சிவகார்த்திகேயன் பங்கேற்பு

    ஜல்லிக்கட்டுக்கு ஆதராக திரைஉலகினரின் ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக லாரன்ஸ், சிவகார்திகேயன் என பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் களம் இறங்கி உள்ளனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு கமல், ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு, விஷால், தனுஷ் உள்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். திரை உலகம் சார்பில் ஆதரவு தெரிவிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தில் இயக்குனர்கள் கவுதமன், அமீர், நடிகர்கள் ஆர்யா, ஆரி, இசை அமைப்பாளர்கள் யுவன்சங்கர்ராஜா, ஹிப்ஹாப் தமிழா ஆகியோர் பங்கேற்றனர். சேலத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் நடிகர், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டார்.

    சென்னையில் பங்கேற்பு

    சென்னை மெரீனா கடற்கரையிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று தொடங்கி விடிய விடிய நடந்த போராட்டம் இன்றும் தொடர்கிறது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும், பெரும்பாலான நடிகர்கள் நேரடியாக கலந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கம் ரசிகர்களிடம் இருந்து வந்தது. இந்த நிலையில் நடிகர்களும் நேரில் வந்து ஆதரவு தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.

    சென்னை மெரீனாவில் நடைபெறும் போராட்டத்தில் நடிகர்கள் ராகவாலாரன்ஸ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நேரில் பங்கேற்றனர். மன்சூர் அலிகான் குடும்பத்துடன் கலந்து கொண்டார். அவர்களும் இளைஞர்களுடன் தரையில் உட்கார்ந்து கோரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

    அண்ணா நகர் கந்தசாமி கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் லிவிங்ஸ்டன் கலந்து கொண்டார். இது போல் மற்ற நடிகர்- நடிகைகளும் போராட்டத்துக்கு நேரில் வந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, முக்கிய நடிகர், நடிகைகள், கலை உலகினர் நேரில் வந்து ஆதரவு தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடந்த போராட்டத்தின் போது, சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தினார்கள். பலர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மேற்கத்திய கலாச்சார விளையாட்டுக்கள் நம் மக்களின் பொழுது போக்குக்கு மட்டுமே சிறந்தது. ஆனால் நம் ஜல்லிக்கட்டு என்பது ஆண்மைக்கும், வீரத்துக்கும் உரியதானது. ஆண்டு முழுவதும் தங்களது செல்ல குழந்தைகளாக கருதப்படும் காளைகளை ஜல்லிக்கட்டிற்காக மூன்றே நாள் தான் விளையாட வைக்கிறார்கள்.

    ஆனால் நாள் முழுவதும் எத்தனை லட்சம் உயிர்கள் நம் உணவுக்காகவும், உடைகளுக்காகவும், தோலுக்காகவும் கொல்லப்படுகிறது. ஜல்லிக்கட்டிற்காக மூன்றே நாட்கள் பயன்படுத்தப்படும் காளைகள் வதை செய்யப்படுகிறது என்றால், உணவுக்காகவும், தோலுக்காகவும், உடைக்காகவும் கொல்லப்படும் விலங்குகள் என்ன தாங்களாகவே தங்கள் தலையை நீட்டி கொல்லப்படுவதை வரவேற்கின்றனவா?

    வீர விளையாட்டுக்கு மிருகவதை என்று பெயராம். வியாபாரத்திற்கு அன்னிய செலாவனி என்று பெயராம். கடந்த சில நாட்களாக சகோதரர், சகோதரிகள் ரோட்டில் நின்று போராடுகிறார்கள். அதற்காக அடித்து உதைத்து துன்புறுத்துவதா? மாடுகளை துன்புறுத்துகிறோம் என்று தடை செய்து விட்டு மனிதர்களை அடித்து துரத்தி துன்புறுத்துவது என்ன நியாயம்? தமிழன் போராடுவது எதற்காக? தாங்கள் வீரன் என சொல்லப்படுவதற்காக... ஜல்லிக்கட்டு வேண்டி போராடுபவர்களை முடக்கி கோழைகளாக்க வேண்டாம்.

    தயவு செய்து மாநில அரசும், மத்திய அரசும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கம்பீரத்துக்கும், அழகுக்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள், நாட்டுப் புற மாடுகள், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் போல் அன்புகாட்டி அவற்றை வளர்த்து வருகிறார்கள்.

    ஸ்பெயினில் மாடு பிடிப்பதென்பது, விளையாட்டின் இறுதியில், மாட்டின் முதுகில் கத்திகளைச்சொருகி, அந்த மாடு கீழே விழுந்து இறந்த பின், அதை எடுத்துச் சென்று உணவாக்குவது. தமிழ்நாட்டில் மாட்டை அப்படி யாராவது கொல்வதைப் பார்த்திருக்கிறீர்களா?

    லட்சக்கணக்கான மாடுகளை, ஈவு இரக்கமின்றி கொன்று, அதன் இறைச்சிகளை, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில், இந்தியா முதலிடம் வகிக்கிறது என்பது, ‘கோமாதா நம் குல மாதா’என்று பசுவைக் கும்பிடும் பா.ஜ.க.அரசுக்கு தெரியாதா? பசு வதைத் தடைச்சட்டம் இதற்குப் பொருந்தாதா? சீறும் சிங்கங்களாக தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எழுச்சியுடன் போராடுகிறார்கள்... மக்கள் நலனுக்காகவே சட்டம். நீதிமன்றம் இதைப் புரிந்து கொண்டு ஜல்லிக்கட்டு தடைச்சட்டத்தை உடனே நீக்க
    வேண்டும். இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.

    Next Story
    ×