search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பை ஆதரித்த மோகன்லாலுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
    X

    1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பை ஆதரித்த மோகன்லாலுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்

    1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பை ஆதரித்த நடிகர் மோகன்லாலுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
    பிரதமர் நரேந்திர மோடி கருப்பு பணத்தை ஒழிக்க 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை மலையாள நடிகர் மோகன்லால் வரவேற்றார். தேச நலனுக்காக எடுக்கப்பட்ட நல்ல முடிவு என்றும் இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் மக்கள் கியூவில் நிற்கிறார்கள் என்று விமர்சிக்கப்படுவதை அவர் கண்டித்தார். மதுபான கடைகள், கோவில்கள் போன்றவற்றில் கியூவில்தானே நிற்கிறார்கள் என்று அவர் கூறினார்.

    மோகன்லால் கருத்துக்கு கேரள அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கேரள கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவரான பன்யன் ரவீந்திரன் திருவனந்தபுரத்தில் பழைய ரூபாய் நோட்டுகள் ஒழிப்பை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    “1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டதை மோகன்லால் ஆதரித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. மோகன்லால் நடித்த அனைத்து படங்களையும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான் வெற்றி பெற வைக்கிறார்கள். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை உங்கள் படங்களை பார்ப்பதற்கு செலவிடுகிறார்கள். அந்த மக்கள் மோடியின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை அவமதிப்பதுபோல் பேச வேண்டாம்.”

    இவ்வாறு அவர் கூறினார்.

    இடுக்கி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கேரள மந்திரி மணி பேசும்போது, “மோகன்லாலுக்கு நரேந்திர மோடி மீது திடீர் காதல் பிறந்து இருக்கிறது. இதற்கு காரணம் அவரிடம் இருக்கும் கருப்பு பணம்தான். கருப்பு பணத்தை பாதுகாக்கவே மோடியை அவர் ஆதரிக்கிறார்” என்று கூறினார்.

    கேரள காங்கிரஸ் துணைத்தலைவர் சதீசன் கூறும்போது, “மோகன்லால் சாதாரண அடித்தட்டு மக்களின் பாதிப்பை உணராமல் பேசுகிறார். மோடி நடவடிக்கையால் நடுத்தர மக்கள் மிகுந்த கஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர்” என்றார்.
    Next Story
    ×